கலைக்களஞ்சியம்/அரேபியா
அரேபியா தென்மேற்கு ஆசியாவிலுள்ள பெரிய தீபகற்பம். மேற்கே செங்கடலும், தெற்கே இந்திய சமுத்திரமும், கிழக்கே பாரசீக வளைகுடாவும் உள்ளன. இது இஸ்லாம் பிறந்த நாடு. முஸ்லிம்களுடைய புண்ணியத் தலமாகிய மக்கா இந்நாட்டில் உள்ளது. இந்நாட்டின் பெரும்பகுதி பாலை நிலமாயிருக்கிறது. ஆறு ஒன்றேனும் இல்லை. வெப்பநிலை மிகுந்துள்ளது. மஸ்கட் என்னுமிடத்தில் 115° பா. வரை வெப்பநிலை உயர்கிறது. சிற்சில சமயங்களில் 130° பா. வரை போவதுமுண்டு. ஆயினும் ஈராக், இராஜபுதனம் முதலிய இடங்களைவிட இங்குப் பொதுவாக வெப்பம் குறைவே.
பேரீச்சம்பழம் இங்குள்ளவர்களின் முக்கியமான உணவு. காப்பி, கோதுமை, பார்லி முதலியவை சில இடங்களில் பயிராகின்றன. நெருப்புக்கோழி, நரி முதலியன சில இடங்களில் காணப்படுகின்றன. அரபிக் குதிரைகள் வேகத்திற்கு உலகப் புகழ் பெற்றவை. இரண்டாம் உலக யுத்தத்திற்குப்பின் அரேபியாவில் பாரசீக வளைகுடாவிற்கருகே பாரேன் தீவிற்கடுத்து எண்ணெய்க் கிணறுகள் தோண்டும் தொழில் அமெரிக்கர் ஆதரவில் முன்னேற்றமடைந்துள்ளது.
போக்குவரத்திற்கு ஒட்டகங்களே இன்றும் பயன்படுகின்றன. இப்பொழுது ஜெட்டாவிலிருந்து மக்காவிற்கும் மதீனாவிற்கும் மோட்டார் பஸ் உண்டு. ரியாதிற்கும் எண்ணெய்க் கிணறுகளுக்கும் ஆகாய விமானங்களிற் செல்லலாம். தென்மேற்கேயுள்ள யெமன் ஒரு சுதந்திர நாடு ; ஏடன் பிரிட்டிஷ் உடைமை. ஓமான் தென் கிழக்கேயுள்ள ஒரு சுதந்திர நாடு. சவுதி அரேபியா என்பதே அரேபியாவிலுள்ள மிகப் பெரிய அரசியற் பிரிவு. பரப்பு : சு. 10 இலட்சம் ச. மைல். மக்: சு. 95 இலட்சம் (1947). முக்கியமான நகரங்கள் : மக்கா, மக்: சு. 1,50,000 (1947) ; ரியாத் (சவுதி அரேபியாவின் தலைநகரம்) ; மக் : சு. 60,000 (1947) ; மதீனா, மக்: சு. 45,000; ஏடன், மக் : சு. 1,00,000 (1950). இங்குப் பல இந்தியர்கள் வியாபாரத்தை முன்னிட்டுச் சென்று வாழ் கின்றனர்.
வரலாறு : அரேபியாவின் மிகப் பண்டைய வரலாற்றை மிகுதியாக அறிந்துகொள்ள இயலவில்லை. அரபு இலக்கியங்களில் கூறப்படும் பண்டைய வரலாறு பெரும்பாலும் கதையென்றே கொள்ளற்பாலது. 19 ஆம் நூற்றாண்டில் தோண்டி எடுக்கப்பட்ட பல கல்வெட்டுக்களிலிருந்து, 3000 ஆண்டுக்கு முன்பும் அந்நாட்டில் பல நாகரிக இராச்சியங்கள் தோன்றி அழிந்திருப்பது தெரியவருகிறது. கி. மு. 1200-650 வரை மினேயன் இராச்சியம் யெமன் பிரதேசத்தில் ஆண்டு வந்தது. இதற்குப் பிறகு ஆண்டது பெயன் இராச்சியம். பெயன் ஆட்சியில் கி. மு. 10-7 ஆம் நூற்றாண்டு வரை முகாரிபுகளும், கி. மு. 