உள்ளடக்கத்துக்குச் செல்

புது டயரி/தலையும் தவலையும்

விக்கிமூலம் இலிருந்து



தலையும் தவலையும்

“நேற்று இந்த வீட்டுக்குத் திருடன் வந்தான். இங்கே உள்ள அத்தையம்மாளின் தலை போயிற்று” என்று கடிதம் வந்தது. சம்பந்தப்பட்டவர்கள் அடித்துப் புடைத்துக் கொண்டு கடிதம் எங்கிருந்து வந்ததோ அந்த ஊருக்கு ஒடினார்கள். அத்தையம்மாள் கொலை செய்யப்பட்டாள் என்ற எண்ணத்தோடு போனார்கள். ஆனால் அந்த வீட்டுக்குள் நுழைந்தபோது அங்கே துயரச் சூழ்நிலையே இல்லை. அத்தையம்மாளே அவர்களே எதிர்கொண்டழைத்தாள். அவளைக் கண்டவுடன் சென்றவர்கள் எல்லாம் திடுக்கிட்டுப் போனார்கள்.

உண்மை இதுதான். அத்தையம்மாள் தான் வாழ்ந்த காலத்தில் ஒரு தவலையை வாங்கி வைத்துப் பாதுகாத்தாள். அவள் வாழ்விழந்தபிறகு அந்தத் தவலையோடு தன் பிறந்த வீட்டுக்கு வந்தாள். அங்கும் அதைக் கண்போலப் பாதுகாத்தாள். அந்தத் தவலையைத் திருடன் திருடிக்கொண்டு போய்விட்டான். கடிதம் எழுதின பையன், “தவலை போயிற்று” என்பதற்குப் பதிலாக, தலை போயிற்று என்று எழுதிவிட்டான். அதனால் வந்த விளைவு இது!

பேச்சிலும் எழுத்திலும் இப்படி எழுத்துப் பிழைகள் நேரும்போது எவ்வளவோ சங்கடங்கள் உண்டாகின்றன. இப்போதெல்லாம் அச்சுத் தொழில் மிகவும் விரிந்து  விட்டது. எதை எடுத்தாலும் அச்சுப் போட்டுவிடுகிறார்கள். எழுதுகிறவர்கள் பிழையுடன் எழுதினாலும் அதைப் பதிப்பிக்கிறவர்கள் பிழைகளைத் திருத்தி அழகாக அச்சிட வேண்டும். பிழை திருத்தாமல் அச்சுப் பிழைகளுடன் இருக்கும் புத்தகத்தைப் பார்த்தால் எனக்கு அம்மை வார்த்த முகந்தான் நினைவுக்கு வருகிறது.

சிறந்த பதிப்பாசிரியர்கள் அச்சுப் பிழைகளைக் கவனமாகத் திருத்துவார்கள். அச்சுப் பிழைகளை ‘அச்சுப் பிசாசு’ (Printer's Devil) என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள். அச்சுக் கோப்பவரோ, அக்சடிப்பவரோ என்ன செய்வார்? ‘புரூப்’ பார்க்கிறவர் நன்றாகப் பார்த்தால் புத்தகம் பிழையில்லாமல் இருக்கும். பழைய காலத்தில் அச்சகங்களில் நன்றாகப் படித்தவர்களே அச்சுக் கோப்பார்கள். அதனால் பிழைகள் இருப்பதில்லை. அந்தக் காலத்தில் இன்னர் அச்சுக் கோத்தார் என்று புத்தகத்திலே வெளியிட்டிருப்பார்கள். அச்சுத் தொழிலுக்கும் மதிப்புண்டு என்பதை அது காட்டும். இப்போதோ அப்படி எதிர்பார்க்க முடியாது. அவசர அடியில் தவலை போவதற்குத் தலை போவதே அதிகமாக இருக்கிறது.

