கலைக்களஞ்சியம்/அருகத்து நிலை
அருகத்து நிலை பௌத்த சமயத்தில் நான்காவதும், மிகப் புனிதமானதுமான துறவுநிலை. உலக வாழ்வின் நிலையாமையையும் துன்பங்களையும் உணர்ந்து நிர்வாணத்தை நோக்கமாகக் கொண்டு முன்னேறும்போது கடைசியாக உள்ளது இந்நிலையாகும். உலக வாழ்வைத் துறந்து அனுஷ்டிக்க வேண்டிய நான்கு அதீத மார்க்கங்களையும் கடந்து வந்து, அதன் நான்கு பலன்களையும் பெற்று, இப்பிறப்பில் துன்பம் நீங்கி, மறுபிறப்பும் இல்லாத நிலையை அடைவோர் அருகத்து நிலையை அடைந்தவராவர். இவர்கள் ஆரியர் எனவும் அழைக்கப்பெறுவர். அருகத்துநிலையை அடைந்தோரது முக்கியமான சிறப்பியல்பு குறைவற்ற ஞானம். இது பிரஞ்ஞை எனப்படும். பிறவிக் கடலைக் கடக்க இப்பிரஞ்ஞை உதவுகிறது. ஆகையால் இவர்கள் பிரஞ்ஞாவிமுக்தர் எனவும் அழைக்கப்பெறுவர். புத்தரது பிரதம சீடர்கள் அனைவரும் இந்நிலையை அடைந்தோர்.
ஜைன சமயத்திலும் மிக்க வுயர்நிலையடைந்த ஆன்மா, உடலோடு கூடியிருக்கும்போது சயோக கேவலி அல்லது அருகத்து நிலையை எய்தியிருப்பதாகக் கூறுவர்.