கலைக்களஞ்சியம்/அல்பான்சோ XIII
அல்பான்சோ XIII (1886-1941) : இவன் தந்தை ஸ்பெயின் நாட்டு மன்னனான அல்பான்சோ XII என்பவன். தாய் ஆஸ்திரியா ஆர்ச் டச்சஸான மேரியா கிறிஸ்தினா. இவன் பிறப்பதற்குச் சில மாதங்கள் முன்பே இவன் தந்தை யிறந்துபோனதால் இவன் பிறந்தவுடனேயே ஸ்பெயின் நாட்டு மன்னனானான். 1902ஆம் ஆண்டுவரையில் இவன் தாய் இவனுக்கு அரசப் பிரதிநிதியாக இருந்தாள். அக்காலத்தில் ஸ்பெயின்-அமெரிக்க யுத்தம் நடந்தது. கியூபா, பிலிப்பீன் முதலிய தீவுகளை ஸ்பெயின் இழந்தது. விக்டோரியா அரசியின் பேர்த்தியான விக்டோரியா யூஜீனியாவை அல்பான்சோ மணந்துகொண்டான்.
இவன் ஆட்சிக் காலத்தில் நாட்டில் குழப்பம் இருந்தது. இவனைக் கொலை செய்ய இவனுடைய அரசியற் பகைவர்கள் எட்டு முறை முயன்றனர். 1923-ல் இவன் நாட்டின் ஆட்சியை பிரீமா டெ ரீவெரா (Prima de Rivera) என்னும் ராணுவச் சர்வாதிகாரி வசம் ஒப்புவித்தான். 1931-ல் ஸ்பெயினிலிருந்த குடியரசு வாதிகள் முடியாட்சியைக் கவிழ்த்து, அரசனை நாடுகடத்திவிட்டுக் குடியரசு நிறுவினர். ஸ்பானியப் பார்லிமென்டு அல்பான் சோவை நாட்டுத் துரோகி என்று தீர்மானித்தது. இம்மன்னன் 1941-ல் ரோம் நகரில் இறந்தான்.