என்னுடைய ஆசிரியப்பிரான் அந்தக் காலத்தில் கலைமகளில் முதல் கட்டுரையை எழுதி வந்தார்கள். ஒரு கட்டுரையில், ‘மாலை நேரத்தில் சுமங்கலிகள் விளக்கேற்றினார்கள்’ என்று எழுதியிருந்தார்கள். ஆனால் ‘புரூப்’பில் சுமங்கலிகள் அமங்கலிகள் ஆகிவிட்டார்கள். ‘பாரம் புரூப்’ வரைக்கும் அந்தப் பிழை வந்துவிட்டது. வேகமாக எழுதும்போது சு என்பதற்கும் அ என்பதற்கும் வேறுபாடு தெரியாது. அச்சுக் கோப்பவர் இயந்திரம்போல வேலை செய்கிறவராகையால் பொருளில் சிந்தை செலுத்தாமல் அ என்றே நினைத்துக்கொண்டு அடுக்கிவிட்டார். ‘அமங்கலிகள் விளக்கேற்றினார்கள்’ என்று அமைந்து  விட்டது. அந்தத் தவறு எப்படியோ இரண்டு முறை என் கண்ணிலும் உதவியாசிரியர் கண்ணிலும் படாமல் போய் விட்டது. ‘பாரம் புரூப்’ வந்தபோதுதான் கண்ணில் பட்டது. அப்போதும் படாமல் இருந்தால் என்ன ஆகியிருக்கும்?

நான் எழுதிய புத்தகம் ஒன்றில் பெருஞ்சோற்று உதியஞ்சேரலாதன் என்ற சேர மன்னனைப் பற்றிய செய்தி வருகிறது. அவனுக்கு வானவரம்பன் என்பது ஒரு சிறப்புப் பெயர். அவனுடைய புகழும் ஆணையும் வானம் வரையில் சென்றவை என்ற கருத்தையுடையது அந்தப் பெயர். புத்தகத்தை என் நண்பர்களும் நானும் ‘புரூப்’ பார்த்தோம். புத்தகம் வெளியாயிற்று அதைப் புரட்டிப் பார்த்தேன். வானவரம்பன் என்ற பெயர் எப்படி மாறியிருந்தது தெரியுமா? வானர வம்பன் என்று இருந்தது! வான வரம்பன் எங்கே வானர வம்பன் எங்கே? இரண்டு எழுத்துக்கள் இடம் மாறி விட்டதனதால் இந்த விபரீதம் நேர்ந்துவிட்டது.

மலையாளத்தில் ஒரு பழமொழி உண்டாம். ‘மூணாம் முறை பகர்த்தும் போழ், ஸமுத்ரம் மூத்ரமாகுன்னு’ என்பது அது. ‘மூன்ரும் முறை எழுதும்போது ஸமுத்ரம் மூத்ரமாகும் என்பது பொருள். ஏட்டுச் சுவடியைப் பார்த்து ஒருவன் பிரதி பண்ணினான். அதில் ஸமுத்ரம் என்ற வார்த்தை இருந்தது. எழுதுகிற வேகத்தில் அவன் ‘ஸ’கரத்தை விட்டு விட்டு முத்ரம் என்று எழுதிவிட்டான். அந்தப் பிரதியைப் பார்த்து மற்றொருவன் படியெடுத்தான். அவன் முத்ரம் என்ற வார்த்தையைப் பார்த்தான். அப்படி ஒரு வார்த்தை இல்லையே என்று மூத்ரம் என்று எழுதி விட்டான். மூலப்பிரதி ஒன்று, படியெடுத்த பிரதிகள் இரண்டு. மூலத்தில் ஸமுத்ரமாக இருந்தது மூன்றாவது அவதாரத்தில் மூத்ரமாகிவிட்டது. இரண்டும் உப்புநீர்  தானே என்று வேடிக்கையாகச் சமாதானம் சொல்லலாம். ஆனால் பொருள் எப்படியெல்லாம் விபரீதமாகிவிடுகிறது! இதனால்தான், “எழுதினவன் ஏட்டைக் கெடுத்தான்; படித்தவன் பாட்டைக் கெடுத்தான்” என்ற பழமொழி எழுந்தது. எழுதினவன் செய்தது பிரதிபேதம்; படித்தவன் பண்ணினது பாடபேதம்.

சொற்பொழிவாற்றுகிறவர்கள் பாடம் பண்ணின பாட்டில் ஒரு சொல்லையோ தொடரையோ நினைவு வராமையால் மாற்றிச் சொல்லிவிடுவார்கள். அதைக் கேட்டவர்கள் அதுவும் ஒரு பாடம் என்று எண்ணுவார்கள். அப்படித்தான் பாடபேதங்கள் வந்திருக்கின்றன.

