திருக்குறள் மணக்குடவருரை/மெய்யுணர்தல்

விக்கிமூலம் இலிருந்து

௩௬-வது.-மெய்யுணர்தல்.

மெய்யுணர்த லென்பது, எக்காலத்தினும் அழியாது எவ்விடத்தினும் நிற்கும் பொருள் இதுவென உணர்தல். இது பற்றறத் துறந்தாரது உள்ள நிகழ்ச்சியாதலான், துறவுடைமையின் பின் கூறப்பட்டது.

யுணர் வெய்தியக் கண்ணும் பயமின்றே
மெய்யுணர் வில்லா தவற்கு.

இ-ள்:- ஐ உணர்வு எய்தியக் கண்ணும்-மெய் முதலாகிய பொறிகள் ஐந்தினாலும் அறியப்படுவனவெல்லாம் அறிந்த இடத்தும், மெய்யுணர்வு இல்லாதவற்கு-உண்மையை அறியும் அறிவு இல்லாதாற்கு, பயம் இன்று- (அதனான்) ஒரு பயன் உண்டாகாது. [ஏகாரம் அசை.]

இஃது, எல்லா ஞானங்களையும் அடைந்திருப்பினும் மெய்ஞ்ஞானம் இல்லையேல் பயன் இல்லை யென்றது. ௩௫௧.

பொருளல்ல வற்றைப் பொருளென் றுணரும்
மருளானாம் மாணாப் பிறப்பு.

இ-ள்:- பொருள் அல்லவற்றை பொருள் என்று உணரும் மருளான்- பொருளல்லாதவற்றைப் பொருளாகக் கொள்கின்ற மயக்கத்தினாலே, மாணா பிறப்பு ஆம்-மாட்சிமையில்லாத பிறப்பு உண்டாகும்.

[அகத்துள் கொள்ளுதலே உணர்தலால், "பொருளென்று உணரும்" என்பதற்குப் "பொருளாகக் கொள்கின்ற" என்று உரைத்தனர்.]

இது, மெய்யுணருங்கால் மயக்கம் காண்பானாயின் பிறப்பு உண்டா மென்றது. ௩௫௨.

ப்பொருள் எத்தன்மைத் தாயினும், அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு.

இ-ள்:- எப்பொருள் எத்தன்மைத்தாயினும்-யாதொரு பொருள் யாதொரு தன்மைத்தாயினும், அப்பொருள் மெய் பொகுள் காண்பது அறிவு-அப் பொருளினுடைய உண்மையைத் தான் உண்மையாகக் காண்பது (யாதொன்று அஃது) அறிவாம்.

மெய்யென்பதூஉம் அறிவென்பதூஉம் ஒன்று. என்னை? எக்காலத்தும் ஒரு தன்மையாகி அழியாது நிற்றலின் மெய்யாயிற்று; எல்லாப் பொருளையும் காண்டலால் அறிவாயிற்று.

[அப்பொருளினுடைய உண்மையைத்தான்-அப்பொருளினுடைய (காம ரூபங்களை விட்டு) உண்மைத்தன்மையையே. உண்மையாக-மெய்ப் பொருளாக.]

இது, பொருள்களுடைய உண்மையைக் காண்பது அறிவா மென்றது. ௩௫௩.

பிறப்பென்னும் பேதைமை நீங்கச் சிறப்பென்னும்
செம்பொருள் காண்ப தறிவு.

இ-ள்:- பிறப்பு என்னும் பேதைமை நீங்க-பிறப்பாகிய அறியாமையினின்று நீங்க, சிறப்பு என்னும் செம்பொருள் காண்பது அறிவு-பிறவாமையாகிய செவ்விய பொருளைக் காண்பது அறிவாம்.

பிறவாமை சிறந்ததாதலின் சிறப்பு என்னப்பட்டது.

இது, தான் பிறந்தானாகவும் செத்தானாகவும் கருதுகின்ற அறியாமையை விட்டுத் தான் சாவில்லாதவனாகவும் பிறப்பில்லாதவனாகவும் நிற்கிற நிலைமையைக் காணவேண்டு மென்றது. ௩௫௪.

ர்த்துள்ளம் உள்ள துணரின் ஒருதலையாப்
பேர்த்துள்ள வேண்டா பிறப்பு.

