கலைக்களஞ்சியம்/இடுகாடு
இடுகாடு (Cemetery) இறந்தவர்களை அடக்கம் செய்வதற்காக ஒதுக்கி வைக்கப்படும் இடம். பழங்காலத்திலிருந்தே இது இந்தியாவில் ஊருக்கு வெளியே உள்ள பொது இடமாக அமைக்கப்பட்டு வந்திருக்கிறது. நகராட்சிக் கழகங்கள் தோன்றியபின் இவற்றின் அமைப்பும், சவங்களைப் புதைக்கும் வகையும், கல்லறைகளைப் பாதுகாக்கும் முறைகளும் பொதுஜன சுகாதாரத்தை யொட்டித் திருத்தமாக வரையறுக்கப் பட்டுள்ளன. ஆகையால் இடுகாடுகளின் நிருவாகம் இப்போது நகராட்சிக் கழகங்களைச் சார்ந்ததாய் விட்டது. நகரங்களில் ஒவ்வோர் இனத்தவர்க்கும் தனித்தனி இடுகாடுகள் உள்ளன.கிறிஸ்தவ நாடுகளில் முன்னர் மாதாகோயிலின் அருகிலேயே சவங்களை அடக்கம் செய்து வந்தார்கள். இதனால் விளைந்த பல தொல்லைகளால் இம்முறை இப்போது கைவிடப்பட்டது. இந்தியாவைப் போலவே அங்கும் இப்போது ஊருக்கு வெளியே இதற்காக ஒதுக்கப்பட்ட இடங்களில் இடுகாடுகள் அமைக்கப் பட்டிருக்கின்றன. இக்காலத்தில் அமெரிக்காவில் இடு காடுகளில் மனைச்சிற்ப அழகு மிகுந்த பெரிய நினைவுக் கூடங்களைக் கட்டும் வழக்கம் அதிகமாகி வருகிறது. ஜப்பான் போன்ற சில கீழ்நாடுகளில் இவ்வழக்கம் தொன்று தொட்டே இருந்து வருகிறது.