காற்றில் வந்த கவிதை/மாட்டுக்காரன் பாட்டு
மாலை நேரம். கதிரவன் மேற்கு வானத்திலே நின்று மேகங்களினிடையே வர்ண ஜாலங்கள் செய்து கொண்டிருக்கிறான். இளங் காற்று வீசுகின்றது. அந்தக் காற்றிலே மிதந்து வருகிறது ஒர் இனிமையான கவிதை. அதைக் கவிதை என்று சொல்லுவதா, பாட்டு என்று சொல்லுவதா, உள்ளத்தின் மழலைத் துடிப்பு என்று சொல்லுவதா-என்ன சொல்வதென்று எனக்குத் தோன்றவில்லை. புலவர்களின் வரையறைகளை வைத்துப் பார்க்கும்போது அது கவிதை என்கின்ற வரம்புக்குள் அடங்குவது அரிது. ஆனால், அதில் கவிதையே இல்லையென்று கூற முடியாது. இசையுடன் கூடிய பாட்டா என்றால் ஆம் என்றுதான் கூறவேண்டும். ஆனால், அந்த இசை பண்பட்டதல்ல. இசையிலக்கண விதிகளுக்கு முற்றிலும் கட்டுப்பட்டதல்ல. என்றாலும் உள்ளத்தைத் தொடும் அம்சம் அதில் இல்லாமலில்லை. சூது வாது தெரியாத ஒருவனுடைய வெளிப்படையான பேச்சிலே இருக்கும் கவர்ச்சி அதிலே இருக்கிறது. உள்ளத்தில் அது நேராகப் படுகிறது,
எளிமையிலே ஒர் இன்பம். வெள்ளைச் சொல்லிலே ஒரு கவர்ச்சி. தெம்மாங்கு இசையிலே ஒரு குழைவு.
அந்தப் பாடலை யார் எழுதினர்கள்? யார் அதற்கு இசை அமைத்தார்கள்? எந்தக் காலத்திலே அது தோன்றி யது: எந்தச் சுவடியிலே அது இடம் பெற்றிருக்கிறது. யாருக்குமே தெரியாது.
வெள்ளை நெஞ்சம் ஒன்று தனது துடிப்பை என்ருே எப்படியோ பாட்டாக வெளியிட்டது. கலைச் சிறப்பை எல்லாம் எண்ணிப் பார்த்துக்கொண்டு அது தன் துடிப்பை வெளியிட முயலவில்லை. உள்ளத்திலே உணர்ச்சிபொங்கியது. அது பாட்டாக வெளியாகியது. அவ்வளவுதான். அது வெளி யாகும்போதே இசை வடிவத்தையும் கொண்டிருந்தது. அந்த இசை சேரும்போதுதான் அதன் உணர்ச்சி முழுவதும் வெளிப்படுவதுபோலப் பட்டது. அதனல் அதுவும் மலரும் மணமும்போலச் சேர்ந்தே பிறந்திருக்கிறது.
பாடிய நெஞ்சம் அந்தப் பாட்டிலே இன்பம் பெற்றது: அமைதியும் பெற்றது.
பிறகு எத்தனையோபேர் அதைப் பாடினர்கள். ஊரெல் லாம் பாடினர்கள். சென்ற இடமெல்லாம் பாடினர்கள்.
அந்தப் பாடல் நாடோடியாக எல்லா இடங்களிலும் பரவிவிட்டது. எங்கே தோன்றிற்று, எங்கே சென்றது என்றெல்லாம் திட்டமாகக் கூற முடியாதபடி அது காற்றிலே கலந்துவிட்டது. மக்கள் உள்ளத்திலே தங்கி விட்டது.
வேலை செய்யுமிடத்திலே அந்தப் பாடலைக் கேட்கலாம். வேலை முடிந்து ஒய்வு பெறும் இடத்திலே அதைக் கேட்கலாம். இன்பத்திலே கேட்கலாம். அப்பொழுது இன்பம் அதிகமாகிறது. துன்பத்திலே கேட்கலாம். அப்பொழுது துன்பம் தணிகிறது.
