கலைக்களஞ்சியம்/ஆசிரியப்பா
Appearance
ஆசிரியப்பா தமிழிலுள்ள நால்வகைப் பாக்களில் ஒன்று. இதற்கு அகவற்பா எனவும் பெயருண்டு. இது ஈரசைச் சீராகிய இயற்சீர் நான்கு கொண்ட அளவடிகளால் ஆசிரியத்தளையால் வரும். குறைந்த எல்லை மூன்றடி ; பேரெல்லைக்கு அளவில்லை. ஈரசைச் சீர்களேயன்றி,விளங்கனிச்சீர்கள் இரண்டு மொழிந்தபிற சீர்கள் வரவும் பெறும்; பிற தளைகளும் வரும். இது நான்கு வகைப்படும் : 1. ஈற்றயலடி முச்சீரடியால் வருவது நேரிசை ஆசிரியப்பா. 2. எல்லா அடிகளும் நாற்சீரடிகளாக வருவது நிலைமண்டில ஆசிரியப்பா. 3. முதலடியும் இறுதியடியும் நாற்சீரடியாய், இடையிலுள்ள அடிகள் இரண்டும் பலவும் இருசீரடியும் முச்சீரடியுமாக வருவது இணைக்குறளாசிரியப்பா. 4. எந்த அடியை முதல் நடு இறுதியாக அமைத்தாலும் பொருள் மாறாமல் இருப்பது அடிமறிமண்டில ஆசிரியப்பா.
ஆசிரியப்பாவின் இனம்: ஆசிரியத்தாழிசை, ஆசிரியத்துறை, ஆசிரியவிருத்தம் (த.க).