கலைக்களஞ்சியம்/ஆக்
ஆக் (Auk) கடலில் நீந்தியும் முழுகியும் வாழும் பறவைச் சாதி ஆர்க்டிக் கடற்கரைப் பிரதேசங்களில் உள்ளது. கடற்காக்கை (Gull)க்கு நெருங்கிய உறவுடையது. இது நன்றாகப் பறக்கக்கூடியதன்று. ஆயினும் மிக வேகமாக நீந்தும். நீந்துவதற்குத் தன் சிறகுகளையே துடுப்பாக உபயோகிக்கும். குளிர் காலத்தில் கடலில் வாழினும், இளவேனிலில் இன்னும் வடக்கே சென்று பாறை நிறைந்த கடற்கரையில் முட்டையிட்டுக் குஞ்சு பொரிக்கும். அப்போது பல்லாயிரம் பறவைகள் ஒன்றாகத் திரண்டிருக்கும். ஒரு பெண் பறவை ஒரு முட்டைதான் வெறும் கல் தரையில் இடும். பெரிய ஆக் என்னும் பறக்க முடியாத ஓர் இனமிருந்தது. அது பெரிய வாத்தளவு இருந்தது. மனிதன் அதன் இறைச்சிக்கும் இறகுக்கும் ஆசைப்பட்டு, ஒரு பறவைகூட இல்லாமல் ஒழித்துவிட்டான். சின்ன ஆக் 8 அங்கும் நீளமுள்ளது.
ஆக்கள் அலகு மிகப் பெரியதாக இருக்கும். உள்ளே கடற்பஞ்சுபோல அதன் அமைப்பு இருக்கும்.