உள்ளடக்கத்துக்குச் செல்

கலைக்களஞ்சியம்/அரிஸ்டாட்டில்

விக்கிமூலம் இலிருந்து

அரிஸ்டாட்டில் (கி.மு. 384-322) : மேல்நாட்டின் நாகரிகத்திற்கும் அறிவு வளர்ச்சிக்கும் அடிகோலிய பெருமை அரிஸ்டாட்டில் என்னும் கிரேக்க அறிஞரைச் சாரும். இவர் கிரேக்கக் குடியேற்ற நாடுகளில் ஒன்றைச் சேர்ந்த ஸ்டாகிரா என்ற ஊரில் பிறந்தார். இவர் தந்தை நிக்கொமேகஸ் என்பவர் புகழ் பெற்ற அலெக்சாந்தரின் தந்தையான பிலிப்பின் அரண்மனை வைத்தியராக இருந்தவர். அரிஸ்டாட்டில் தம்முடைய பதினெட்டாவது வயதில் ஆதன்ஸ் நகருக்குச் சென்று, பிளேட்டோ என்ற பேரறிஞருடைய மாணவரானார். ஆதன்ஸில் கி.மு. 347ஆம் ஆண்டுவரை கல்வி பயின்று வந்தார். கி.மு. 342-ல் பிலிப்பின் வேண்டுகோளுக்கிணங்கி அலெக்சாந்தருக்கு ஆசிரியரானார். மாணவராகிய அலெக்சாந்தர் பல நாடுகளை வென்று தம் ஆட்சியைப் பரப்பினர். ஆசிரியரான அரிஸ்டாட்டில் அறிவு உலகத்தின் பல துறைகளில் தம் மதிநுட்பத்தைப் புலப்படுத்தி, மங்காச் சிறப்படைந்தார். கி.மு.335-ல் அரிஸ்டாட்டில் ஆதன்ஸுக்குத் திரும்பி ஒரு பள்ளி நிறுவினார். பெரிபாட்டெட்டிக் (உலாப்பள்ளி) என்பது அதன் பெயர். இடத்தின் காரணமாக இப்பெயர் ஏற்பட்டது என்பார் சிலர். வேறு சிலர் அரிஸ்டாட்டில் உலவிக் கொண்டே பாடஞ் சொல்லுவது வழக்கமாதலால் இப்பெயர் ஏற்பட்டதென்பர். அலெக்சாந்தர் இறந்தவுடன் அரசியல் நிலைமை மாறியதால், அரிஸ்டாட்டில் ஆதன்ஸைவிட்டு நீங்கித் தம் 62ஆம் வயதில் நோய்வாய்ப்பட்டுக் காலமானார்.

அரிஸ்டாட்டிலின் கொள்கை: இவருடைய கொள்கையைச். சுருக்கிக் கூறுவது எளிதல்ல. அக்கொள்கையின் தன்மையையும் போக்கையும் பற்றிய சில குறிப்புக்களை மட்டும் தத்துவம், அறம், அரசியல், அளவை, இலக்கியத்திறனாய்வு என்ற தலைப்புக்களுக்கடியில் பார்க்கலாம். பொதுவாக இவர் உள்ளப் போக்கை அறிவதற்கு மூன்று செய்திகளைக் கருத்திலிருத்த வேண்டும். 1. இவர் ஐயோனியா என்ற பகுதியைச் சேர்ந்தவராதலால் அப்பகுதியின் ஏனைய தத்துவ ஆராய்ச்சியாளரைப்போலப் புற உலக இயற்கையின் கூறுகளை ஆராய்வதில் பற்றுக் கொண்டவர். 2. மருத்துவரின் மகனாராதலால் விளைவுகளையும் அவற்றின் முதலையும் உய்த்துணரும் ஆற்றல் உடையவர். 3. அக உலக ஆராய்ச்சியில் பெரிதும் ஈடுபட்ட சாக்கிரட்டீசின் மாணவரான பிளேட்டோவை ஆசிரியராகப் பெற்றவர் ; எனவே அகவுலக ஆராய்ச்சியிலும் பயிற்சி பெற்று, அவ்வாராய்ச்சியைத் தொடர்ந்து நடத்தியவர். வானவியலிலிருந்து விலங்கியல் வரையில் இவருடைய அறிவுத்தொண்டு பரவியுள்ளது.

