உள்ளடக்கத்துக்குச் செல்

கலைக்களஞ்சியம்/ஆர்க்காடு

விக்கிமூலம் இலிருந்து

ஆர்க்காடு ஆர்க்காடு மாவட்டத்தில் பாலாற்றங்கறையில் சென்னைக்குத் தென்மேற்கே 65 மைலில் உள்ளது. இந்தப் பெயர் நகரையும் மாவட்டத்தையும் குறிக்கிறது. ஆர்க்காடு மிகப் பழைய அரண் மிகுந்த அழகிய ஊர் எனவும், சேந்தன் என்பவனுடைய தந்தை அழிசியென்பவனுக்கு உரியதாயிருந்ததெனவும் குறுந்தொகை (258), நற்றிணைப் (190) பாடல்களால் தெரிகிறது. ஆர் என்பது ஆத்தி சோழர்களுக்குரிய பூ. ஆர்ப்பாக்கம், ஆரூர் என்பன ஆர் மரம்பற்றி வந்த பெயர்கள். ஆற்காடு என்றால் ஆலமரக்காடு எனப் பொருள்படலாம். ஆறு காடுகளையுடையது எனப் புராணங் கூறுகிறது என்ப. இதிலிருந்து ஷடாரண்யம் என்னும் வடமொழிப் பெயர் வந்திருக்கலாம். ஆர்க்காடு கருநாடக நவாபுகள் காலத்தில் அவர்களுடைய தலைநகராக இருந்திருக்கிறது. இங்குள்ள மசூதிகள் இதன் பழஞ்சிறப்பைக் காட்டுகின்றன. இங்கிருக்கும் டெல்லி வாயிலுக்கு மேலேயுள்ளது கிளைவ் இருந்த அறை என்பார்கள். நகர மக் : 21,124 (1951). பார்க்க: ஆர்க்காட்டு நவாபுகள், கருநாடகப் போர்கள்.

தென் ஆர்க்காடு : இது சென்னை இராச்சியத்தின் மாவட்டங்களுள் ஒன்று. இதன் தலைநகரம் கூடலூர் இதன் வட எல்லையில் வடஆர்க்காடு, செங்கல்பட்டு மாவட்டங்களும், மேற்கெல்லையில் சேலம், திருச்சிராப் ஆர்க்காடு பள்ளி மாவட்டங்களும், தென் எல்லையில் தஞ்சை மாவட்டமும், கிழக்கே கடலும் உள்ளன. பிரெஞ்சு நிருவாகத்திலுள்ள புதுச்சேரி இம்மாவட்டத்திற்குக் கிழக்கேயுள்ளது. இது ஆதியில் சோழ நாட்டின் ஒரு பகுதியாக இருந்தது. உடையார்கள் என்ற சிற்றரசர்

தென் ஆர்க்காடு

இதை 14ஆம் நூற்றாண்டில் ஆண்டனர். இதன்பின் தென்னாட்டை ஆண்ட மகாராஷ்டிர அரசரிடமிருந்து ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனியார் விலைக்கு வாங்கினர். கருநாடகப் போர்களின் போது கூடலூர், செயின்ட் டேவிட் கோட்டை, தியாக துர்க்கம், விருத்தாசலம், திருவண்ணாமலை, பரங்கிப்பேட்டை ஆகிய இடங்களில் முக்கியமான போர்கள் நிகழ்ந்தன. தென்னார்க்காட்டில் திருப்பாதிரிப்புலியூர், திருக்கோவலூர், சிதம்பரம், விருத்தாசலம், ஸ்ரீமுஷ்ணம் ஆகிய புண்ணியஸ்தலங்கள் உள்ளன. செஞ்சிக்கோட்டை (த.க.) பழமையான கோட்டைகளுள் ஒன்று. இதன் மேற்கெல்லையிலுள்ள குன்றுகளைத் தவிர மற்றப் பகுதிகள் மணற்பாங்கான சமவெளிகள். இதில் பாயும் முக்கிய ஆறுகள் பெண்ணையாறு, கெடிலம், கொள்ளிடம் ஆகியவை. இந்த மாவட்டத்திலுள்ள குழாய்க்கிணறுகளும்; ஏரிகளும், ஆறுகளும் பாசனத்திற்கு உதவுகின்றன. வேர்க்கடலையும் கரும்பும் முக்கியமான பயிர்களாம். நெய்வேலிக்கருகிலுள்ள பழுப்பு நிலக்கரிச் சுரங்கங்களின் முக்கியத்துவம் இப்போதுதான் தெரிந்துள்ளது. விருத்தாசலம், விழுப்புரம், கூடலூர் என்பவை முக்கிய ரெயில் சந்திப்புக்கள். இப்பகுதியில் கிடைக்கும் இருப்புத் தாதுக்களிலிருந்து பரங்கிப்பேட்டையில் இரும்பு பிரித்தெடுக்கப்பட்டு வந்தது. இம்மாவட்டத்தின் பரப்பு : 4,208 ச. மக்: 27,76,767 மைல். (1951).