இ-ள்:- உள்ளம் உள்ளது ஓர்த்து ஒருதலையாக உணரின்-உள்ளமானது உள்ள பொருளை ஆராய்ந்து ஒருதலையாக உணருமாயின், பேர்த்து பிறப்பு உள்ள வேண்டா-பின்னைப் பிறப்புண்டென்று நினையா தொழிக.

[ஒருதலையாக-உண்மையாக. ஒருதலையாக என்பது ஈறு கெட்டு நின்றது.]

இது, மெய்யுணர்ந்தவர்கள் பிறப்பு உண்டென்று நினையாதொழிக என்றது. ௩௫௫.

யத்தின் நீங்கித் துணிந்தார்க்கு வையத்தின்
வானம் நணிய துடைத்து.

இ-ள்:- ஐயத்தின் நீங்கி துணிந்தார்க்கு-(மெய்ப்பொருளை) ஐயப்படுதலினின்று நீங்கித் துணிந்தவர்களுக்கு, வையத்தின் வானம் நணியது உடைத்து-இவ்வுலகத்தைப் போல மேலுலகம் அணித்தரம் தன்மை யுடைத்து.

துணிந்த அறிவின் கண்ண தெல்லா உலகு மாதலின், அவ்வறி வுடையார்க்கு எல்லா உலகமும் ஒருங்கு தோற்றும். ஆதலால், வையத்தின் வானம் அணித்தர மென்றார்.

இது, மெய்ப்பொருளை யுணர்ந்தார் எவ்விடமும் அறிவ ரென்றது. ௩௫௬.

ருணீங்கி இன்பம் பயக்கும், மருணீங்கி
மாசறு காட்சி யவர்க்கு.

இ-ள்:- மருள் நீங்கி மாசு அறு காட்சியவர்க்கு-மயக்கத்தினின்று நீங்கிக் குற்றமற்ற அறிவை யுடையார்க்கு, இருள் நீங்கி இன்பம் பயக்கும்- அறியாமையாகிய இருள் நீங்கி முத்தியாகிய இன்பம் உண்டாகும்.

இது, மெய்யுணர்ந்தார்க்கு வினை விட்டு முத்தியின்பம் உண்டாகு மென்றது. ௩௫௭.

ற்றீண்டு மெய்ப்பொருள் கண்டார், தலைப்படுவர்
மற்றீண்டு வாரா தெறி.

இ-ள்:- ஈண்டு மெய்ப்பொருள் கற்று கண்டார்-இவ்விடத்தே மெய்ப் பொருளை அறிந்து தெளிந்தாரே, மற்று ஈண்டு வாரா நெறி தலைப்படுவர் -மீண்டு இவ்விடத்து வாராத வழியினை அடைவர்.

[கண்டாரே என்பது ஏகாரம் கெட்டு நின்றது.]

இது, கல்வியால் அறிவை அறியப் பிறப்பு அறு மென்றது. [அறிவு-மெய்ப்பொருள்.] ௩௫௮.

சார்புணர்ந்து சார்பு கெடஒழுகின், மற்றழித்துச்
சார்தரா சார்தரும் நோய்.

இ-ள்:- சார்பு உணர்ந்து சார்பு கெட ஒழுகின்-(தன்னைச்) சார்வனவற்றை அறிந்து அவற்றின் சார்வு கெட ஒழுகுவனாயின், மற்று அழித்து சார்தரா சார் தரும் நோய்-அவ்வொழுக்கத்தினை அழித்துச் சார்தலைச் செய்யா சாரக்கடவ துன்பங்கள்.

சார்வு கெட ஒழுகல்-வினைச்சார்வு கெட ஒழுகல். அஃதாவது, காமம் வெகுளி மயக்கம் இன்றி மெய்யுணர்ச்சியான் ஒழுகுதல்.

இஃது, உண்மையைக் கண்ட அக்காட்சியைத் தப்பாமல் முடிய நிற்பனாயின், சாரக்கடவதாய் நிற்கின்ற வினை சாராதே விட்டுப் போ மென்றது. ௩௫௯.

காமம் வெகுளி மயக்கம் இவைமூன்றின்
நாமம் கெடக்கெடும் நோய்.

இ-ள்:- காமம் வெகுளி மயக்கம் இவை மூன்றின் நாமம் கெட-ஆசையும் வெகுளியும் மயக்கமும் என்னும் இவை மூன்றினது நாமம் போக, நோய் கெடும்-வினை போம்.

வினை கெடுதற்கு வழி இதுவென்று கூறினார். ௩௬0.