தமிழில் சிறு பத்திரிகைகள்/சதங்கை

விக்கிமூலம் இலிருந்து

16.சதங்கை


நாகர்கோவில் வனமாலிகை 1971 நவம்பரில் ‘சதங்கை' என்ற பெயரில் ஒரு இலக்கியப் பத்திரிகையை ஆரம்பித்தார்.

வனமாலிகை தனது படைப்புத் திறமையை வளப்படுத்திக் கொள்வதற்காகவோ, எழுத்து அரிப்பை அவ்வப்போது தீர்த்துக் கொள்வதற்காகவோ அல்லது அவர் ஒரு இலக்கியப் பத்திரிகையின் ஆசிரியர் என்று பெருமையாகப் பேசிக் கொள்வதற்காகவோ 'சதங்கை' மாதப் பத்திரிகையை நடத்தவில்லை.

தரமான இலக்கியப் பத்திரிகை ஒன்றைத் தமிழ்நாட்டின் கோடியான குமரி மாவட்டத்திலிருந்து வெற்றிகரமாக நடத்த வேண்டும் என்பதுதான் அவருடைய ஆசை. நல்ல இலக்கியப் பத்திரிகையின் மூலம் தரமான வாசகர்களை ஊக்குவிப்பது அவருடைய நோக்கம்.

அதனாலேயே, ‘சதங்கை - இலட்சிய வாசகர்களின் வழிகாட்டி' என்று பல வருடங்கள் அந்தப் பத்திரிகையில் பொறிக்கப்பட்டு வந்தது. பின்னர் அது இலக்கிய வாசகனின் நண்பன் என்று மாற்றப்பட்டது.

‘சதங்கை இலக்கிய வட்டத்திற்காக, வெளியிடுபவர்- ஆசிரியர் வனமாலிகை' என்ற அறிவிப்பு பத்திரிகையில் வெகுகாலம் வரை நிலைபெற்றிருந்தது.

‘சதங்கை' விகடன் அளவில், ஆரம்ப காலத்தில், 48 அல்லது 56 பக்கங்கள் கொண்டிருந்தது. பிறகு காகித விலை உயர்வு, பொருளாதார நெருக்கடி காரணமாக, பக்கங்கள் குறையலாயிற்று. மாதப் பத்திரிகை முதல் இரண்டு வருடங்கள், ஒவ்வொரு மாத முதல் வாரத்திலும் வெளிவந்தது. பின்னர் கால தாமதமும், சில மாதங்களுக்கு (மூன்று அல்லது நான்கு மாதங்களுக்கு) ஒரு இதழ் என்று வெளிவருவதும் தவிர்க்க இயலாத நிலை ஆயிற்று. அப்புறம், வராமலே நீண்ட காலம் தூங்கிப்போவதும், சதங்கை நின்று விட்டது என்று வாசகர்கள் முடிவு கட்டிவிட்ட நிலையில், திடீரென்று அது புத்துயிர் பெற்று மிக மெலிந்த தன்மையில் வெளிவருவதும் சகஜமாயிற்று.

ஆரம்ப வருடங்களில், 'சதங்கை' விசேஷமான அட்டை பெற்றிருந்தது. கலைச் சிலைகளின் போட்டோக்கள் வசீகரமாக அச்சிடப் பெற்றிருந்தன. பிறகு மாடர்ன் ஓவியங்கள் வந்தன. வர வர, சாதாத் தாளில் எழுத்தாளர்களது பெயர்கள் அச்சிடப்பட்டன. சில சமயம் பத்தே பத்துப் பக்கங்கள்-ஒரே ஒரு கட்டுரை அல்லது கதை, இரண்டு கவிதைகள்-தாங்கி இதழ் வந்தது.

இதெல்லாம் பத்திரிகை நடத்துவதில் வனமாலிகை எதிர்கொள்ள நேர்ந்த சிரமங்களைப் புலப்படுத்தின. அத்துடன், எப்படியும் ‘சதங்கை'யை நடத்தியே தீர்வது என்ற அவருடைய மன உறுதியையும், விடாப்பிடியான முயற்சியையும் வெளிப்படுத்தின.

