உள்ளடக்கத்துக்குச் செல்

கலைக்களஞ்சியம்/அசிட்டலீன்

விக்கிமூலம் இலிருந்து

அசிட்டலீன் (Acetylene): [CH=CH]; அபூரித ஹைடிரோ கார்பன்களில் (த.க.) இதுவே முக்கியமானது. இதை 1859-ல் பெர்தலோ என்ற பிரெஞ்சு அறிஞர் கண்டுபிடித்தார். ஒரு குழலில் ஹைடிரஜனை அடைத்து அதற்குள் இரு கரிக் குச்சிகளைச் செருகி அவற்றிடையே மின்வில்லை (Electric- arc) ஏற்படுத்தினால் கார்பனும், ஹைடிரஜனும் நேரடியாகக் கூடி அசிட்டிலீனைத் தரும் என அவர் காட்டினார். இது ஒரு நிறமற்ற வாயு. தூயநிலையில் இது நறுமணமுள்ளது. ஆனால் இதில் பொதுவாகக் கலந்திருக்கும் அசுத்தங்களால் இது ஒருவகைக் கெட்ட மணத்தைப் பெறுகிறது. அசிட்டலீன் சம பருமனுள்ள நீரிற் கரையும். இது ஆல்கஹாலிலும், அசிட்டோனிலும் ஏராளமாகக் கரையும். உயர்ந்த அழுத்தத்திலும், திரவநிலையிலும் இது அதிர்ச்சியுடன் வெடித்துச் சிதையும். இது காற்றில் ஒளியும் புகையும் உள்ள சுடர்விட்டு எரியும். இது ஒரு வெப்பமேற்கும் கூட்டு. அதாவது தனிமங்களிலிருந்து இதைப் பெறும்போது இது அதிகமான வெப்பத்தை ஏற்கிறது. அபூரிதக் கூட்டான இது கூட்டற் கூட்டுக்களை அளிக்கிறது. குளோரினுடன் இது அதிர்ச்சியுடன் வெடித்துக் கூட்டற் கூட்டுக்களை அளிக்கும். அசிட்டிலீனைச் செஞ்சூட்டிற்குட்படுத்தினால் அது கூட்டுறுப்பாகிப் பென்சீனாக மாறும் ( 3C2H2 H2O → C6H6). கந்தகாமிலமும், மெர்க்குரிக குளோரைடும் கலந்த நீரைக் கொதிக்க வைத்து அதன்வழியே அசிட்டிலீனைச் செலுத்தினால் அசிட்டால்டிஹைடு தோன்றி ஆவியாகப் பிரிகிறது. இந்த வினை தொழில் முறையில் ஆல்கஹாலையும், அசிட்டிக அமிலத்தையும் பெறப் பயனாகிறது.

தயாரிப்பு : தொழிலில், கால்ஷியம் கார்பைடு என்ற பொருளிலிருந்து அசிட்டிலின் தயாரிக்கப்படுகிறது. மின்சாரச் சக்தி மலிவாகக் கிடைக்கும் பகுதிகளில் கால்ஷியம் கார்பைடு தயாரிக்கப்படுகிறது. சுண்ணாம்பையும், கல்கரியையும் கலந்து மின்னுலையில் சுட்டால் கால்ஷியம் கார்பைடு கிடைக்கும். இதன்மேல் தண்ணீர் பட்டவுடன் அசிட்டிலீன் வாயு தோன்றும்: CaC2 + 2H2O → Ca(OH)2 . இந்த வினையின்போது வெப்பம் தோன்றும். அதை அகற்றிவிட்டல் அசிட்டிலீன் பென்சீனாக மாறிவிடலாம் அல்லது சிதைந்து போகலாம். இவ்வாறு பெறப்படும் அசிட்டிலீனுடன் பல அசுத்தங்கள் கலந்திருக்கும். அவற்றை நீக்க வேண்டும்.

பயன்கள் : ஒளியையும், வெப்பத்தையும் பெற அசிட்டிலீன் பயனாகிறது. வண்டிகளிலும், கடல் மிதவைகளிலும் (Buoys) விளக்கேற்ற அசிட்டிலீன் வாயு பயன்படுகிறது. இதை ஆக்சிஜன் வாயுவுடன் கலந்து எரித்தால் மிக உயர்ந்த வெப்பத்தைப் பெறலாம். இத்தத்துவத்தைக் கொண்ட ஆக்ஸி-அசிட்டிலீன் ஊது குழல் உலோகங்களை இணைக்கவும், உலோகத் தகடுகளை வெட்டவும் பயனாகிறது.

எளிய அமைப்புள்ளதும், எளிதில் தயாரிக்கத் தக்கதுமான அசிட்டிலீனிலிருந்து தொடங்கி, முக்கியமான பல கரிமப்பொருள்கள் தொகுப்பு முறைகளால் தயாரிக்கப்படுகின்றன. அசிட்டிக அமிலம், ஆல்கஹால், அசிட்டோன், வைனைல் அசிட்டேட்டுப் போன்ற பல பொருள்கள் இதிலிருந்து தயாரிக்கப்படுகின்றன. அசிட்டிலீனையும் குளோரினையும் வினைப்படுத்திப் பெறப்படும் பல பொருள்கள் தொழில்களில் கரைப்பான்களாகப் பயன்படுகின்றன. அசிட்டிலீனிலிருந்து செயற்கை ரப்பரைத் தயாரிக்கும் முறையும் வழக்கத்தில் உள்ளது.