எழுதும்போது லகரத்துக்கு ளகரமும் ளகரத்துக்கு லகரமும் வந்துவிட்டால் நேர் மாறான பொருள் உண்டாகும் இடம் பல. தெரியாத பையன் கடிதம் எழுதுகிறான். ‘உங்கள் உடம்பைப் பார்த்துக் கொல்ல வேண்டும்’ என்று எழுதுகிறான். பார்த்துக் கொள்ள வேண்டும் என்று எழுத நினைத்தவன், பிழையாக அப்படி எழுதிவிடுகிறான். இரண்டுக்கும் எத்தனை வேறுபாடு!

பேச்சிலேதான் நாம் எத்தனை பிழைகளைப் பண்ணுகிறோம் தமிழுக்கே சிறப்பான எழுத்து என்று நாம் பெருமையடித்துக் கொள்ளும் ழகரம் பலபேருக்குச் சரியாக வருவதில்லை. அதைச் சிறப்பு ழகரம் என்று சிலர் சொல்வார்கள். ஒரு பேராசிரியர் சிறப்பு ழகரத்தைப்பற்றிப் பேசுவார். “தமிளுக்கே உரிய சிறப்பு ளகரம் எப்படி யெல்லாம் கவிஞர்கள் வாக்கில் அளகாக வருகிறது! குளலும் யாளுமென் றினையன குளைய மளலை மென்மொளி கிளிக்கிருந்தளிக்கின்ற மகளிர் என்பதில் சிறப்பு ளகரம் எவ்வளவு எளிலாக அமைந்திருக்கிறது!” என்பார். அவருக்கே தாம் தவறாகச் சொல்கிறோமே என்று தெரியாது. முகரத்தைச் சரியாக உச்சரிப்பதாகவே அவர் பாவித்துக் கொள்வார். திருநெல்வேலி மாநிலத்தில் கிழவி கிளவியாகிறாள். சென்னையிலோ கெய்வியாகிறாள்; பழம் பயம் ஆகிறது. ழகரம் இவர்கள் வாயில் நுழையாது என்பதில்லை. வேண்டாத இடத்தில் அது வந்து நிற்கும். பைப் என்று தண்ணிர்க் குழாயைச் சொல்கிறோம். அதைச் சென்னையில் ‘பழுப்பு’ என்று பலர் சொல்கிறார்கள். குழாயைக் குயாய் என்று சொல்லும் அவர்கள் திருவாக்கில் வேண்டாத இடத்தில் ழகரம் வந்து தோன்றுகிறது.

தஞ்சாவூர் மாவட்டத்தில் சிலபேர் திருவாயில் ழகரம் ஷகரம் ஆகிவிடுகிறது. திருவிழாவைத் திருவிஷா என்கிறார்கள். உஷஸ் என்பதை உழையென்றும் கஷாயம் என்பதைக் கியாழம் என்றும் தமிழ்ப் புலவர்கள் ஆள்வதுண்டு. ஷகரத்துக்கு ழகரம் மாற்றாக வரும். அதற்குப் பழி வாங்குவதுபோல இவர்கள் ழகரத்துக்கு ஷகரத்தைக் கொண்டுவந்து, திருவிழாவைத் திருவிஷா ஆக்கிவிடுகிறார்கள்!

ணகரத்துக்கும் னகரத்துக்கும் வேறுபாடு தெரியாமல் சிலர் பேசுகிறார்கள். “செங்கோல் மண்ணன் ஆளும் மன்னில் குடிமக்கள் நன்றாக வாழ்வார்கள்” என்பதில் ணகரமும் னகரமும் தம்முள் பரிவர்த்தனை செய்துகொள்கின்றன!

