உள்ளடக்கத்துக்குச் செல்

காற்றில் வந்த கவிதை/தாலாட்டு

விக்கிமூலம் இலிருந்து
தாலாட்டு

குழந்தையோடு கொஞ்சிக் கொஞ்சிப் பேசுவதென்றால் தாய்க்கு மட்டற்ற மகிழ்ச்சி உண்டாகிறது. தாய் சொல்லுகின்ற அத்தனை வார்த்தைகளையும் பச்சைக் குழந்தை தெரிந்துகொள்ளுகிறதோ என்னவோ நமக்குத் தெரியாது. ஆனால், தாயின் அன்புப் பேச்சிலே குழந்தை இன்பங் காண்கிறது என்பது நிச்சயம்.

சிலவேளைகளிலே குழந்தையை மடியில் போட்டுக் கொண்டு அதற்குத் தாய் பாட்டுச் சொல்லுவாள். குழந்தைக்கும் தாய்க்குமே புரிகின்ற மழலைப் பாட்டுத்தான் அது.

தாய் காலை நீட்டித் தரையிலே உட்கார்ந்திருக்கிருள். நீட்டிய கால்களின் மேல் குழந்தை படுத்திருக்கிறது. அதற்கு இப்பொழுதுதான் ஏதேதோ குழறிக் குழறி ஒலியெழுப்பும் வல்லமை தோன்றியிருக்கிறது. இன்னும் வார்த்தைகள் சொல்லவராது. குழந்தை அவ்வாறு ஒலியெழுப்பி அதிலேயும் இன்பமடைகிறது. ஊ...ஊ என்றும், ஊங்கு...ஊங்கு என்றும் குழந்தை பேசுகிறது. இடையிடையே நாக்கை வெளியே நீட்டுகிறது. கைகால்களை வேகமாக ஆட்டுகிறது. தாய் குழந்தையோடு பேசுகிருள். மகிழ்ச்சி ததும்பும் அவளுடைய வதனத்தைப் பார்த்துக் குழந்தை சிரிக்கிறது.

ஊங்கு என்ருல் குழந்தைக்கும் தாய்க்கும் தெரிகின்ற தனி மொழியில் பால் என்று பொருள். குழந்தை ஊங்கு என்று சொல்லுகிறது. தாய் அதையே வைத்து ஒரு பாட்டுப் பாடுகிறாள்.

ஊங்கு குடிக்கிறயா?
ஊறுகாய் தின்கிறயா?
பாலுக் குடிக்கிறயா?
பழஞ்சோறு தின்கிறயா?
அக்கக்கா ஊர்க்குருவி
ஆலாம் பழம்போடு
தின்னப் பழம்போடு
திருமுடிக்கோர் பூப்போடு

இப்படித் தாய் நீட்டி நீட்டிப் பாடுகிறாள். குழந்தை கைகளையும் கால்களையும் ஆட்டிக்கொண்டு உடம்பை நெளித்து நெளித்து ஆ...ஊ என்று பேசுகிறது. நாக்கை வெளியே நீட்டுகிறது.

நாக்கை நாக்கை நீட்டுதாம்
நல்ல பாம்புக் குட்டியாம்
ஊங்கு குடிக்கிறயா?
ஊறுகாய் தின்கிறயா?

என்று.மேலும் பாடுகிருள் தாய். இப்படிக் குழந்தையோடு கொஞ்சிக் கொண்டிருக்கிற தாய் பாட்டை நிறுத்துகிறாள். குழந்தை உறங்க வேண்டிய நேரம் வருகிறது.

தொட்டிலில் குழந்தையை அன்போடு வைத்துத் தாலாட்டுகிறாள். மறுபடியும் பாட்டுத் தொடங்குகிறது.

தாலாட்டும்போது பாடுகின்ற பாட்டுக்கள்தாம் எத்தனை எத்தனை! அவைகளிலே உள்ள கற்பனைகளும் எத்தனை! உறக்க மயக்கத்திலே அழத் தொடங்கிய குழந்தையும் தாலாட்டுப் பாடலைக் கேட்டு அழுகையை நிறுத்துகிறது: உள்ளம் மகிழ்கிறது. அப்படியே உறக்கத்தில் ஆழ்ந்து விடுகிறது.

