உள்ளடக்கத்துக்குச் செல்

கலைக்களஞ்சியம்/ஆக்சி அசிடிலீன் ஊதுகுழல்

விக்கிமூலம் இலிருந்து

ஆக்சி அசிடிலீன் ஊதுகுழல் (Oxy acetylene blowpipe) என்பது ஆக்சிஜனையும் அசிடிலீனையும் கலந்து ஒரு குழலில் செலுத்தி எரிக்கும் அமைப்பாகும். இந்த இரு வாயுக்களும் கலந்து எரிவதால் மிக அதிகமான வெப்பம் தோன்றுகிறது. இவ்வாறு பெறப்படும் சுடரின் உச்ச வெப்பம் சுமார் 4400°வரை இருக்கலாம். ஆகையால் இது உலோக வேலைகளுக்கு மிகவும் ஏற்றது. உலோகத் தகடுகளை வெட்டவும், உறுப்புக்களைச் செப்பனிட அவற்றைப் பிரித்தெடுக்கவும் உலோக இணைப்புக்களைச் செய்யவும் இது பெரிதும் பயனாகிறது. உலோக உறுப்புக்களை வளைக்கவோ, நிமிர்த்தவோ, இதைப் பயன்படுத்தலாம். கண்ணாடிப் பொருள்களைத் தயாரிக்கும்போது இதைக்கொண்டு கண்ணாடியை உருக்கலாம். இச்சுடரைக் கொண்டு உலோகங்களை வெட்டும்போது வெட்ட வேண்டிய இடத்தின்மீது படும்படி வேறொரு குழாயின் வழியே ஆக்சிஜன் அனுப்பப்பெறுகிறது. ஆக்சிஜன் படும் உலோகபாகம் எரிந்து ஆக்சிகரணமாகிறது. இவ்வாறு தோன்றும் ஆக்சைடு சுடரின் விசையினால் தகர்வதால் உலோகம் துண்டாகிறது.

அழுத்தமான நிலையில் உருளைகளில் அடைக்கப்பட்ட ஆக்சிஜனும் அசிடிலீனும் குழாய்களின் வழியே ஊதுகுழலுக்குள் அனுப்பப்பட்டு எரிக்கப்படுகின்றன. இந்த வாயுக்களின் அளவைத் திருத்தமாகக் கட்டுப்படுத்தலாம். ஊதுகுழலைக் கையில் பிடித்துக் கொண்டோ, எந்திரங்களைக்கொண்டோ வேலை செய்வார்கள்.