கலைக்களஞ்சியம்/ஆக்சலேட்டுகள்
Appearance
ஆக்சலேட்டுகள்: ஆக்சாலிக அமிலத்தின் உப்புக்கள் ஆக்சலேட்டுகள் எனப்படும். கார ஆக்சலேட்டுகள் நீரிற் கரையுந் திறனுள்ளவை. கால்ஷியம் ஆக்சலேட்டு நீரிற் கரையாது. பொட்டாசியம்-அயச-ஆக்ச லேட்டு [Fe K2 (C2O2)2· H2O] மிக வலிவான குறைக்கும் பொருள். ஆகையால் போட்டோ உருத்துலக்கியாக இது பயன்படுகின்றது. பொட்டாசியம் அயக - ஆக்சலேட்டு சூரிய ஒளியால் சிதையும். ஆகையால் இது அச்சுத் தொழிலில் பயன்படுகிறது.
கரிம ஆக்சலேட்டுகளில், எதில் ஆக்சலேட்டு ஒரு திரவம். மெதில் ஆக்சலேட்டு ஒரு திண்மம். இவ்விரண்டும் நறுமணமுள்ளவை. மெதில் ஆக்சலேட்டிலிருந்து சுத்தமான மெதில் ஆல்கஹாலைத் தயாரிக்கலாம். ஆக்சாலிக அமிலத்தின் எஸ்டர்களை அம்மோனியாவால் வினைப்படுத்தினால் ஆக்சமைடு (Oxamide) என்ற கூட்டுக் கிடைக்கும். வெண்மையான தூளான இது பாஸ்வர பென்டாக்சைடுடன் வினைப்பட்டு சயனஜன் வாயுவை அளிக்கிறது.