கலைக்களஞ்சியம்/ஆலரிக் I
ஆலரிக் I (?-410) கீழைக் காத்தியர்களின் (Goths) அரசன்; ரோமில் தியடோசியஸ் என்னும் பேரரசன் ஆண்டுவந்த காலத்தில் அவனுடைய காத்திய சைனியங்களுக்குத் தலைவனாயிருந்தான். 395-ல் அப்பேரரசன் இறந்ததும், ரோமானிய சாம்ராச்சியத்தின் மேற்குப் பகுதிகளுக்கும் கிழக்குப் பகுதிகளுக்கும் இடையே ஏற்பட்ட பிளவுகள் ஆலரிக்குக்கு வசதியாயிருந்தன. அவன் கிரிஸிலுள்ள திரேஸ், மாசிடோனியா, ஆதன்ஸ் முதலிய இடங்களின்மீது படையெடுத்து அவற்றைக் கைப்பற்றினான். ஆயினும் மேற்கு இராச்சியத்தின் படை ஸ்டிலிகோ என்பவனுடைய தலைமையின்கீழ் வந்து கிரீஸில் இறங்கியதும், ஆலரிக்கால் மேலும் முன்னேற முடியவில்லை. 399-ல் அவன் இல்லிரிகம் என்னுமிடத்திற்குக் கவர்னராக நியமிக்கப்பட்டான். 401-ல் ஆலரிக் இத்தாலிமீது படையெடுத்தான். அப்போது பேரரசனாயிருந்த ஹொனோரியஸ் ஆலரிக்குக்குப் பயந்து ஓடிவிட்டான். ஆனால் ஸ்டிலிகோ மிலான் என்னுமிடத்தில் ஆலரிக்கைத் தோற்கடித்து நிறுத்தினான்; மற்ற ஆண்டும் படையெடுத்துப் பார்த்த ஆலரிக் அப்போதும் தோற்கடிக்கப்பட்டான். ஆனால் 408-ல் ஸ்டிலிகோ இறந்த பிறகு இத்தாலிமீது படையெடுத்து வந்து ரோம் நகரை 409-ல் முற்றுகை செய்தான். பஞ்சத்தினால் அந்நகரத்தவர்கள் கீழ்ப்படிய வேண்டியதாயிற்று. ஆலரிக்கின் வீரர்கள் அந்நகரைச் சூறையாடினர். ரோமானிய செனெட்டால் மன்னனாக நியமிக்கப்பட்ட அட்டாலஸ் என்பவனை முடிதுறக்கும்படி ஆலரிக் வற்புறுத்தி நீக்கிவிட்டான். நாசமாக்கப் பட்ட ரோம் நகரைவிட்டுத் தெற்கு இத்தாலியை வெல்லக் கருதி முன்னேறிய ஆலரிக் கடைசியில் ஆப்பிரிக்காவில் போய் ஓர் இராச்சியத்தை ஏற்படுத்திக்கொள்ள விரும்பினான். ஆனால் அவன் எண்ணங்கள் ஈடேறுமுன் கலாப்ரியா என்னும் இத்தாலிய மாகாணத்தில் அவன் இறந்துபோனான். அவன் உடல் புசென்டோ ஆற்றின் அடிமணலில் தோண்டிப் புதைக்கப்பட்டது. வரலாற்றில் கண்ட கொடிய போர்வீரர்களில் இவன் ஒருவன்.