தத்துவம்: பிளேட்டோ பொருள்களின் உண்மை நிலையில் கருத்தைச் செலுத்தியதால் அவற்றின் தோற்றத்தைப் பற்றி அக்கரை கொள்ளவில்லை. பொருள்களின் உண்மை நிலை ஓர் அளவிற்கே தோற்ற நிலையில் நிழலிடுகிறது என்பது அவர் கருத்து. இவ்வாறு தோற்ற நிலையைப் புறக்கணிப்பதின் குறையை அரிஸ்டாட்டில் நீக்கினார். உண்மை நிலையைக் காட்சிக்குப் புறம்பாக்காமல் பொருள்களின் நிறைவான உருவத்திலேயே அதைக் காணவேண்டும் என்று வற்புறுத்தினார். தனிப்பட்ட பொருள்களுக்கே உண்மை உண்டு, அவற்றின் பொதுமைக்கல்ல என்பது அவர் கொள்கை. ஒரு பொருளை உணர்ந்துகொள்ள, அது எதனாலானது, எந்த உருவுடையது, எவரால் எக்கருவி கொண்டு செய்யப்பட்டது, எதற்காகச் செய்யப்பட்டது என்று இவ்வாறாக ஆராயவேண்டும்.

அறம் : அறத் துறையில் மிகைபடல், குறைபடல் ஆகிய இரண்டும் தவறு; நடுநிலைமையாகத் தக்க அளவில் நடப்பதே நன்மை என்ற முடிவு கண்டார். எடுத்துக் காட்டு : அஞ்சாமை என்பது அச்சம் என்பதற்கும் எண்ணிப் பாராத துணிவிற்கும் இடைப்பட்ட நன்னிலை. மிகுதியாக அஞ்சுவதும், குறைவாக அஞ்சுவதும் தவறு. இவ்வாறே எண்ணாமல் துணிவதும், துணியாமலே இருப்பதும் தவறு. அச்சம், துணிவு என்ற இரண்டையும் தக்க அளவில் கொண்ட நடுநிலைப்பட்ட ஒழுக்கமே அஞ்சாமை.

அரசியல்: மக்கள் கூடிவாழும் பண்புடையவர்கள். ஆகையால் அவர்கள் குடும்பத்தினராகவும், குறிப்பிட்ட இனத்தினராகவும், நாட்டினராகவும் வாழக் காண்கிறோம். நாட்டின் நல்லாட்சிக்குத் தேவையானவை பின் வருவன : 1. நாட்டு மக்கள் அனைவர் நலத்தையும் பற்றி ஆட்சியாளர் அக்கறை கொள்ளுவது, 2. நாட்டின் பல திறப்பட்ட தொழில், மக்கட்பண்பு இவற்றிற்கேற்ற ஆட்சி முறைத் திட்டம், 3.நிலையான ஆட்சிக்காகப் பணக்காரரும் ஏழைகளுமல்லாத நடுநிலை வகுப்பினரின் எண்ணிக்கை, செல்வாக்கு இவற்றின் பெருக்கம். ஆட்சிமுறைக்கு ஏற்ப நடப்பது தான் உரிமை வாழ்வு.

அளவை : வேறு எத்துறையையும்விட இத்துறையிலேயே அரிஸ்டாட்டிலின் செல்வாக்குப் பரந்து நிலைத்துள்ளது. பகுப்பு வழியளவை (Deduction) என்ற பகுதி ஏறக்குறைய அரிஸ்டாட்டில் வகுத்தபடியே இன்றும் பயிலப்பெறுகிறது. சிறப்பாக அனுமான மொழித் தொடர் (Syllogism) என்ற வழியளவை முறை அவர் அமைத்துத் தந்ததே.

இலக்கியத்திறனாய்வு: துன்பவியல் நூல்களின் நோக்கத்தைப் பற்றி அரிஸ்டாட்டில் கொண்ட கொள்கை, இலக்கியத்திறனாய்வாளர் அடிக்கடி நினைவு கூர்வதொன்று. இத்தகைய நூல்கள், அச்சம், இரக்கம் என்ற உணர்ச்சிகளை எழுப்பி, ஏனைய உணர்ச்சிகளையும் உள்ளத்தையுமே தூய்மை செய்யும் பொருள்களாக (Catharsis)விளங்குகின்றன என்கிறார் அரிஸ்டாட்டில். மேல்நாட்டு ஆராய்ச்சி முறைகளும், அறிவுத் துறைகளின் அடிப்படையும், கலைச் சொற்களும் பெரும்பாலும் அரிஸ்டாட்டில் அமைத்தனவே என்பதை எண்ணும்போது அவருடைய அறிவின் பெருமை புலனாகும். வ. ஆ. தே.