650-115 வரை சாபா அரசர்களும், பிறகு இம்யாரித்துக்களும் ஆண்டனர். கி. பி. முதல் சில நூற்றாண்டுகளில் அபிசீனியர்களுக்கும் அராபியர்களுக்கும் சமயச் சார்பான பூசல்கள் சில நிகழ்ந்தன. கி. பி. 6ஆம் நூற்றாண்டில் பாரசீகர்கள் தென் அரேபியாவை வென்று, யெமன் பிரதேசத்தில் கவர்னர் ஒருவரை நியமித்தனர். அதே காலத்தில் அரேபியாவின் வடமேற்குப் பகுதியில் ஜப்னீடு என்னும் வமிசம் ஆண்டுவந்ததாகத் தெரிகிறது. இவர்கள் ஆண்டது காசன் என்னும் பிரதேசம். இவ்வரசர்களில் ஹரீது இபன்-ஜபாலா என்பவன் முக்கியமானவன். ஜஸ்டீனியன் என்னும் ரோமானியப் பேரரசன் ஹாதை அராபியர்களுடைய மன்னன் என்று அங்கிகரித்தான். கி. பி. 583-ல் ஹரீது இறந்தபிறகு அவ்விராச்சியம் பலவாகச் சிதறிற்று. 5ஆம் நூற்றாண்டிறுதியில் மத்திய அரேபியாவில் ஆகில்-அல்-முரார் என்பவனுடைய வமிசம் ஒன்று ஆண்டு வந்ததென்றும், ஒரு காலத்தில் அது மத்தியத் தென் அரேபியா முழுவதும் ஆண்டு வந்தது என்றும் தெரிகின்றது. இவ் வமிசங்களைத் தவிர வேறு ஒழுங்கான ஆட்சியொன்றும் அக்காலத்தில் அரேபியாவில் இல்லை. தென் அரேபியா, கிண்டாஹீரா, காசன் என்னும் இராச்சியங்கள் மட்டும் அமைதியான ஆட்சி நடத்திவந்தன. அவ்வமயத்தில் தோன்றிய முகம்மது நபி சமயத்தையும் நாட்டுப்பற்றையும் ஒருங்கே வளர்க்க விரும்பினார். அவர் ஒரு பெரிய மதத்தை நிறுவியதோடு அரேபியாவையும் ஒற்றுமைப்படுத்தினார். அவருக்கிருந்த பல அரசியல் பகைவர்களை வெல்லவேண்டியது அவசியமா யிருந்தமையால், அவரைப் பின்பற்றியவர்களும் ராணுவ முறையில் இயங்க வேண்டியதாயிற்று. 630-ல் மக்காவை முகம்மது கைப்பற்றினார். 632-ல் அவர் இறந்தபோது அரேபியா ஐக்கியமடைந்த ஒரு நாடாக விளங்கிற்று.
முகம்மதுக்குப் பிறகு முதல் கலீபாவாக வந்தவன் அபுபக்கர் (632-634) என்பவன். இவன் சமயப்பற்று மிகுந்தவன். இவனுக்குப் பிறகு வந்த ஓமார் (634644) பாரசீகர்களை வென்று, பஸ்ரா முதலிய நகரங்களை நிருமாணித்தான். சில ஆண்டுகள் தமாஸ்கஸ், எருசலேம் ஆகிய நகரங்கள் அராபியர் வசமாயின. 640-ல் அராபியர்கள் எகிப்தின்மேற் படையெடுத்து, அலெக்சாந்திரியாவைக் கைப்பற்றி, கைரோ நகரை நிருமாணித்தனர். அக்காலத்தில் பாரசீகம் முழுவதும் அரேபியாவிற்கு அடிப்ணிந்திருந்தது. உத்மான் (644-656) என்னும் கலீபா காலத்தில் ஆர்மீனியா, ஆசியா மைனர், கார்த்தேஜ் முதலிய இடங்களை அராபியர் வென்றனர். 655-661-ல் அலி என்னும் கலீபா ஆண்டான். இவன் காலத்தில் நாட்டில் கலகம் உண்டாகிச் சிப்பின் (Siffin) என்னுமிடத்தில் நடந்த போரில் இவன் தோல்வியுற்று முடிதுறக்க வேண்டியதாயிற்று. அப்போது ஏற்பட்ட உமாயிது வமிசம் தமாஸ்கஸைத் தலைநகராகக் கொண்டு (661) ஆண்டு வந்தது.
