சங்க இலக்கியத் தாவரங்கள்/095-150

விக்கிமூலம் இலிருந்து
 

வள்ளை
ஐபோமியா ரெப்டன்ஸ் (Ipomoea reptans,Poir.)

வள்ளை இலக்கியம்

‘வள்ளை’ என்பது தண்ணிரில் மிக நீண்டு வளரும் கொடி. இக்கொடியின் தண்டில் சிறு துளை இருக்கும். இதனைப் பரணர்,

“அம்தூம்பு வள்ளை அழற்கொடி மயக்கி
-அகநா. 376 : 14


என்று பாடுகின்றார். இதன் இலைகளைச் சமைத்துண்ண மகளிர் கொய்வர்.

“வளைக்கை மகளிர் வள்ளை கொய்யும்”-பதிற். 29 : 2

இக்கொடி நீர் வயலிலும் வளரும் என்பதைப் புறநானூறு கூறும். (புற. 399 : 6).

இக்கொடியில் ஊதா நிறமான மலர்கள் பூக்கும். வள்ளையின் கொடி வளைந்து (புறநா. 16 : 13) நெளிந்து, நீண்டு வளருமாதலின், (மது. கா. 255) இதனையே மகளிர் காதுக்கு உவமையாகக் கூறுகின்றது. பிற்கால இலக்கியம்.[1]

நிகண்டுகள் இதற்குத் ‘தாளிகம்’ என்ற ஒரு பெயரைச் சூட்டுகின்றன.

வள்ளை தாவர அறிவியல்

|

தாவர இயல் வகை : பூக்கும் இரு வித்திலைத் தாவரம்
தாவரத் தொகுதி : பைகார்ப்பெல்லேட்டே
(Bicarpellatae)
தாவரக் குடும்பம் : கன்வால்வுலேசி (convolvulaceae)
தாவரப் பேரினப் பெயர் : ஐபோமியா (Ipomoea)
தாவரச் சிற்றினப் பெயர் : ரெப்டன்ஸ் (reptans)
இது முன்னர் அக்குவாட்டிககா (aquatica) எனப்பட்டது.
சங்க இலக்கியப் பெயர் : வள்ளை
தாவர இயல்பு : நீர்க் கொடி. சுற்றிச் சுழன்று, வளைந்து, நெளிந்து, நீண்டு, நீரில் மிதந்து வளரும். ஒராண்டு வாழும் இயல்பிற்று. கொடித்தண்டில் சிறு துளையிருக்கும்.
இலை : தனியிலை. நீண்ட இலைக் காம்பு மூன்று பிளவானது. அடியில் உள்ள இரு பிளவுகள் 3 அங்குல அகலமானவை. நுனியில் உள்ள நீண்ட பிளவு 5 அங். நீளம் வரையிருக்கும்.
மஞ்சரி : நுனி வளராப் பூந்துணர்.
மலர் : ஊதா நிறமானது. புனல் வடிவானது. உட்புறக் கழுத்து சற்றுக் கருநீலமாக இருக்கும். அழகிய மலர்.
புல்லி வட்டம் : 5 புறவிதழ்கள். 2-3 அங்குலமுள்ள முட்டை வடிவானவை.
அல்லி வட்டம் : புனல் வடிவானது. 5 அகவிதழ்கள் அடியில் இணைந்து, குழல் போன்றும், மேலே ஊதா நிற மடல் விரிந்தும் அழகாகத் தோன்றும்.
மகரந்த வட்டம் : 5 மெல்லிய தாதிழைகள் அகவிதழ்களின் உள்ளே காணப்படும் தாதிழை
கள் ஐந்தும் ஒரே மாதிரியில்லை. தாதுப் பைகள் நீளமானவை. தாதுவின் புறத்தே நுண்ணிய முட்கள் செறிந்திருக்கும்.
சூலக வட்டம் : இரு செல் உடையது. நான்கு சூல்கள் சூல் தண்டு மெல்லியது. சூல்முடி உருண்டை வடிவானது. இரு பிளவானது
கனி : பளபளப்பான, நுண்மயிர் போர்த்திய 4-6 விதைகள் உண்டாகும். 2 வித்திலைகள் இரு பிளவானவை வளைந்து அமுங்கியிருக்கும். 4-6 வால்வுகளை உடைய காப்சூல் (உலர் கனி)

இதன் இலைகளை உணவாகக் கொள்வதுண்டு. தண்டில் சிறு துளை இருத்தலின் இக்கொடி நீரில் மிதந்து வளரும். இத்துளை உள்ள உண்மையைப் புலவர்கள் கூறுவர்.



  1. “வள்ளைத்தாள் போல் வடிகாது இலைகாண்”
    -மணிமே. 25 : 5