பக்கம்:அமைதி, பாரதிதாசன்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



ஊர்ப் பொதுச் சாவடியில் சிலர் மூட்டை முடிச்சுகளுடன் துயிலுகிறார்கள். ஆயினும், அவர்களில் ஒரு கணவனும் மனைவியும் துயில் நீங்கி எழுந்து மற்றவர்கள் துயில்வதையும் அவர்களின் அண்டையில் மூட்டை முடிச்சுகள் கேட்பாரற்றுக் கிடப்பதையும் பார்க்கிறார்கள். அந்த மூட்டைகளிற் சிலவற்றைத் திருடிச்சென்று சிறிது தொலைவிலுள்ள ஆலமரத்தின் வேரில் மறைத்து மீண்டும் துயில்வாரோடு தாமும் வந்து துயில்கிறார்கள்.

கிழக்கு வெளுக்கிறது. ஆலமரத்தை நோக்கி ஒரு கணவனும் அவன் மனைவியும் சுற்று முற்றும் பார்த்தபடி வருகிறார்கள். அவர்கள் திருடிப் பதுக்கிய மூட்டைகளைக் காணுகிறார்கள். அம் மூட்டைகளின் அண்டையில் வண்டு விழிகாட்டி மலர்முகம் காட்டிச் சிறிய மலர்க் கைகளும் கால்களும் அசைத்துக் கிடக்கும் ஒரு குழந்தையையும், குழந்தையின் அண்டையில், சில தங்க நகைகளும் பணமும் கிடப்பதையும், காணுகிறார்கள். மனைவி குழந்தையை வாரி அணைத்து முத்தமிடுகிறாள், கணவன் முகம் மகிழ்ச்சி கொள்ளுகிறது. ஆலமரத்தின்மேல் ஒரு நெஞ்சம் பூரித்துப் போகிறது.

பிள்ளையையும், பணம், நகை மூட்டைகளையும் எடுத்துக்கொண்டு கணவனும் மனைவியும் போகிறார்கள். ஆலமரத்தை விட்டு இறங்கிய மண்ணாங்கட்டி வேறு புறம் செல்லுகிறான்.

8