வனமாலிகை, தரமான தமிழ் வாசகர்களிடம் நம்பிக்கையும் பெரு மதிப்பும் கொண்டவர் என்பதை ‘சதங்கை'யின் பல வருட இதழ்கள் நிரூபிக்கின்றன. எழுத்தாளர்களையும் பெயர் பெற்ற படைப்பாளிகளையும் பேட்டி கண்டு, அவர்களது கருத்துக்களுக்கு முக்கியத்துவம் அளிப்பதே சம்பிரதாயமாக இருந்து வருகிற இலக்கியப் பத்திரிகை உலகத்தில், வனமாலிகை தரமான வாசகர்களைப் பேட்டி கண்டு, அவர்களது அபிப்பிராயங்களை விரிவாகப் பிரசுரித்தார். தனித் தன்மை கொண்ட இந்தப் பகுதி சதங்கையில் முதல் வருடத்தில் தொடர்ந்து இடம் பெற்றது. ‘வாசகர் பேட்டி' நாலைந்து பக்கங்கள் வரை வந்துள்ளது.

‘கருத்து மேடை' என்ற பகுதியும் குறிப்பிடத் தகுந்தது. ஐந்தாறு பேர் ( முக்கியமாக வாசகர்கள் ) கூடி குறிப்பிட்ட ஒரு எழுத்தாளரின் படைப்புகள் பற்றி சர்ச்சிப்பது. இரண்டாவது இதழில் ஜெயகாந்தன் கதைகளை அலசி ஆராய்ந்த உரையாடல் வந்துள்ளது.

இந்த நல்ல பகுதி அடிக்கடியோ, தொடர்ந்தோ இடம் பெறாமல் போனது ஒரு குறைதான்.

வாசகர்கள் 'சதங்கை' யின் குறை- நிறைகள் பற்றி மனம் திறந்து கடிதங்கள் எழுதியிருக்கிறார்கள். அவை விரிவாகவே பிரசுரிக்கப்பட்டுள்ளன.

வனமாலிகை பத்திரிகாசிரியத்தனம் பண்ணுவதில் ஆர்வம் காட்டவில்லை. எங்கள் பத்திரிகைக்கு எவர் எதை எழுதி அனுப்பினாலும் கூட்டவோ குறைக்கவோ வெட்டவோ திருத்தி மாற்றவோ உரிமை உண்டு என்று மிடுக்காக ஆசிரிய அறிவிப்பு கொடுப்பதே சம்பிரதாயமாக இருக்கிற பத்திரிகை உலகத்தில்-

‘கதை, கட்டுரை, கவிதை இத்யாதியில் நான் கத்திரி போடமாட்டேன். அனுப்பி வைப்பதை முழுசாக வெளியிடுவேன். ரொம்பவும் இக்கட்டு என்றால் முழுசாக வாபஸ் பண்ணுவேன். எடிட்டிங் சமாசாரங்கள் எல்லாம் எனக்கு அவ்வளவாகப் பிடிக்காது- தெரியாது என்று சதங்கை ஆசிரியர் அறிவித்தார். இது மிகவும் தனித்தன்மையான ஒரு போக்குதான்.

இதைப் பயன்படுத்திக்கொண்டு, சில எழுத்தாளர்கள் விமர்சனம் என்ற பெயரில், படைப்புகளை விட்டு விட்டு படைப்பாளிகளைத் தாக்கி எழுதவும்- 'விமர்சன சுதந்திரம்' பற்றிப் பேசவும் முற்படவே-அவர் 'எடிட் செய்வேன்’ என்று அறிவிக்க வேண்டிய கட்டாயத்துக்கு உள்ளானார்!

அவருடைய தீர்மானத்தை வரவேற்றும் பாராட்டியும் 'இதை நீங்கள் முன்பே செய்திருக்க வேண்டும்' என்று குறிப்பிட்டும், பல இடங்களிலிருந்தும் வாசகர்கள் எழுதியிருக்கிறார்கள்

ஒரு பத்திரிகைக்கு இலக்கியத் தரம் ஏற்படுவதும் இலக்கியப் பத்திரிகையின் தரம் உயர்வதும், அதில் எழுதுகிற எழுத்தாளர்களைப் பொறுத்தும், பிரசுரமாகிற படைப்புகளின் தன்மையைப் பொறுத்தும் அமையும்.

நாகர்கோவில், திருவனந்தபுரம் எழுத்தாளர்களின் ஒத்துழைப்பு ‘சதங்கைக்கு' நிறையவே இருந்தது. தமிழ்நாட்டின் இளைய எழுத்தாளர்கள் பலரும் உற்சாகமாகச் சதங்கைக்கு எழுதியிருக்கிறார்கள்.

