கலைக்களஞ்சியம்/ஆர்க்டிக் வட்டம்
ஆர்க்டிக் வட்டம் (Arctic circle) வடக்கேயுள்ள மிதசீதோஷ்ண மண்டலமும் வடக்கே ஆர்க்டிக் பிரதேசமும் பிரியும் இடம். இவ்விடத்தைப் பூமத்திய ரேகையைப்போல ஒரு கற்பிதக்கோட்டைக் கொண்டு நிருணயிப்பது மரபு. இக்கோடு சுற்றி வந்து ஒருவட்டமாக முடியும். வட ரஷ்யா, கிரீன்லாந்து, நார்வே, சுவீடன், வட கானடா, அலாஸ்கா வழியாக இக்கோடு செல்வதாகக் கற்பிதம். வடதுருவத்திலிருந்து இவ்விடம் வரையுள்ள பிரதேசத்தில் ஒவ்வொரு ஆண்டிலும் ஒரே ஒரு நாள் (பெரும்பாலும் ஜுன் மாதத்தில்) 24 மணிநேரமும் பகலாகவேயிருக்கும்; அதே போல டிசம்பர் மாதத்தில் ஒரு நாள் 24 மணி நேரமும் இரவாயிருக்கும். இவ்வட்டத்திற்கு உட்பட்ட பிரதேசத்தை ஆர்க்டிக் பிரதேசம் என்றும் கூறுவதுண்டு. இந்த வட்டத்திற்கே உரிய சீதோஷ்ண நிலையும் தாவர விலங்கியல் சிறப்புப் பண்புகளும் மிகுந்துள்ள இடத்திற்கு ஆர்க்டிக் மண்டலம் என்று பெயர்.