உள்ளடக்கத்துக்குச் செல்

திருக்குறள் மணக்குடவருரை/அடக்க முடைமை

விக்கிமூலம் இலிருந்து

௨௭-வது.-அடக்கமுடைமை.

அடக்கமுடைமையாவது, மனம் மொழி மெய்களால் அடங்கி ஒழுகுதல். [மொழியடக்கம் இனியவை கூறலின் பின் நிகழ்வதாதலால் இனியவை கூறலின் பின்னும், மெய்யடக்கமும் மனவடக்கமும் தவத்திற்கு இன்றியமையாதன வாதலால் தவமுடைமையின் முன்னும் இது கூறப்பட்டது.]

காக்க பொருளா அடக்கத்தை; ஆக்கம்
அதனினூங் கில்லை உயிர்க்கு.

இ-ள்:- பொருளாக அடக்கத்தை காக்க-(ஒருவன் தனக்குப்) பொருளாக அடக்கத்தை உண்டாக்குக; உயிர்க்கு ஆக்கம் அதனின் ஊங்கு இல்லை-உயிர்க்கு ஆக்கம் அதினின் மேற்பட்டது பிறிதில்லை.

[பொருளாக என்பது ஈறு கெட்டு நின்றது.]

இஃது, அடக்கமுடைமை வேண்டு மென்றது. ௩0௧.

செறிவறிந்து, சீர்மை பயக்கும், அறிவறிந்து
ஆற்றின் அடங்கப் பெறின்.

இ-ள்:- செறிவு அறிந்து-அடக்கப்படுவனவும் அறிந்து, அறிவு அறிந்து- அறியப்படுவனவும் அறிந்து, ஆற்றின் அடங்க பெறின்-நெறியானே அடங்கப் பெறின், சீர்மை பயக்கும்-நன்மை பயக்கும்.

[செறிவு-அடக்கம்.] அடக்கப்படுவன மெய், வாய், கண், மூக்கு, செவி. அறியப்படுவன ஊறு, சுவை, ஒளி, நாற்றம், ஓசை.

இஃது, அடக்கம் நன்மையை நல்கு மென்றது. ௨௬௨.

ருமையுள் ஆமைபோல் ஐந்தடக்கல் ஆற்றின்,
எழுமையும் ஏமாப் புடைத்து.

இ-ள்:- ஒருமையுள் ஐந்து ஆமைபோல் அடக்கல் ஆற்றின்-ஒரு பிறப்பிலே பொறிகள் ஐந்தினையும் ஆமைபோல அடக்கவல்லவனாயின், எழுமையும் ஏமாப்பு உடைத்து-(அஃது) அவனுக்கு எழுபிறப்பிலும் காவலாதலை யுடைத்து.

இஃது, அடக்கம் மறுபிறப்பிலும் நன்மையைப் பயக்கு மென்றது. ௨௬௩.

நிலையில் திரியா தடங்கியான் தோற்றம்
மலையினும் மாணப் பெரிது.

இ-ள்:- நிலையில் திரியாது அடங்கியான் தோற்றம்-தனது நிலையில் கெடாதே அடங்கினவனது உயர்ச்சி, மலையினும் மாண பெரிது- மலையினும் மிகப் பெரிது.

நிலை-வர்ணாச்சிரம தருமம்.

இஃது, அடக்கம் உயர்வை நல்கு மென்றது. ௨௬௪.

யாகாவா ராயினும் நாகாக்க, காவாக்கால்
சோகாப்பர் சொல்லிழுக்குட் பட்டு,

இ-ள்:- யா காவாராயினும் நா காக்க-எல்லாவற்றையும் அடக்கில ராயினும் நா ஒன்றினையும் அடக்குக, காவாக்கால் சொல் இழுக்குள்பட்டு சோகாப்பர்-அதனை அடக்காக்கால் சொல் சோர்வுள் பட்டுத் தாமே சோகிப்ப ராதலான்.

இது, நாவடக்கம் இல்லாதார் சோகத்தின்மாட்டே பிணிக்கப்படுவ ரென்றது. ௨௬௫.

தீயினால் சுட்டபுண் உள்ளாறும்; ஆறாதே
நாவினால் சுட்ட வடு.

இ-ள்:- தீயினால் சுட்ட புண் உள் ஆறும்-தீயினால் சுட்ட புண் உள்ளாறித் தீரும்; நாவினால் சுட்ட வடு ஆறாது-நாவினால் சுட்ட புண் (ஒரு காலத்தினும்) தீராது.

இது, நாவடக்கம் இல்லாதார்க்குப் பிறர் பகையாகித் தீங்கிழைப்ப ரென்றது. ௨௬௬.

ன்றானும் தீச்சொல் பொருட்பயன் உண்டாயின்,
நன்றாகா தாகி விடும்.

இ-ள்:- ஒன்றானும் தீச்சொல் பொருள் பயன் உண்டாயின்-ஒரு சொல்லேயாயினும் (கேட்டார்க்கு இனியதாயிருந்து) தீய சொல்லின் பொருளைப் பயக்குமாயின், நன்று ஆகாதது ஆகி விடும்-(சொல்லியது முழுவதும்) நன்மை ஆகாதாயே விடும்.

[ஆகாதது என்பது ஆகாது எனக் குறைந்து நின்றது.]

இஃது, ஒருவன் சால மொழி கூறினாலும் தீதா மென்றது. ௨௬௭.

ல்லார்க்கும் நன்றாம் பணிதல்; அவருள்ளும்
செல்வர்க்கே செல்வம் தகைத்து.

இ-ள்:- பணிதல் எல்லார்க்கும் நன்றாம்-அடங்கியொழுகல் எல்லார்க்கும் நன்மையாம்; அவருள்ளும் செல்வர்க்கே செல்வம் தகைத்து-அவரெல்லாரினும் செல்வமுடையார்க்கே மிகவும் நன்மை உடைத்தாம்.

செல்வம்-மிகுதி.

இஃது, அடக்கம் செல்வமுடையார்க்கு உயர்வைத் தரு மென்றது. ௨௬௮.

தம்காத்துக் கற்றடங்கல் ஆற்றுவான் செவ்வி
அறம்பார்க்கும் ஆற்றின் உழைந்து.

இ-ள்:- கதம் காத்து கற்று அடங்கல் ஆற்றுவான்-வெகுளியும் அடக்கிக் கல்வியும் உடையவனாய் (அதனால் வரும் பெருமிதமும்) அடக்க வல்லவன்மாட்டு, அறம் உழைந்து செவ்வி பார்க்கும் ஆற்றின்-அறமானது (தானே வருதற்கு) வருந்திக் காலம் பார்க்கும் நெறியானே.

இஃது அடக்கமுடையார்க்கு அறம் உண்டா மென்றது. ௨௬௯.

டக்கம் அமரருள் உய்க்கும்; அடங்காமை
ஆரிருள் உய்த்து விடும்.

இ-ள்:- அடக்கம் அமரருள் உய்க்கும்-(மனம் மொழி மெய்களை அடக்கி ஒழுக அவ்) அடக்கம் தேவரிடத்தே கொண்டு செலுத்தும்; அடங்காமை ஆர் இருள் உய்த்து விடும்-(அவற்றை அடக்காதொழுக அவ்) அடங்காமை தானே நரகத்திடைக் கொண்டு செலுத்தி விடும்.

மேல் பலவாகப் பயன் கூறினாராயினும், ஈண்டு அடக்கத்திற்கும் அடங்காமைக்கும் இதுவே பயனென்று தொகுத்துக் கூறினார். ௨௭0.