இப்படி வந்த பிழைகளில் சில நாளடைவில் நிலையாக நின்றுவிடுகின்றன. இப்போதெல்லாம் நாம் உளுந்து என்றுதான் சொல்கிறோம். ஆனால் அதன் இயல்பான உருவம் ‘உழுந்து’ என்பதுதான். இப்போதோ ‘உழுந்து’ என்று சொன்னால் தவறுபோலத் தோன்றுகிறது; ‘அழுத்தந்திருத்தமாக உழுத்தம்பருப்பு என்றான்’ என்று பரிகாசம் செய்கிறோம்.  தவறான உச்சரிப்பைக் குறித்துப் பரிகாசமாக வழங்கும் உதாரணங்கள் சில உண்டு. அதிகமாக வட சொற்களைத் தவறாகச் சேர்த்துப் பேசும் பேர்வழிகளைப் பரிகசிக்க ஒரு வாக்கியம் வழங்குகிறது. “ஆஷ்டுக்குட்டி வேஷ்டியைத் தின்கிறது; ஓஷ்டு ஓஷ்டு என்கிறான்” என்பது அது. அப்படியே மிகவும் சுத்தமாகத் தமிழ் பேசுவதாக எண்ணிக்கொண்டு பேசுகிறவர்களைப் பரிகசிக்க எழுந்த வாக்கியம் இது: “கன்றுக்குட்டி மன்றைத் தின்று மன்று மன்றாய்ப் பேன்றது.”

பல ஆண்டுகளுக்கு முன் சேந்தமங்கலம் என்ற ஊரில் சில இளைஞர்களுக்குத் தமிழ்ப்பாடம் சொல்லி வந்தேன். அவர்கள் வாயில் லகர ழகர ளகரங்கள் சரியாய் வரவில்லை. அவர்களுக்கு அந்த எழுத்துக்களின் உச்சரிப்புச் சரியாக உச்சரிக்கும்படி செய்ய என்ன வழி என்று ஆராய்ச்சி செய்தேன். அருணாசல புராணத்தில் ஓர் அருமையான பாடல் கிடைத்தது. உண்ணாமுலையம்மை துதி அது. அதில் நிறைய லகர, ளகர ழகரங்கள் வருகின்றன. அந்தப் பாடலைப் பலமுறை அவர்களைப் படிக்கச் சொன்னேன். கடைசியில் சரியானபடி உச்சரிக்க முடிந்தது. அந்தப் பாடல் வருமாறு,

காரொழுகும் குழலாளைக் கருணைவழிந்
தொழுகும்இரு கடைக்கண் ணாளை
மூரலிள நிலவொழுகப் புழுகொழுக
அழகொழுகும் முகத்தி னாளை
வாரொழுகுந் தனத்தாளை வடிவொழுகித்
தெரியாத மருங்கு லாளைச்
சீரொழுகும் பதத்தாளை அருணைஉண்ணா
முலையாளைச் சிந்தை செய்வாம்.

இந்தப் பாட்டை ஒருவர் சரியாகச் சொல்லத் தெரிந்து கொண்டால் லகர, ளகர ழகர பேதங்கள் நன்றாக விளங் கும்படி உச்சரிக்க முடியும். அதுவும், “மூரலிள நில வொழுகப் புழுகொழுக அழகொழுகும் முகத்தினாளை” என்ற இரண்டாவதடி அவர்கள் நாக்கில் புரண்டால் ரோட்ரோலர் புரண்ட சாலை மாதிரி உச்சரிப்புச் சரியாகிவிடும்.

அருணகிரிநாதர் கந்தர் அலங்காரத்தில், “முருகன் புகழை எழுத்துப் பிழையறக் கற்க வேண்டும்” என்று ஒரு பாட்டில் சொல்கிறார்:

அழித்துப் பிறக்கவொட் டாஅயில்
வேலன் கவியையன்பால்
எழுத்துப் பிழையறக் கற்கின்றி
லீர்! எரி மூண்டதென்ன
விழித்துப் புகையெழப் பொங்குவெங்
கூற்றன் விடுங்கயிற்றால்
கழுத்திற் சுருக்கிட் டிழுக்குமன்
றோகவி கற்கின்றதே?

என்பது அந்தப் பாட்டு. இந்தப் பாட்டில் அவர் ஏழு ழகரங்களை வைத்திருக்கிறார். இதை முதல் பாடமாகப் படித்துவிட்டு அருணாசல புராணக் கவியை அடுத்த பாடமாகப் படித்தால் ஓரளவு எழுத்துப் பிழையின்றி ழகர ளகர லகரங்களை உச்சரிக்க முடியும் என்று எண்ணுகிறேன்.