உள்ளடக்கத்துக்குச் செல்

கலைக்களஞ்சியம்/ஆக்சிகரணமும், குறைத்தலும்

விக்கிமூலம் இலிருந்து

ஆக்சிகரணமும், குறைத்தலும் (Oxidation and Reduction) : ரசாயன மாறுதல்களில் முக்கியமான இருவகைகள் ஆக்சிகரணமும் குறைத்தலும் ஆகும். முதன்முதலில் ஆக்சிகரணம் என்ற சொல் ஒரு தனிமத்துடன் ஆக்சிஜனைக் கூட்டுவதைக் குறித்தது. உதாரணமாக, கந்தகம் காற்றில் எரிந்து, கந்தக டையாக்சைடாக மாறுவது ஆக்சிகரணம். பின்னர் இது வேறு சில வினைகளுக்கும் பொதுப்பெயராகிறது. ஹைடிரஜனைக் கொண்ட ஒரு கூட்டிலிருந்து அதன் விகிதத்தைக் குறைப்பதும் ஆக்சிகரணம் எனப்படும். உதாரணமாக, ஹைடிரஜன் சல்பைடு காற்றிலே எரிந்து நீராகவும், கந்தகமாகவும் மாறுவது ஆக்சிகரணம். இன்னும் சில வினைகளில் ஆக்சிஜன் ஈடுபடாவிட்டாலும் அவையும் ஆக்சிகரணம் என்றே அழைக்கப்படுகின்றன. ஒருவினையில் ஒரு தனிமத்தின் நேர் அணுவலுவெண் (த. க.) ரசாயன விளைவினால் அதிகமானால் அவ்வினை ஆக்சிகரணம் எனப்படும். உதாரணமாக, அயச குளோரைடு அயக உப்பாக மாறினால் இதுவும் ஆக்சிகரணமே யாகும். இவ்விரு கூட்டுக்களிலும் ஆக்சிஜனே இல்லை. ஆனால் இவ்வினையினால் இரும்பின் அணுவலுவெண் இரண்டிலிருந்து மூன்றாக உயர்கிறது. பொதுவாகக் கூறினால், நேர்மின்சார அணுவை அகற்றும் வினையும், எதிர்மின்சார அணுவைச் சேர்க்கும் வினையும் ஆக்சிகரணம் எனப்படும். இத்தகைய வினைகளுக்குக் காரணமான பொருள்கள் ஆக்சிகரணிகள் எனப்படும். இதற்கு நேர்மாறான வினை குறைத்தல். குறைத்தல் என்பது ஒரு பொருளில் ஆக்சிஜனின் விகிதத்தைக் குறைப்பதாகும். உலோக ஆக்சைடை உலோகமாக மாற்றுவது இதற்கு உதாரணமாகும். அயக உப்பை அயச உப்பாக மாற்றுவதும் குறைத்தலேயாகும். இவ்வினையில் இரும்பின் நேர்வலுவெண் குறைகிறது. பொதுவாக ஒரு பொருளிலிருந்து எதிர்மின்சார அணுவை அகற்றும் வினையும், நேர்மின்சார அணுவைச் சேர்க்கும் வினையும் குறைத்தல் எனப்படும்.

சில வினைகளின்போது ஆக்சிகரணமும் குறைத்தலும் ஏககாலத்தில் நிகழும். உதாரணமாக, அயச சல்பேட்டும், பொட்டாசியம் பெர்மாங்கனேட்டும் வினைப்பட்டால் பொட்டாசியம் சல்பேட்டும், மாங்கனச சல்பேட்டும், அயக சல்பேட்டும் கிடைக்கின்றன. இதில் இரும்பின் வலுவெண் இரண்டிலிருந்து மூன்றாக அதிகரிப்பதால் இது ஆக்சிகரணமாகும். ஆனால் மாங்கனீசின் வலுவெண் ஏழிலிருந்து இரண்டாகக் குறைவதால் இது குறைத்தலுமாகும்.