உள்ளடக்கத்துக்குச் செல்

ஆடும் பெருமானும் அளந்த நெடுமாலும்/கண்டறியாதன கண்டேன்

விக்கிமூலம் இலிருந்து

கண்டறியாதன கண்டேன்

ண்டகாரண்யத்தில் பஞ்சவடியிலிருந்து சீதையை ராவணன் அபகரித்துப் போய் விடுகிறான். சீதையைத் தேடி ராமனும் லகஷ்மணனும் காடும் மலையும் கடந்து வருகிறார்கள். இவர்களைச் சொல்லின் செல்வனான அனுமன் எதிர்கொண்டு அழைத்து, அவனுடைய அரசனான சுக்ரீவன் இருக்கும் மலைப்பக்கம் இட்டுச் செல்கிறான். சுக்ரீவன் துரத்திலே வருகின்ற ராமனையும் லகஷ்மணனையும் பார்க்கிறான். முதல் முதல் அவனுக்கு இருவரது அழகுதான் தென்படுகிறது. புண்டரீகங்கள் பூத்து புயல் தழிப் பொலிந்த திங்கள் மண்டலம் உதயம் செய்த மரகதக் கிரிபோல் இருந்த இருவரையும்தான் முதலில் காண்கிறான்.

அந்த மரகதக் கிரிகளையே கொஞ்சம் உற்று நோக்குகிறான். அதன் பின் அப்போது தெரிகிறது அந்த அழகுக்குப் பின் அமைந்து கிடக்கும் அவர்கள் வீரம். 'வீரராய் விளைந்த அவ்விருவரையும் இன்னும் கொஞ்சம் கூர்மையாகவே சுக்ரீவன் நோக்கிய பிறகு விளங்கிற்று அவனுக்கு இவர்கள் அழகிய வீரர்கள் மட்டுமல்ல, 'அமரர்க்கெல்லாம் தேவராம் தேவர்கள்' என்று. அவர்களது தெய்வத் தன்மையை தேறி உணர்ந்த பின், மானுடராக அல்லவா இவர்கள் மாறி இப்பிறப்பில் வந்திருக்கிறார்கள் என்று நினைக்கிறான்.

ஆறுகொள் சடிலத்தானும், அயனும்
என்று இவர்களாதி

வேறுள குழுவை எல்லாம்
மானுடம் வென்றதம்மா!

என்றே ஆர்ப்பரிக்கிறான். இப்படி சுக்ரீவன் கண்டு, நோக்கித் தேறியதை கவிச்சக்கரவர்த்தி கம்பர் நிரம்பவும் அருமையாகக் கூறுகிறார்.

கம்பர் சொல்லும் கதையை விட்டு விடலாம். அவர் சொல்லும் இந்த மூன்று பாட்டுகளுக்குள் ஒளிந்து கிடக்கும் உண்மையை மட்டும் பார்க்கலாம். இந்த உலகத்திலே சிலர், கண்ணால் காண்டதை மட்டுமே உண்மை என ஒத்து கொள்கிறார்கள். அவர்கள் காட்சிக்கு அப்பாற்பட்ட அத்தனையையும் பொய் என ஒதுக்கித் தள்ளி விடுகிறார்கள்.

இன்னும் ஒரு சிலர், கண்ணால் காண்பதை விட அறிவால் அறியும் விஷயங்களும் உண்டு. அவைகளும் நல்ல உண்மைகள் தாம் என்று முன் சொன்னர்களை விட இன்னும் ஒரு படி மேலே செல்கிறார்கள். இவர்கள் நிலை உயர்ந்ததுதான்.

ஆனால் இந்த நிலைக்கும் அப்பாற்பட்டதும் ஒன்றிருக்கிறது. கண்ணால் காண்பதையும், அறிவால் அறிவதையும் விட, இறை அருளாலே தேர்ந்து தெளியும் நிலையும் ஒன்று உண்டு. அந்த நிலையில்தான், கண்டு அறியாதவற்றையும் கண்டு விடுகிறார்கள் பலர். கடவுளைக் காண்பது எளிதல்ல தான். ஆனாலும் அவன் அருளே கண்ணாகக் காணும் பேறு பெற்று விட்டால், கண்டு அறியாதவற்றையும் கண்டு விடலாம். 'கண்டறியாதன கண்டேன்' என்று அற்புதமாகப் பாடியும் விடலாம். அப்படிப் பாடியவர் அப்பர் அடிகள்.