உமாயிது வமிச ஆட்சியின் முதற்பகுதியில் எப்போதும் நாட்டில் போரும் குழப்பமுமாகவே இருந்தது. அலிக்குப்பிறகு அவனது இரு மக்களான ஹசன், ஹுசேன் என்பவர்களுக்குள், நடந்த சண்டையில் ஹுசேன் தோற்கடிக்கப்பட்டுக் கொல்லப்பட்டான். உமாயிது வமிசம் கி. பி. 750 வரையில் ஆட்சி புரிந்தது!. இஸ்லாமியப் பேரரசு ஸ்பெயினிலிருந்து இந்தியாவரை பரவியிருந்ததாயினும், அரேபியா அப்பேரரசின் ஒரு மாகாணமாகவே இருந்துவந்தது. அன்றியும் 762-ல் அபுல் அப்பாஸ் என்பவன் கலீபாவாக ஆனவுடன் முஸ்லிம் பேரரசின் தலைநகரம் தமாஸ்கஸிலிருந்து பக்தாதிற்கு மாற்றப்பட்டது. அவனோடு அப்பாசிது வமிசம் ஆளத் தொடங்கிற்று. 7ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் கார்மேத்தியர்கள் என்னும் ஒரு கூட்டத்தாருடைய கலகம் ஏற்பட்டது. அவர்கள் தலைவன் அபுதாகிர் என்பவன். அவன் இருந்தவரையில் அக்கலகக்காரர்கள் மத்திய, தென் அரேபியா முழுவதையும் வென்று ஆண்டனர். கி. பி. 985க்குப் பிறகு அவர்களுடைய ஆட்சி ஒடுங்கி மறைந்தது. ஆயினும் அவர்களுடைய அதிகாரம் தென் அரேபியாவிலுள்ள பெதுவினர் கைக்கு மாறிற்று. 10ஆம் நூற்றாண்டில் அரேபியா சிறு நாடுகளாகப் பிரிந்து போயிற்று. மக்காவும் மதீனாவும் அரபுப் பிரபுக்கள் இருவரால் ஆளப்பட்டு வந்தன. அவர்கள் பக்தாதிலிருந்த கலீபாவின் மேலதிகாரத்தை ஏற்றுக்கொண்டனராயினும், சுயேச்சையாகவே இருந்தனர்.
11ஆம் நூற்றாண்டில் அப்பாசிது கலீபாவையே தலைவராக அராபியர்கள் ஏற்றுக்கொண்டனர். இதற்கு அக்கலீபாவின் படைத் தலைவனான செல்ஜுக் மாலிஷா போரில் அடைந்த வெற்றிகளே காரணம். 16ஆம் நூற் றாண்டில் நாட்டின் பெரும்பகுதி துருக்கியின் ஆதிக்கத் தின்கீழ் வந்தது. 1633-ல் காசிம் என்னும் யெமன் பிரதேசப் பிரபு ஒருவன் துருக்கர்களை விரட்டிச் சுதேச ஆட்சியை நிறுவினான். அவ்வாட்சி 1871 வரையில் நடந்தது.
18ஆம் நூற்றாண்டின் இடைப்பகுதியில் முகம்மது இபன் அப்துல் வாகாபு என்பவன் முகம்மது இபன்சவுத் என்னும் சிற்றரசனோடு சேர்ந்துகொண்டு, இஸ்லாமில் மிகுந்த நம்பிக்கையுள்ள வீரர்கள் சேர்ந்த ஒரு பெரும் படையைத் திரட்டித் துருக்கியின் ஆதிக்கத்தை எதிர்த்துப் போராடி, அராபிய ஐக்கியத்தைச் சாத்தியமாக்கினான். ஆயினும் 1872-ல் துருக்கியின் உத்தரவின் மேல் எகிப்தியப் படைகள் அரேபியாவில் வந்து மக்கா முதலிய இடங்களைக் கைப்பற்றின. வாகாபி இயக்கம் சில ஆண்டுகளில் மறைந்தது. ஆயினும் அரேபியாவில் தொடர்ந்திருந்து அந்நாட்டை அடக்கியாள எகிப்தியர்களுக்கும் முடியவில்லை. 1842-ல் பைசால் என்பவன் எகிப்திற்கு அரேபியாவிலிருந்த செல்வாக்கையொழித்து, வாகாபி ஆட்சியை மறுபடியும் நிறுவினான். இவன் 1867-ல், இறந்தபின் இவன் மகன் அப்துல்லா ஐந்து ஆண்டு ஆண்டான். இவனுக்குப் பிறகு அந்நூற்றாண்டு இறுதிவரையில் ஆண்ட மன்னர்கள் காலத்தில் அரேபியாவில் அரசியல் குழப்பமே மிகுந்திருந்தது. ரஷ்ய விவகாரங்களில் துருக்கி தலையிட்டுக் கொண்டிருந்ததால், அரேபியாவில் தனது ஆதிக்கத்தை நிலைநாட்ட முற்படவில்லை. அக்காலத்தில் முகம்மது இபன் ரஷீது என்பவன் தன்னுடைய திறமையால் தன் அதிகாரத்தை அரேபியாவில் நிலைநாட்டிக் கொண்டான். அவன் ஆட்சியைப் பலரும் புகழ்ந்தனர். 1900-ல் வாகாபி இயக்கத்தை மறுபடியும் தொடங்க முயன்ற அப்துர் ரஹிமான் என்பவன் தோல்வியே கண்டான். அவனுடைய மக்களில் ஒருவனான இபன்சவுத் என்பவன் அராபிய வரலாற்றில் பெரும் புகழ் பெற்றவன். அவன் முதலில் ஒரு சிறு படையோடு கிளம்பி ரியாதைக் கைப்பற்றினான். அதன் பிறகு அவன் ஆட்சி விரைவில் அரேபியாவில் பரவிற்று. புகாரையாவில் நடந்த போரில் துருக்கர்களை அவன் முறியடித்தான்.
