கலைக்களஞ்சியம்/ஆக்சின்
ஆக்சின் (Auxin) தாவரங்களின் வளர்ச்சியை முறைப்படுத்தி நடத்தும் ஹார்மோன் கூட்டம். வளர்ச்சி விரைவாக நடக்கும், கரு குருத்து, மொக்கு, தளிர், தண்டின்முனை முதலிய இடங்களில் இந்த ஆக்சின்கள் உண்டாகின்றன. செடியின் பாகங்கள் வெளிச்சத்தை நாடி வளர்ந்துவரச் செய்பவை இவையே. வெளிச்சம் தண்டின் ஒரு பக்கத்தில் விழுந்தால் ஆக்சின்கள் வெளிச்சம்படாத நிழலான பக்கத்தில் போய்ச் சேர்ந்துகொள்வதைக் காணலாம். இவை நிழலான பாகத்தில் மிகுதியாகச் சேரவே, அந்தப் பாகத்திலுள்ள உயிர் அணுக்கள் அதிகமாக வளர்கின்றன. ஆகவே வெளிச்சம் விழும் பாகத்தைவிட, வெளிச்சம் விழாத பாகம் அதிகமாக வளர்வதால், தண்டானது வெளிச்சம் இருக்கும் பக்கமாக வளைகிறது.ஆக்சின்கள் 1918-ல் கண்டுபிடிக்கப்பட்டன. கிளைகளைத் துண்டித்து நட்டுச் செடிகளை வளர்க்கும்போது அவற்றில் வேர் விரைவாக உண்டாவதற்காகத் தோட்டவேலை செய்வோர் ஆக்சின்களைப் பயன்படுத்துகின்றனர். இவற்றை இதற்காக விற்கிறார்கள். பார்க்க: ஹார்மோன்.