கலைக்களஞ்சியம்/அல்புமின்
அல்புமின் உயிரிகளில் உள்ள ரசாயனப் பொருள்களில் ஒருவகை கோழிமுட்டையிலுள்ள. வெள்ளை அம்பலி அல்லது வெண்கரு இதற்கு நல்ல உதாரணம். இது பிசுபிசுப்பான ஊன் தசை போன்றது. புரோட்டீன் என்னும் வகுப்பைச் சேர்ந்தது. கார்பன், ஹைடிரஜன், ஆக்சிஜன், நைட்டிரஜன், கந்தகம் கூடியது. இதில் பலவகைகளுண்டு. முட்டையிலிருப்பது ஒருவகை. பாலிலிருப்பது மற்றொரு வகை. இரத்தத்திலிருப்பது சீரம் அல்புமின் என்னும் இன்னொருவகை. தாவரங்களிலும் அல்புமின் உண்டு. வெண் கருவானது வெப்பம், அமிலம் அல்லது சில உப்புக்கள் பட்டால் இறுகி ஒளிபுகாத் திடப்பொருளாகிறது. நீர்ப்பொருள்களில் கலக்கிச் சுடவைத்தால், அல்புமின் அடியில் படிவாக நிற்கும். அல்லது மேலே கசடுபோல மிதக்கும். அப்போது அந்த நீர்ப்பொருள் தெளிந்து சுத்தமாகும். இதற்குக் காரணம் இது திடப்பொருளாக மாறும்போது நீர்ப்பொருளிலுள்ள அழுக்குக்களை யெல்லாம் திரட்டிக்கொண்டு வந்துவிடுவதேயாம். இந்தப் பண்பினாலே இது சர்க்கரை சுத்தி செய்தலிலும், சாயத் தொழிலிலும், போட்டோ மருந்துகள் தயாரிப்பதிலும் பயன்படுகின்றது. சில நஞ்சுகளுக்கும் இது மாற்று. சவ்வீரம் என்ற நஞ்சை உட்கொண்டுவிட்டால் அதற்கு வெண்கருவைக் கொடுக்கவேண்டும். வெண்கரு வயிற்றிற்குப்போய், அந்த விஷ உப்போடு சம்பந்தப்பட்டதும், அதன் கணங்களைச் சுற்றிக் கடினமான ஒரு திடப் பொருளாக மாறி அதை மூடிக்கொள்ளுகிறது. இந்தத் திடப்பொருளை இரைப்பையிலோ, குடலிலோ உண்டாகும் செரிமான நீர்கள் செரிக்கச் செய்ய முடிவதில்லை. நஞ்சு தீங்கு விளைவிக்காமல் வெளிவந்துவிடும்.
அல்புமின் எளிதாகச் செரிக்கக்கூடிய புரோட்டீன். ஆதலால் உடம்பை வளர்ப்பதற்கு இது மிக நல்ல, பொருள். நோயாளிகளுக்கு உத்தமமான உணவு. வெண்கருவை நீரில் நன்றாகக் குலுக்கி இறுத்து, அல்புமின் தண்ணீர் என்று டைபாயிடு முதலிய காய்ச்சல்களில் கொடுப்பதுண்டு.