நாட்டுப்புறத்திலே அந்தப்பாடலைக் கேட்கலாம். கழனிகளிலே கேட்கலாம். கபடமறியாத மக்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்திலும் அதைக் கேட்கலாம்.
அப்படிப்பட்ட ஒரு வெள்ளைப் பாடலைத்தான் இந்த மாலை நேரத்திலே நான் கேட்டேன்.
பாடுகின்றவன் ஒரு இடைப் பையன். மாடுகளைப் பகல் முழுவதும் கழனிகளிலே மேய்த்துவிட்டு இப்பொழுது அவன் அவற்றைப் பண்ணைத் தொழுவத்திற்கு ஒட்டிக் கொண்டு செல்லுகிருன்.
அன்றைய கடமை முடிந்துவிட்டது. மாடுகளும் வயிறாற மேய்ந்திருக்கின்றன. இளங்கன்றுகளைப் பண்ணையிலே பிரிந்து வந்த தாய்ப் பசுக்கள் கன்றுகளை நினைந்து மடி சுரந்து வேகமாகச் செல்லுகின்றன. மாடு மேய்க்கும் பையனுக்குத் தனது வேலை முடிந்த களிப்பிலே ஒரு பாட்டுப் பாடத் தோன்றுகிறது. பாடுகிருன்.
ஏதோ ஒரு பாட்டு நினைவுக்கு வருகிறது. அதையே பாடுகிருன்.
பாறையிலே கிணறு வெட்டி ஏலேலோ சாமி
பாத்திக்கொரு நாத்து நட்டு ஏலேலோ சாமி
குட்டைப் பிள்ளை நட்ட நாத்து ஏலேலோ சாமி
குலுங்குதடி சீனிச் சம்பா ஏலேலோ சாமி
பாறையிலே கிணறு வெட்டி ஏலேலோ சாமி
பாத்திக் கொரு நாத்து நட்டு ஏலேலோ சாமி
அத்தை மகள் நட்ட நாத்து ஏலேலோ சாமி
ஆனைச் சம்பா குலுங்குதடி ஏலேலோ சாமி
[நாத்து-நாற்று. பிள்ளை-இளம்பெண். சீனிச் சம்பா, ஆனச் சம்பா என்பவை நெல்லில் இரண்டு வகைகள்.]
அந்த இடைப் பையன் எதற்காக இந்தச் சமயத்தில் அந்தப் பாட்டைப் பாடுகிருன்? காரணம் சொல்ல முடியாது. வேலை முடிந்ததால் அவனுக்கு ஒரு மகிழ்ச்சி பிறந்திருக்கிறது. அந்த மகிழ்ச்சியிலே அவனுடைய உள்ளம் அந்த நெற் பயிர்களைப் போலக் கூத்தாடி இருக்க வேண்டும். நெற் பயிர்கள் இளங்காற்றில் வளைந்து வளைந்து ஒயிலாக ஆடுவதைப் பார்த்தவர்களுக்கு அந்த இடைப் பையனுடைய மகிழ்ச்சி நன்ருகப் புலப்பட்டுவிடும். பொருத்தமான பாட்டைத்தான் அவன் பாடியிருக்கிருன் என்றும் நிச்சயமாகக் கூறுவார்கள்.
காற்று வெளியிலே வந்த அந்தப் பாடலையும் அதன் எளிய இசையையும் கேட்டு நான் அப்படியே நின்றிருந்தேன். நாடோடிப் பாடலின் இலக்கணத்தை இப்பாடல் எனக்கு நன்கு தெளிவாக்கியது.
நாடோடிப் பாடல்களிலே மக்களுடைய உள்ளத் துடிப்பைக் காணலாம். அவர்களுடைய ஆசை, அவர்களுடைய ஏக்கம், அவர்களுடைய கனவு, அவர்களுடைய உள்ளக் குமுறல்கள் எல்லாம் அப்பாடல்களிலே மிளிர்கின்றன. அதனுல்தான் நாடோடிப் பாடல்களின்மூலம் ஒரு நாட்டின் எளிய பண்பைக் காண முடியும் என்று கூறுகிருர்கள்.