உள்ளடக்கத்துக்குச் செல்

கலைக்களஞ்சியம்/அல்பாக்கா

விக்கிமூலம் இலிருந்து

அல்பாக்கா தென் அமெரிக்காவிலுள்ள புல் மேயும், அசைபோடும் விலங்கு. ஒட்டகக் குடும்பத்தைச் சேர்ந்தது. திமில் கிடையாது. இதன் மயிர் நீண்டு பட்டுப்போல் மிகவும் நயமாக இருக்கும். மிகவும் உயர்ந்த இந்த ரோமத்திற்காகவே இதை வளர்க்கின்றனர். குட்டிகளைச் சில சமயம் இறைச்சிக்காக அடிப்பதுண்டு. பெரு, பொலீவியா, சிலி நாடுகளின் மலைப்பிரதேசங்களில் கடல் மட்டத்திற்கு மேல் 8-12 ஆயிர அடி உயரங்களில் இது நன்றாகப் பெருகுகின்றது. அத்துணை உயரத்தில் வாழ்வதற்கு ஏற்றவாறு இதன் நுரையீரல் அமைந்திருக்கிறது. இது பார்ப்பதற்கு லாமா விலங்கைப்போலத் தோன்றும்; அவ்வளவு உயரமில்லை. தோளருகில் 4 அடி உயரமிருக்கும். மயிரைக் கத்தரிக்காமல் விட்டால் 8-16 அங்குல நீளம்

அல்பாக்கா

வளரும்; அடர்த்தியாக இருக்கும் ; கருமை, வெண்மை , சாம்பல் முதலாகப் பல நிறமாக இருக்கும் ; மென்மையும் கதகதப்புமான அழகிய ஆடை நெய்வதற்கு மிக நேர்த்தியான பொருள். இதைக்கொண்டு உயர்ந்த சால்வைகள் நெய்கிறார்கள். பெரு இந்தியர் பல நூற்றாண்டுகளாக இதனாற் செய்த அல்பாக்கா ஆடைகளை அணிந்து வந்திருக்கின்றனர். அல்பாக்கா என்று சொல்லும் துணியில் ஆட்டுமயிரும் பருத்தியும் பெரிதும் கலந்து விடுகிறார்கள். உண்மையான அல்பாக்கா சிறிதளவே இருக்கிறது. இப்போது சுமார் 10, 15 இலட்சம் அல்பாக்காக் கால்நடை இருப்பதாகக் கணக்கிடுகின்றனர். அல்பாக்கா வயிற்றிலிருந்து கோரோசனை எடுப்பதுண்டு. இதன் சிவப்பு இரத்த அணு ஒட்டகத்தின் இரத்தத்தில் இருப்பதுபோல் நீள்வட்ட வடிவுள்ளது. மற்றப் பாலூட்டிகளில் அது வட்டமாக இருக்கும். இந்தப் பிராணி ஒட்டகக் குடும்பத்தில் லாமா சாதியில் லாமா பாக்காஸ் (Lama pacos) என்னும் இனமாகும்.