உள்ளடக்கத்துக்குச் செல்

கலைக்களஞ்சியம்/ஆரியபட்டர்

விக்கிமூலம் இலிருந்து

ஆரியபட்டர் இந்தியக் கணக்கியல் பரம்பரையைத் தோற்றுவித்த பெரியார் எனலாம். இவர் சு. 476-ல் தற்காலத்தில் பாட்னா என்னும் நகருக்கருகிலிருந்த குசுமபுரம் என்னும் ஊரிற் பிறந்தார்; கேரளத்தைச் சேர்ந்தவர் எனக் கூறுவோரும் உண்டு. இவர் எழுதிய நூல்களுள் முக்கியமானது ஆரியபட்டீயம் எனப்படுவது. இது கீதிகம், கணிதம், காலக்கிரியை, கோளம் என்ற நான்கு பிரிவுகள் கொண்டது. இவற்றுள் கீதிகம் என்பது வானவியல் அட்டவணைகளின் தொகுப்பு. சைன் (Sine) அளவுகளைக் கண்டுபிடிக்கும் முறையையும், சைன் அட்டவணையையும் அவர் இதில் தந்திருக்கிறார். கணிதம் என்பது எண் கணித நூல். காலக்கிரியை. கோளம் ஆகியவை வானவியலுடன் தொடர்புள்ள நூல்கள்.

இவரது வானவியற் புலமை இவருக்குப் புகழைத் தந்தது. இவர் இத்துறையில் திருத்தமான கருத்துக்கள் பலவற்றை வழக்கத்திற்குக் கொண்டுவர முயன்றார். இவரது நூல் 33 ஈரடிச் செய்யுட்களால் ஆனது. இவர் எண் வரிசைகளிலிருந்து தொடங்கி, அடுக்குக் கணிப்பு, மூலக் கணிப்பு, பரப்பு, பருமன் ஆகியவற்றை விவரிக்கிறார். வானவியல் பிரிவில் இவர் வட்டம், நிழற் கணக்குக்கள் போன்ற பலவற்றைக் கூறுகிறார். விருத் திகள், சர்வசமங்கள், முதற்படி அநிச்சிதச் சமகரணங் கள் போன்ற இயற்கணிதக் கணக்குக்களும் (Algebra) இவற்றில் உள்ளன. வியக்கத்தக்க திருத்தத் துடன் π ன் மதிப்பு 3 (= 3.1416) என இவர் குறிக்கிறார். ஆனால் இதை இவர் எங்கும் பயன்படுத்தியதாகத் தெரியவில்லை. இவரது சிறு நூல் பல கணக்கியல் முடிபுகளைக் கொண்டு பிற்காலத்தில் தோன்றிய அறிஞருக்கு வழிகாட்டியாக அமைந்தது.

இதே பெயருள்ள இன்னொரு கணக்கியல் அறிஞரும் பழங்காலத்தில் வாழ்ந்தார் என்பதற்குச் சில சான்றுகள் உள்ளன. பார்க்க: கணிதவியல் வரலாறு-இந்தியக் கணிதவியல் வரலாறு.