முல்லைக்காடு/அந்திப்போதின் கதி
அந்திப்போதின் கதி!
அந்தியும் மேற்கில் மறைந்தாள்—அவள்
ஆடையெனும் கருவானம்,
எந்தத் திசையிலும் காற்றில்—பறந்
தேறிடும் காட்சியும் கண்டீர்!
சிந்திய முத்து வடந்தான்—ஒளி
சேர்ந்திடு நட்சத்திரங்கள்!
சிந்தையிற் கோபம் அடைந்தாள்—அந்தி
சின்றமுகம் இங்குத் திருப்பாள்.
பாடுங் கடற்பெரு வேந்தன்—தன்
பங்கில் இருந்தன னேனும்,
நாடும் உளத்தினில் வேறு—தனி
நங்கையை எண்ணிடலானான்.
ஏடு திருப்பிப் படித்தால்—அந்தி
எப்படி ஒப்புவள் கண்டீர்!
ஆடி நடந்து வந்திட்டான்—அதோ
அந்தியின் நேர் சக்களத்தி!
கன்னங்கறுத்த நற் கூந்தல்—அந்தி
கட்டவிழ நடந்தாளே!
சென்னி புனைந்த கிரீடம்—மணி
சிந்திட ஓடி விட்டாளே!
யுளகன்னிம் வெறுத்தாளே—கடற்
காதலன் போக்கினை எண்ணி!
என்ன உரைப்பினும் கேளாள்-அந்தி
யின்முகம் கீழ்த்திசை காட்டாள்!
ஏடி ஒளிமுகத்தாளே!-- அந்தி!
என்னை மறந்தனை என்றே
கோடிமுறை அழைத்திட்டான்-உளம்
கொந்தளிப் புற்றுப் புரண்டான்!
வாடிய அந்தி நடந்த—அந்த
மார்க்கத்திலே விழி போக்கிப்,
பீடழிந்தான் அந்த நேரம்—ஒரு
பெண்வந்து பின்புறம் நின்றாள்!
வந்திடும் சோதி நிலாவைக்—கடல்
வாரி அணைத்தனன் கண்டீர்!
அந்தி பிரிந்ததினாலே—கடல்
ஆகம் இருண்டது; பின்னை
விந்தை நிலாவரப் பெற்றான்—கடல்
மேனியெலாம் ஒளிபெற்றான்!
சிந்தையை அள்ளுது கண்டீர்!—அங்குச்
சீதக் கடல் மதிச் சேர்க்கை!