உள்ளடக்கத்துக்குச் செல்

திருக்குறள் மணக்குடவருரை/புலான்மறுத்தல்

விக்கிமூலம் இலிருந்து

௧௯-வது.-புலான் மறுத்தல்.

புலால் மறுத்தலாவது, (புலால் தின்றால் அருளில்லையா மென்பதனால்) புலாலை விடுகை. [புலால் கொலையால் வருதலானும், புலாலுண்ணல் கொலைக்கு ஏதுவாகலானும், இல்லதிகாரம் கொல்லாமைபின் பின் கூறப்பட்டது.]

ண்ணாமை வேண்டும் புலாலைப் பிறிதொன்றின்
புண்ண துணர்வார்ப் பெறின்.

இ-ள்:- புலாலை உண்ணாமை வேண்டும்- புலாலை உண்ணாமை வேண்டும்; உணர்வார் பெறின்-(அதன் உண்மைத் தன்மையைக்) காண்பார் உண்டாயின், அது பிறிது ஒன்றின் புண் - அது பிறிது ஒன்றின் புண்ணாகும்.

[பிறிது ஒன்றின்-வேறு ஓர் பிராணியின்.]

இது, புலால் மறுத்தல் வேண்டுமென்பதூஉம், அது தூயதாமென்பதூஉம் கூறிற்று. ௧௮௧.

பொருளாட்சி போற்றாதார்க் கில்லை; அருளாட்சி
ஆங்கில்லை ஊன்தின் பவர்க்கு.

இ-ள்:- பொருள் ஆட்சி போற்றுதார்க்கு இல்லை-பொருள்தனை ஆளுதல் (அதனைக்) காக்கமாட்டாதார்க்கு இல்லை; ஆங்கு அருள் ஆட்சி ஊன் தின்பவர்க்கு இல்லை-அது போல அருளினை ஆளுதல் ஊன் தின்பவர்க்கு இல்லை.

ஊனுண்ண அருட்கேடு வரும் என்றார். ௧௮௨.

ன்னூன் பெருக்கற்குத் தான்பிறி தூனுண்பான்
எங்ஙனம் ஆளும் அருள்?

இ-ள்:- தன் ஊன் பெருக்கற்கு-தன்னுடம்பை வளர்த்தற்கு, தான் பிறிது ஊன் உண்பான்- தான் பிறிதொன்றினது உடம்பை உண்ணுமவன், எங்ஙனம் அருள் ஆளும்-எவ்வாறு அருளினை ஆள்வான்?

ஊனுண்ண அருள் கெடுமோ என்றார்க்கு, இது கூறப்பட்டது. ௧௧௩.

டைகொண்டார் நெஞ்சம்போல் நன்றூக்கா தொன்றின்
உடல்சுவை உண்டார் மனம்.

இ-ள்:- படைகொண்டார் நெஞ்சம் போல் நன்று ஊக்காது-ஆயுதம் கைக்கொண்டவர்கள் நெஞ்சுபோல் நன்மையை நினையாது, ஒன்றின் உடல் சுவை உண்டார் மனம்-ஓன்றின் உடலைச் சுவைபட உண்டார் மனம்.

இஃது, ஊனுண்பார் நெஞ்சம் அறத்தை நினையா தென்றது. ௧௧௪.

தினற்பொருட்டால் கொள்ளா துலகெனின், யாரும்
விலைப்பொருட்டால் ஊன்தருவார் இல்.

இ-ள்:- தினல் பொருட்டு உலகு கொள்ளாது எனின்-தின்னுதற்காக உலகத்தார் கொள்ளார்களாகில், விலை பொருட்டு ஊன் தருவார் யாரும் இல்-விலைக்காக ஊன் விற்பார் யாரும் இல்லையாம். [ஆல் இரண்டும் அசை.]

கொன்று தின்னாது, விலைக்குக் கொண்டு தின்பார்க்குக் குற்றமென்னை யென்றார்க்கு, அதனானும் கொலைப்பாகம் வருமென்று இது கூறிற்று. ௧௧௫.

ருளல்ல தியாதெனின் கொல்லாமை கோறல்;
பொருளல்ல தவ்வூன் தினல்.

இ-ள்:- அருள் அல்லது யாது எனின்-அருளல்லது யாதெனில், கொல்லாமை கோறல்-கொல்லாமையைச் சிதைத்தல் (என்க); பொருள் அல்லது அவ்வூன் தினல்-பொருளல்லது (யாதெனில்) அவ்வூனைத் தின்னல் (என்க).

[பொருளல்லது-பயனில்லாதது, கொல்லாமையைச் சிதைத்தல்-கொலையைச் செய்தல்.]

புலால் உண்பதனால் அருள் கெடுதலே யன்றிப் பெறுவதொரு பயனும் இல்லையென்று இது கூறிற்று. ௧௮௬.

செயிரிற் றலைப்பிரிந்த காட்சியார் உண்ணார்
உயிரிற் றலைப்பிரிந்த ஊன்.

இ-ள்:- செயிரின் தலைப்பிரிந்த காட்சியார் உண்ணார்-குற்றத்தினின்றும் நீங்கின தெளிவையுடையார் உண்ணார், உயிரின் தலைப் பிரிந்த ஊன்-உயிரினின்றும் நீங்கின உடம்பை.

இம் மேற்கூறிய குற்றமெல்லாம் பயத்தலின், புலாலைத் தெளிவுடையோர் உண்ணா ரென்றது. ௧௮௭.

விசொரிந் தாயிரம் வேட்டலின் ஒன்றின்
உயிர்செகுத் துண்ணாமை நன்று.

இ-ள்:- அவி சொரிந்து ஆயிரம் வேட்டலின்-நெய்யைச் சொரிந்து ஆயிரம் வேள்வி வேட்டலினும், ஒன்றின் உயிர் செகுத்து உண்ணாமை நன்று-ஒன்றின் உயிரை நீக்கி அதன் உடம்பை உண்ணாமை நன்று.

இது, புலாலுண்ணாமை எல்லாப் புண்ணியங்களிலும் நன்றென்றது. ௧௮௮.

கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி
எல்லா உயிரும் தொழும்.

இ-ள்:- கொல்லான் புலாலை மறுத்தானை-கொல்லானுமாய்ப் புலாலையுண்டலைத் தவிர்த்தவனுமாய் நிற்பானை; எல்லா உயிரும் கைகூப்பி தொழும்-எல்லா உயிரும் . கூப்பித் தொழும். [கை கூப்பி - கைகுவித்து.]

இது, புலாலுண்ணாதான் தேவர்க்கு மேலாவ னென்றது. ௧௮௯.

ண்ணாமை யுள்ள துயிர்நிலை; ஊனுண்ண
அண்ணாத்தல் செய்யா தளறு.

இ-ள்:- (ஊன்) உண்ணாமை உயிர் நிலை உள்ளது-ஊனை உண்ணாமையினால் உயிர் நிலையைப் பெறுதல் உள்ளதாம்; ஊன் உண்ண அளறு அண்ணாத்தல் செய்யாது-ஊனை உண்ண (உண்டாரை எல்லா உலகத்தினும் இழிந்த) நரகம் (விழுங்கிக் கொண்டு) அங்காவாது. .

அங்காவாமை-புறப்பட விடாமை-[வெளிப்பட விடாமை.]

[உயிர் நிலையைப் பெறுதல்-உயிர் பிறப்பிறப்பின்றி நிற்றல்-வீடு.]

இஃது, ஊன் உண்ணாதார் வீடு பெறுவா ரென்றது. ௧௯0.