ஆகவே, வனமாலிகை, ஐந்தாவது ஆண்டின் முதலாவது இதழில் சரியாகவே தெரிவித்திருக்கிறார்-

'தமிழ் இலக்கியத்தை சதங்கை தாங்குவதாகத் தம்பட்டம் அடித்துக் கொள்ளவில்லை. பசுமையோ வறட்சியோ இருந்தால் அது படைப்பாளிகளின் பக்கமே நீங்கள் விரலை நீட்டவேண்டும். ஆகவே, சாதித்தவைகளைப் பற்றிப் பேச்சில்லை.

‘வரும் ஆண்டுகளில் கணிசமான அளவுக்குச் சாதனைகள் புரிய சதங்கை குடும்பம் ஒத்துழைக்க வேண்டும், மாறுபட்ட கருத்துக்களுக்கும் மதிப்புக் கொடுத்து வெளியிடுகிறோம்- அது தரமாக இருப்பதால், இலக்கிய தர்மத்தை மீறாத இலக்கிய சர்ச்சைகளைக்கொண்ட கட்டுரைகளை வரவேற்கிறேன்'.

இலக்கிய சம்பந்தமான அபிப்பிராயங்களையும் எதிரான கருத்துக்களையும் வெளியிட்ட பல கட்டுரைகள் சதங்கையில் வெளிவந்துள்ளன. அவ்வக் காலங்களில் பிரகரமான சில சில புத்தகங்களைப் பற்றிய சிலரது விமர்சனங்கள் பிரகரமாகியிருக்கின்றன.

பல ரகமான கதைகள்- சோதனை முயற்சிகளும்கூட வெளி வந்துள்ளன.

ஆரம்ப வருடங்களில் மரபுக் கவிதைகளே இடம் பெற்றன. பிறகு புதுக் கவிதைகள் மட்டுமே சதங்கையில் பிரசுரமாயின.

‘சதங்கை' அவ்வப்போது சிறிய அளவில் ( தீபாவளி மலர் என்றோ, பொங்கல் மலர் என்றோ) விசேஷ மலர் தயாரித்துள்ளது. தரமான கதைகள், கட்டுரைகள், கவிதைகளை வெளியிட்டிருக்கிறது.

கிருஷ்ணன் நம்பி ஒன்றிரண்டு கதைகள் எழுதினார். கிளிப் பண்டிதரின் குறிப்புகள் என்று அக்கப்போர் பண்ணினார். 1976 ஜூன் மாதம் அவர் அகால மரணமடைந்தார்.

1976 ஆகஸ்ட் 'சதங்கை' கிருஷ்ணன் நம்பி நினைவு மலராக வந்தது. 14 பக்கங்களில், 'நம்பி எனும் நண்பர்' என்று வனமாலிகை ஒன்றரைப் பக்கம் எழுதியிருந்தார். நம்பியின் 'இரண்டு முன்னுரைகள்_-மறு பிரசுரம். 'கிருஷ்ணன் நம்பியின் கதைகள்' பற்றி நகுலன் எழுதிய பக்கக் கட்டுரை.

வேறு எந்தப் படைப்பாளி பற்றியும் 'சதங்கை' மலர் தயாரித்ததில்லை, அதன் பல வருட ஆயுளில்.

‘சதங்கை' 1982 வரை வந்து கொண்டுதான் இருந்தது. 1971-ல் தோன்றிய பத்திரிகையின் 75 வது இதழ் 1982 செப்டம்பரில் வரவிருக்கிறது- சிறப்பு மலராக என்று அறிவிக்கப்பட்டது.

சதங்கை வாசகர்களின் அபிப்பிராயங்கள் 'எதிர்வினை' என்ற தலைப்பிலும், ஆசிரியர் அறிவிப்பு 'பாலம்' என்றும் பிரசுரமாயின.

பத்து வருடக் காலமாக நடந்து வந்த சதங்கை காலம் தவறாது ( இடையில் நின்று நின்று போகாமலும் ) மாதம்தோறும் வந்திருந்தால்-இலக்கியவாதிகளின் ஆதரவும் ஒத்துழைப்பும் இன்னும் தீவிரமாகவும் முழு மனசோடும் அதற்குக் கிடைத்திருந்தால்- அதன் சாதனைகள் சிறப்பாக அமைந்திருக்கக்கூடும். புதிய எழுத்தாளர்களிடையே அது பலனுள்ள தாக்கம் ஏற்படுத்தியிருக்கவும் கூடும். அதன் எழுபத்தைந்தாவது இதழ் வெளிவரவேயில்லை.