அப்பர் பெருமான் கயிலாயத்தை நேரே தரிசிக்க விரும்பினார், காலால் நடந்தே புறப்பட்டு விட்டார். கால்கள் தேய்ந்து நடக்க முடியாமற் போயிற்று என்றாலும் விட்டாரில்லை. கையைத்தரையில் ஊன்றி ஊன்றி நடந்தார். அதிலும் தளர்ச்சி ஏற்பட்டபின் மார்பாலேயே ஊர்ந்து சென்றார். எப்படியும் கயிலை சேர்ந்து விட உறுதி பூண்டார். இந்த உறுதியை இறைவன் கண்டார். இறைவன், அவர் நின்ற இடத்திலேயே ஒரு திருக்குளத்தை தோற்றுவித்து அதில் மூழ்கி எழுந்திருக்கச் சொன்னார். அப்படி மூழ்கியவர் தான் திருவையாற்றுக்கு வந்தார். அங்கேயே கயிலையைக் கண்டார். இப்படி யாதும் சுவடு படாமல் ஐயாறு அடைகின்றார் அப்பர். அங்கும் கயிலாயத்தில் உள்ள நிலையை கண்டார். ஆம் காணுகின்ற பொருள்களில் எல்லாம் உயிர்களில் எல்லாம் சிவத்தையும் சக்தியையும் கண்டார்.

காதல் மடப் பிடியோடும்
களிறு வருவன கண்டேன்
கண்டேன் அவர் திருப்பாதம்
கண்டறியாதன கண்டேன்
பேடை மயிலோடும் கூடி
பிணைந்து வருவென கண்டேன்
கண்டேன் அவர் திருப்பாதம்
கண்டறியாதன கண்டேன்
வரிக்குயில் பேடை யோடு ஆடி
வைகி வருவன கண்டேன்
கண்டேன் அவர் திருப்பாதம்
கண்டறியாதன கண்டேன்

என்றெல்லாம் பாட முடிகிறது அவரால், உண்மை தானே. நாம் கண்ணாலே காண்பதெல்லாம் களிறையும் பிடியையும் மயிலையும் பேடையையும் தான். அறிவைத் துணைக் கொண்டு நோக்கி ஆண் பெண் இரண்டு பெரிய தத்துவங்கள் அந்த உயிர் பிராணிகளிடத்தே அடங்கிக் கிடப்பதையும் கூடக் கண்டு விடலாம்.

ஆனால் அவன் அருளே கண்ணாகக் கொண்டு பார்க்கும் போதுதான் சிவமும் சக்தியும் ஒன்றி நின்று, ஒவ்வொரு உயிர்த்தத்துவத்திலும் காட்சி கொடுப்பதைக் கண்டு விடுகிறார் அப்பர். கண்டு அறியாதன எல்லாவற்றையும் கண்டு எக்களிப்புடன் கூறுகிறார் நமக்கு. நமக்கு அந்த அனுபவம் எல்லாம் சித்தியாகவா போகிறது.

ஒரு கோயிலுக்குப் போகிறோம், இரண்டு நண்பர்களுடன். கொஞ்ச தூரத்தில் போகும் போதே கோயில் மதில், கோபுரம், விமானம் எல்லாம் தென்படுகிறது. காட்சியில் மட்டும் நம்பிக்கை வைத்துள்ள நண்பர் சொல்கிறார். என்ன! எல்லாம் கல்தானே கல்லால் கட்டிய கோயிலுக்கு என்ன இத்தனை முக்கியத்துவம் என்கிறார்.

நாம் சொல்கிறோம், இல்லை, கோயில் வெறும் கல்லில்லை - அந்தக் கல்லிலே தான் எத்தனை எத்தனை சிற்றுளி வேலைகளின் நயம். கோபுரத்தின் ஒவ்வொரு பகுதியும் - விமானத்தின் ஒவ்வொரு அடுக்கும் - அந்தக் கோயிலை உருவாக்கிய சிற்பியின் கலைத்திறனை அல்லவா பறை சாற்றுகின்றது. அங்கு கல்லையா பார்க் கிறோம். கல்லில் உருவான கலையையே அல்லவா காண்கிறோம் என்கிறோம் நாம்.

ஆனால் அந்த மூன்றாவது நபர் இருக்கிறாரே, எல்லோருடைய பேச்சையும் மௌனமாகவே கேட்டு விட்டு கடைசியில் சொல்கிறார் 'உண்மை தான், நேரிலே காண்பது கல். அறிவாலே தெரிந்து கொள்வது கலை. ஆனால் இந்தக் கல்லுக்குள் கனியாகவும், கலைக்குள் கடவுளாகவும் காண்கிறோமே அந்தத் தெய்வத் தன்மை, அதற்கென்ன சொல்வது' என்கிறார். ஆம் அவர் சொல்வது தான் எவ்வளவு பொருத்தம்.

கண்டு அறியாதவற்றைத் தானே காண்கிறார் அவர். நாமும் அவருடன் - அப்பருடன் சேர்ந்து கண்டறியாதன கண்டேன் என்று பாடி மகிழலாம் அல்லவா! அப்படியே பாடித் துதிப்போம் நாம் எப்போதும்.