வட ஆர்க்காடு: இம்மாவட்டம் முன்னர்ப் பல்லவ அரசின் ஒரு பகுதியாக இருந்தது. ஒளரங்கசீப் தென்னாட்டைக் கைப்பற்றிய பின் இது அவருடைய பிரதிநிதியான ஆர்க்காட்டு நவாபின் கீழ் வந்தது. கருநாடகப் போர்களின்போது ஆம்பூர், ஆர்க்காடு, வந்தவாசி, வேலூர் ஆகிய இடங்களில் போர்கள் நடைபெற்றன. இம்மாவட்டத்தின் தலைநகர் வேலூர். இதன் வடக்கே சித்தூரும், தெற்கே தென் ஆர்க்காடும், கிழக்கே செங்கற்பட்டும், மேற்கே சேலமும் எல்லைகளாக அமைந்துள்ளன. இதன் தென்மேற்கெல்லையில் கிழக்குத் தொடர்ச்சி மலைக்குன்றுகள் உள்ளன. இவற்றுள் சவ்வாது மலைகள் முக்கியமானவை. இவற்றில் காட்டெருமை, கழுதைப்புலி, சிறுத்தை, கரடி, மான்போன்ற பல காட்டு விலங்குகள் உண்டு. பாலாறும் செய்யாறும் இம்மாவட்டத்தில் பாயும் ஆறுகளில் முக்கியமானவை. பாலாற்றில் தரைக்கடியிலுள்ள நீரைப்பெற்றுக் கால்வாய்களின் உதவியால் பாசனத்திற்குப் பயன்படுத்துகிறார்கள். இம்மாவட்டத்தில் கிணற்றுப் பாசனமும் அதிகம். இம்மாவட்டத்தில் குருந்தமும் அப்பிரகமும் கிடைக்கின்றன. குப்பம் என்னும் இடத்தினருகே முன்னர்த் தங்கம் பிரித்தெடுக்கப்பட்டு வந்தது.

வட ஆர்க்காடு

குடியாத்தம், பேரணாம்பட்டு, ஆம்பூர், வாணியம்பாடி ஆகிய இடங்களில் தோல் பதனிடும் தொழிலும், ஆரணியிலும் செய்யாற்றிலும் பட்டு நெசவுத்தொழிலும், வாலாஜாப்பேட்டையில் துணிகளில் அச்சடிக்கும் தொழிலும் நடைபெறுகின்றன. திருவண்ணாமலையும் சோளிங்கபுரமும் புண்ணிய ஸ்தலங்கள். மாமண்டூரில் ஜோலார்ப் அழகிய சமணச் சிற்பங்கள் உள்ளன. பேட்டை, காட்டுப்பாடி, அரக்கோணம் முக்கியமான ரெயில் சந்திப்புக்கள். 4.648 ச. மைல். இம்மாவட்டத்தின் பரப்பு : மக் : 28,59,157 (1951).