இபன்சவுத் தற்கால அரேபியாவை இணைத்த பெருமையுடையவன். முதல் உலக யுத்தத்தில் அரேபியா பிரிட்டனுக்கு உதவி புரிந்தது. சவுத் ஆட்சி புரியும் அரேபியாவிற்குச் சவுதி அரேபியா என்னும் பெயர் 1932-ல் ஏற்பட்டது.
அரசியலமைப்பு: முதல் உலகப்போர் நடை பெற்றபோது அராபிய அரசியலமைப்பு வலுவுற்றது. அரசியல் உணர்ச்சியால் தன்னாட்சி பெற்றுள்ள நாடுகளில் முக்கியமும் பரப்புமுடையவை சவுதி அரேபியா, யெமன் (Yemen), ஓமன் என்பவை. சிறியவை : குவிட் (Kuwait), பாரேன் (Bahrein), ஓமான் கரைப் பிரதேசம், ஏடன் என்பவை.
சவுதி அரேபியா : பழைய அரசாகிய ஹெஜாஸ் (Hejaz), நெஷ்டு (Nejd) ஆகிய இரண்டும், அவற்றின் ஆதிக்கத்திலிருந்த நிலப்பரப்புக்களும் ஒன்றுசேர்ந்து, 1932-ல் சவுதி அரேபியா நாடு தோன்றியது. இரு நாடுகளாலான ஒரு நாடு என்பதற்கு அறிகுறியாக மக்கா, ரியாத் என்னும் இரு பட்டணங்களும் தலைநகரங்களாக இருக்கின்றன. அரசாங்கம் நான்கு மந்திரிகளின் உதவியால் நடைபெறுகிறது. அரசனின் மூத்தமகன் அரசப் பிரதிநிதியாகவும் படைத்தலைவனாகவும் நெஷ்டில் வசிக்கிறான். ஹெஜாஸ் நாட்டு அரசியல் திட்டம் 1926-ல் வகுக்கப்பட்டுப் பின்னர்த் திருத்தப்பெற்றுள்ளது. அந்த அமைப்பின்படி அமைச்சர் குழுவொன்று ஒரு தலைவன் கீழ் ஆட்சி புரிகின்றது. மன்னனின் இரண்டாவது மகன் உள்நாடு, அயல்நாடு ஆகிய இரு துறைகளின் அமைச்சனாயுள்ளான். தந்தை இல்லாதபோது அவனே ஹெஜாஸ் பகுதிக்கு அரசப்பிரதிநிதி. இஸ்லாமிய விதிகளே நாட்டுச் சட்டங்கள். இச்சட்டங்களைச் சமய சம்பந்தமாயுள்ள நீதிமன்றங்களே நிருவகிக்கின்றன. ஷாரியத் என்னும் இஸ்லாமியச் சட்ட இலாகாவிற்குத் தலைமை நீதிபதியே பொறுப்பாளி.
நாட்டு அரசியல் திட்டத்தில் சில ஆலோசனைச் சபைகள் இடம் பெற்றிருக்கின்றன; அவற்றில் ஒன்று மக்காவில் உள்ள சட்டசபை. மற்றவை மக்கா, மதீனா, ஜெட்டா (Jedda) நகரசபைகளும், நாடெங்குமுள்ள கிராமக் குடிகள் சபைகளுமாகும். முக்கிய அதிகாரிகளும் அரசனால் ஒப்புக்கொள்ளப்பட்ட அல்லது நியமிக்கப்பட்ட அறிஞர்களும் ஆலோசனைச் சபைகளில் உறுப்பினர்களாயுள்ளனர். தேசப் பாதுகாப்பிற்கு ஹெஜாசில் உள்ள நிலையான மூலப்படை ஒன்றையும், அவ்வப்போது சேர்க்கப்படுகிற பலதிறப்பட்ட படை வீரர்களையும் வேந்தன் நம்பி இருக்கிறான். சவுதி அரேபியா ஐக்கிய நாடுகளின் அமைப்பில் ஓர் உறுப்பாக இருக்கிறது. (மானிடவியல் பற்றியும், மொழி பற்றியும் தனிக் கட்டுரைகள் உண்டு). பார்க்க : அரபு மொழி; ஆசியா-தென்மேற்கு ஆசியா. தி. வை. சொ.