அறிவியல் வினா விடை - விலங்கியல்/உயிரி தொழில் நுட்பவியல்
Appearance
1. உயிரி தொழில்நுட்பவியல் என்றால் என்ன?
- உயிரிகள் உருவாக்கும் பொருள்களைப் புதிய தொழில் நுட்பத்தைக் கொண்டு அதிக அளவில் உருவாக்கிக் குறைந்த விலையில் மக்களுக்குக் கிடைக்குமாறு செய்வதை ஆராயுந் துறை. எ-டு. பாசுமதி அரிசி.
2. உயிரி தொழில்நுட்பஇயலில் பயன்படும் நுட்பங்கள் யாவை?
- படியாக்கம், நொதித்தல், கண்ணறை இணைவு, கருமாற்றம், ஆர்டிஎன்ஏ தொழில்நுட்பம், திசுவளர்ப்பு, கண்ணறை வளர்ப்பு முதலியவை ஆகும்.
3. உயிரி தொழில்நுட்பவியலின் வகைகள் யாவை?
- தாவர உயிரி தொழில் நுட்பவியல், விலங்கு உயிரி தொழில் நுட்பவியல்.
4. உயிரி தொழில்நுட்பவியல் இந்தியாவில் உரிய பலன் களைத் தந்துள்ளதா? ஏன்?
- இல்லை. 1956 முதல் 1998 வரை 950 கோடி செலவு செய்துவிட்டு அதிலிருந்து பெற்ற தொழில்நுட்பம் 1 1/2 கோடி ரூபாய்க்கே சமமானது. 40 ஆண்டுகள் ஆராய்ச்சிக்குப் பின் 24 தொழில் நுட்பங்களே நமக்குக் கிடைத்துள்ளன.
5. உயிரிதொழில்நுட்பவியலில் பயன்படும் துறைகள் யாவை?
- மருந்தியல், உணவுப்பதனம், தாவர உற்பத்தி, சூழ்நிலை மேலாண்மை.
6. உயிரி தொழில்நுட்பத் துறைக்காக விருது பெற்ற இந்தியப் பெண் அறிவியலார் மூவர் யார்? எப்பொழுது பெற்றனர்?
- 1. டாக்டர் பாம்ஜி, அய்திராபாத் டாங்கேரியா. அற நிறுவனம் ரூ. 100000.
- 2. டாக்டர் இலக்குமி, டாக்டர் சுவாமிநாதன் ஆராய்ச்சி நிலையம், சென்னை. ரூ. 50000.
- 3. டாக்டர் குரோவர், இந்தியத் தேசியக் கால்நடை ஆராய்ச்சி நிறுவனம், கர்னால், ரூ. 50000. இம்மூவரில் இவரே இளையவர். விருது பெற்ற ஆண்டு 2001.
7. உயிரி தொழில்நுட்பவியலின் வாழ்க்கைப் பயன்கள் யாவை?
- 1. நடைமுறைக்கேற்ற வேளாண்மையை மேற்கொள்ளல். புதிய பயிர் வகைகளை உருவாக்கல்.
- 2. உலகளாவிய உணவுப் பாதுகாப்பைப் பெறுதல்; பயிர்களைப் பாதுகாத்தல்.
- 3. மனித உடல் நலத்தைப் பெருக்கல்.
- 4. உழவர்களின் வாழ்க்கையில் ஒளியேற்றுதல்.
- 5. தாவரங்களிலிருந்து தடுப்பு மருந்துகளை உண்டாக்க லாம் - டிஎன்ஏ ஆவைன்.
- 6. நுண்பெருக்கம் மூலம் குறிப்பிட்ட தாவரங்களைப் பெரிய அளவில் பெருக்குதல்.
- 7. ஊட்ட உணவு வழங்குதல்.
8. உயிரி தொழில்நுட்பவியல் எவ்வாறு சிறப்பிக்கப்படுகிறது?
- புத்தாயிரம் உயிரி தொழில்நுட்ப ஆண்டு எனச் சிறப்பிக்கப்படுகிறது.