உள்ளடக்கத்துக்குச் செல்

கலைக்களஞ்சியம்/அமராந்தேசீ

விக்கிமூலம் இலிருந்து

அமராந்தேசீ கீரைத் தண்டுக் குடும்பம். இந்தக் குடும்பத்தில் பல செடிகள் இலைக்கறியாகப் பயன்படுகின்றன. சில மருந்துக்குதவும், மற்றுஞ் சில அழகிய பூக்கதிர்களுள்ளவை. இவற்றில் பெரும்பாலானவை சிறு செடிகள். சில குற்றுச் செடிகளும் சில கொடிகளும்

முள்ளுக் கீரைத் தண்டு

கிளை, ஆண் பூ, பெண் பூ, வெடித்த கனியின் அடிப்பாகமும் விதையும், வெடித்த கனியின் மேற்பாகம்.

உண்டு. இலைகள் மாறொழுங்கு அல்லது எதிரொழுங்குள்ள தனியிலைகள். இலையடிச் செதிலில்லை.

பூக்கள் மிகச் சிறியவை. சாதாரணமாக இரு பாலின. இவற்றோடு ஒருபாற் பூக்களும் மலர்ந்திருக்கும். சில வகைகள் ஈரகச் (Dioecious) செடிகள். மஞ்சரி வளர் நுனிக் கதிர் அல்லது கூட்டுக் கதிர். வளரா நுனிக்கொத்துக்களும், கோழிக்கொண்டை போன்ற பலவித விசித்திர வடிவுக் கொத்துக்களும் உண்டு. பூக்காம்பிலையும், பூக்காம்புச் சிற்றிலைகளும், மெல்லிய, வற்றி புலர்ந்த செதில் போன்றவை; உதிராமல் இருக்கும்; நிறமுள்ளவையாக இருக்கும்.

பூவிதழ் 5 கண்ணாடி போல அல்லது உலர்ந்த செதில் போல இருக்கும். போலிக் கேசரங்கள் (Staminodes) சில இருக்கலாம். மகரந்தப்பை சில வகைகளில் ஒரே அறையுள்ளது; சிலவற்றில் இரண்டறையுள்ளது. சூலகம் இரண்டு சூலிலைகள் கூடியது. ஒரே அறையுள்ள சூலறையில் ஒரு சூல் அல்லது சில சூல்கள் இருக்கலாம். கனி உலர்கனி. மேற்பாகம் சிமிழின் மூடிபோலத் (Circumciss) திறக்கும். சிலவற்றில் அப்படி ஒழுங்காக வெடிக்காமல் தாறுமாறாகவும் வெடிக்கும். விதை ஒன்று அல்லது சில; வட்டமாகச் சப்பையாகப் பளபளப்பாக இருக்கும். மாவு போன்ற முளைசூழ்தசையில் கருச் (Embryo) சுருண்டு கிடக்கும். இந்தக் குடும்பத்தில் சுமார் 50 சாதிகளும் 500 க்கு மேற்பட்ட இனங்களும் உண்டு; அயன, உப அயன மண்டலங்களில் உள்ளவை. குப்பைக்கீரை, முள்ளுக்கீரை, பண்ணைக்கீரை, தொய்யாக்கீரை, பூளை, சிறுபூளை, பொன்னாங்கண்ணி, நாயுருவி இவையெல்லாம் சாமானியமாக வயல்களிலும் வழிப்பக்கங்களிலும் வளர்ந்திருப்பவை. கலவைக் கீரையில் இவை கலந்திருக்கும். கீரைத்தண்டு, அறுகீரை, சிறுகீரை தோட்டங்களில் பயிர் செய்யப்படுவன. சில தண்டுக்கீரை இனங்களில் விதையை வறுத்தும் மாவரைத்தும் உணவாகச் சில இடங்ளில் உபயோகிக்கின்றனர். வாடாமல்லிகை, கோழிக்கொண்டை முதலியவை தோட்டங்களில் அழகுக்காக வளர்ப்பவை. வெளிநாடுகளிலிருந்து சில களைகளும் முட்செடிகளும் நமது நாட்டுக்கு முதல் உலக யுத்த காலத்திலும் பிறகும் வந்திருக்கின்றன. அவற்றுள் பஸ்ராமுள் என்னும் முள்ளுப் பொன்னாங்கண்ணியும் (ஆல்டர்னாந்திரா எக்கைனெட்டா), வெள்ளைப் பூவுள்ள நீர்வாடாமல்லிகையும் (கோம்பிரினா டிகம்பன்ஸ்) அமராந்தேசீ குடும்பத்தைச் சேர்ந்தவை. இந்தக் குடும்பத்துச் செடிகளின் கனியும் விதையும் எளிதாகப் பரவுவதற்கு ஏற்றவை. பல குப்பைபோலக் காற்றில் அடித்துக் கொண்டு போகும். முள்ளுப் பொன்னாங்கண்ணி, பாதத்திலும்,சைக்கிள் முதலியவற்றிலும் குத்திக் கொண்டு நெடுந்தூரம் போகும். நாயுருவிக்கனி உலரும் போது பூக்கதிரில் கீழ்நோக்கித் திரும்புகிறது. ஆடு மாடுகளின் தோலிலும் நமது துணியிலும் காலிலும் வரிசையாக உருவினது போலக் குத்திக் கொள்ளும். கீரை விதைகளை எறும்பு இழுத்துக் கொன்டு போகும் பொது அவை வழியில் விழுந்து முளைக்கும். இவற்றின் பூங்கதிர்கள் வாடாமலும் நிறம் மாறமலும் இருப்பதால், இவை அமராந்தஸ் அதாவது அமரப்பூக்கள் எனப் பெயர் பெற்றன. மாறாத அன்புக்கு இந்த அமராந்தஸ் ஒரு அடையாளப் பூவாக மேனாட்டார் கருதுவர்.