கலைக்களஞ்சியம்/ஆர்க்காட்டு நவாபுகள்
ஆர்க்காட்டு நவாபுகள் : மொகலாயப் பேரரசரான ஔரங்கசீப் தட்சிணத்தை வென்றபின் அவருடைய தட்சிண சேனாதிபதியான சுல்பிகர் அலிகான் கருநாடக நவாபாக நியமிக்கப் பெற்றார் (1690-1703). இவருக்குப் பிறகு தாவூதுகான் இப்பதவியை வகித்தார் (1703-1710).
1707-ல் ஔரங்கசீப் இறந்த பிறகு மொகலாய சாம்ராச்சியம் சீர்குலைந்தது. 1713-ல் நிஜாம்-உல்-முல்க்- ஆசப்-ஜா தட்சிண சுபேதாராக நியமிக்கப்பெற்றார். பிறகு 1724 முதல் சுயேச்சையும் பெற்றார். இவருக்குக் கீழ்ப்பட்டு முகமத் சயத் சாதத் உல்லாகான் என்பவர் கருநாடகத்தை ஆண்டுவந்தார் (1710-32). இவர் இறந்த பிறகு இவருடைய தம்பி மகனான தோஸ்து அலிகான் நவாபு பட்டம்பெற்று ஆண்டுவந்தார் (1732-40).
1740-ல் மகாராஷ்டிரர்கள் இரகுநாத பான்ஸ்லேயின் தலைமையில் தென்னிந்தியா மீது படையெடுத்துத் தோஸ்து அலியைத் தோற்கடித்துக் கொன்றார்கள். நவாபின் மருமகனான சந்தா சாகிபைச் சிறைபிடித்துச் சதாராவுக்கு அழைத்துச் சென்றனர். தோஸ்து அலியின் மகனான சப்தர் அலி ஒரு கோடி ரூபாய் கொடுப்பதாய் ஒப்புக்கொண்டு, தம் இராச்சியத்தையும் தம் உயிரையும் காப்பாற்றிக்கொண்டார். ஆனால் 1742-ல் உறவினர் ஒருவரால் சப்தர் அலி கொலை செய்யப்பட்டார். இதன் பிறகு சப்தர் அலியின் மகனான II-ம் சாதத் உல்லா நவாபு பதவியைப்பெற்று இரண்டாண்டு பதவியிலிருந்தார். இதற்குள் கருநாடகத்தில் ஏற்பட்ட குழப்பத்தை நீக்கவேண்டுமென்ற எண்ணத்துடன் தட்சிண சுபேதாரான நிஜாம்-உல்-முல்க் கருநாடகத்திற்கு வந்து, அன்வாருதீன் முகமதை ஆர்க்காட்டு நவாபாக நியமித்தார். இவர் ஆட்சிக்காலம் 1744 முதல் 1749வரை. இதே காலத்தில் இந்தியாவில் பிரெஞ்சுக்காரர்களுக்கும் ஆங்கிலேயர்களுக்கும் போட்டியேற்பட்டு, ஒவ்வொருவரும் தத்தம் அதிகாரம் ஓங்குவதற்கு மறைமுகமாகவும், நேர்முகமாகவும் போரில் ஈடுபட்டனர்.
1748-ல் ஆசம்-ஜா-நிஜாம்-உல்முல்க் இறக்கவே ஐதராபாத்தில் பட்டப்போட்டி ஏற்பட்டது. ஆங்கில ஆதரவில் வாலாஜா முகம்மது அலி கருநாடக நவாபாக ஆனார் (1749-1795). மூன்றாவது கருநாடகப்போரில் பிரெஞ்சு தளபதி லாலி ஆர்க்காட்டைப் பிடித்தார் (1758). ஆனால் ஆங்கில தளபதி கூட் அதை மீட்டார். இன்ப வாழ்வில் காலத்தைக் கழித்துவந்த முகம்மது அலி ஆங்கிலச் சிப்பந்திகளிடம் நாட்டை ஈடுகாட்டி, ஏராளமாகக் கடன் வாங்கி 36% வட்டி செலுத்தினார். முதலுக்கும் வட்டிக்கும் ஈடாக ஜில்லாக்களின் வரி வசூல் உரிமையை ஆங்கிலச் சிப்பந்திகள் பெற்றனர்.
கவர்னர் ஜெனரல் கார்ன்வாலிஸ் காலத்தில் நவாபுடன் ஆங்கிலேயர்கள் ஓர் உடன்படிக்கை செய்து கொண்டார்கள் (1787). இதன்படி ஆங்கிலேயர்கள் 15 இலட்சம் வராகனைப் பெற்றுக்கொண்டு, கருநாடகத்தைக் காக்கும் பொறுப்பை ஏற்றுக்கொண்டனர். மூன்றாம் மைசூர்ப்போரில் (1790-92) ஆங்கிலேயர்கள் கருநாடகத்தைத் தங்கள் வசம் வைத்துக் கொண்டனர். இப்போர் முடிந்ததும் கருநாடகத்தை ஆங்கிலேயர்கள் நவாபிடம் ஒப்புவித்துவிட்டனர். ஆங்கிலேயருக்குக் கொடுக்கவேண்டிய காப்புப் பணம் 9 இலட்சம் வராகனாகக் குறைக்கப்பட்டது. முகம்மது அலி 1795-ல் இறந்தார். அவருக்குப் பிறகு அவருடைய மகனான உம்-தத்-உல்-உமரா கருநாடக நவாபு ஆனார் (ஆ.கா.1795-1801). நவாபு கடன் சுமையாலும், குடிகள் வரிச்சுமையாலும் துன்புற்றனர். கவர்னர் ஜெனரல் வெல்லெஸ்லி ஆங்கில ராச்சியத்தைப் பெருக்கும் நோக்கத்தைக் கொண்டவர். உம்-தத்-உல்-உமரா 1801-ல் இறந்தார். கருநாடகத்தை ஆங்கில ராச்சியத்துடன் சேர்க்க இதுவே தக்க சமயம் என்று வெல்லெஸ்லி கருதினார். உமராவும் முகம்மது அலியும் துரோகிகள் என்று வெல்லெஸ்லி அவர்கள் மீது குற்றம் சாட்டி, உமராவின் மகனான அலிஹுசேனுக்குப் பட்டம் இல்லையென்று உமராவின் தம்பி மகனான அசிம்-உத்- தௌலாவோடு ஒப்பந்தம் செய்துகொண்டார். இதன்படி அசிம் -உத்-தௌலா பெயரளவில் கருநாடக நவாபு என்று கருதப்படுவரென்றும், மொத்த வருவாயில் ஐந்தில் ஒரு பங்கு பென்ஷனாக நவாபு பெறுரென்றும், மாகாணத்தின் சிவில், ராணுவ நிருவாகம் முழுதும் ஆங்கிலேயர்கள் ஏற்றுக்கொள்ளுவரென்றும் முடிவு செய்யப்பட்டது (1801). கவர்னர் ஜெனரல் டால்ஹௌசி காலத்தில் நவாபு பட்டமும் ஒழிக்கப்பட்டது (1855). அவருடைய சந்ததியார்கள் ஆர்க்காட்டு இளவரசர்கள் என்று அழைக்கப்படுகின்றனர். எஸ். ஆர். பா.