ஆராரோ ஆராரோ ஆராரடித்தாரோ
ஆரடித்து நீயழுதாய் அஞ்சனக் கண் மைகரைய
கண்ணுன கண்ணேஎன் கண்குழிந்த மாம்பழமே
தின்னாப் பழமேஎன் தெவிட்டாத செந்தேனே
ஈச்சம் பழமேஎன் இனித்திருக்கும் தீங்கனியே
வாழைக் கணியேஎன் வரிக்கண் பலாச்சுளையே
கண்ணான கண்ணாற்குக் கண்ணாறு வாராமல்
சுண்ணாம்பு மஞ்சளுமாய் சுற்றியெறி கண்ணாற்கு
கண்ணை அடித்தவர்யார் கற்பகத்தைத் தொட்டவர்யார்
ஆராரோ ஆராரோ ஆராரடித்தாரோ
ஆரடித்து நீயழுதாய் அடித்தாரைச் சொல்லிடுவாய்

தாலாட்டுப் பாடலிலே மற்றொன்றைப் பார்க்கலாம். குழந்தைக்கு மாமன் தாயின் சகோதரனல்லவா? அவனிடத்திலே தாய்க்கு ஒரு தனிப்பட்ட அன்பிருப்பது இயல்பு. ஆதலால் தாய் எப்பொழுதுமே மாமனுடைய பெருமையைப் பேசுவதில் மகிழ்ச்சியடைகிறாள். மாமன் குழந்தைக்குக் கொண்டுவந்த பரிசொன்றைக் கூறி ஒரு தாய் தாலாட்டுகிறாள்.

கண்ணான கண்ணுறங்கு
கான மயிலே உறங்கு
தூங்காத கண்ணுக்குத்
துரும்பு கிள்ளி மையெழுதி
மையெழுதிப் பொட்டெழுதி
ஒன்று லக்ஷம் தேரெழுதி
அஞ்சு கிளி எழுதி
ஆறுமுகத் தேர் எழுதி
கொஞ்சு கிழி அஞ்செழுதிக்
கொண்டுவந்தார் உன் மாமன்
கண்ணான கண்ணுறங்கு
கான மயிலே உறங்கு

ஆரடிச்சார் உன்னையிங்கே
அழுது வந்தாய் வாய் நோக
அடிச்சவரைச் சொல்லிடுவாய்
ஆக்கினைகள் செய்திடுவோம்
தொட்டவரைச் சொல்லியழு
தொழுவிலே போட்டுவைப்போம்
யாரும் அடிக்கவில்லை
எவருமே தீண்டவில்லை
வம்புக்கழுதாயோ
வாயெல்லாம் தேன்வடிய
கண்ணான கண்ணுறங்கு
கான மயிலே உறங்கு

மானத்து மீனோ நீ
மேகத்து மின்கொடியோ
பாண்டவர்கள் செய்த
பதக்கத்துக் கல்லொளியோ
முன்னேர்கள் செய்தளித்த
மூக்குத்திக் கல்லொளியோ
மாது துரோபதைக்கு
வாய்த்த மருமகனே
கொத்தே மரிக்கொழுந்தே
கோமளமே நீயுறங்காய்
கண்ணான கண்ணுறங்கு
கான மயிலே உறங்கு

மாமனைப் புகழ்ந்து கூறும் தாலாட்டைப் பார்த்தோம். தந்தையைப் புகழ்ந்து பேசும் தாலாட்டில்லையா? நிச்சயமாக இருக்கிறது. எத்தனையோ பாடல்கள் உண்டு.

தாய் தனது குழந்தைக்கு அதன் தந்தையின் வீரச் செயலை எடுத்துக் கூறும் ஒரு தாலாட்டுப் பாடலை இப்பொழுது பார்ப்போம்.

கிராமத்திலே வாழ்கின்ற தாய் அவள். தன் கணவன் பகையாளியை விரட்டிய செய்தியை அவள் தாலாட்டுப் பாடலாகக் கூறுகிறாள்.

ஆராரோ ஆராரோ-கண்ணே நீ
ஆரிரரோ ஆராரோ
சட்டைமேலே சட்டை போட்டு-உங்களப்பன்
சருகைப்பட்டை மேலே போட்டு

தலைச்சவரம் பண்ணிக்கிட்டு-உங்களப்பன்
தலைப்பாவும் வச்சுக் கிட்டு
கோயமுத்தூர் போரதுக்கு-உங்களப்பன்
குடையைக் கையில் புடிச்சிக்கிட்டு
பாதம் ரண்டும் நோகாமல்-உங்களப்பன்
பாதகொரடும் போட்டுகிட்டு
சாரட்டு வண்டி கட்டி-உங்களப்பன்
சலங்கை போட்ட மாடுகட்டி
கோயமுத்துர் போராரு-உங்களப்பன்
கோழி கூவும் நேரத்திலே
பகையாளி பதுங்கி நிற்க-உங்களப்பன்
பார்க்காமல் போகையிலே
பறந்து பாஞ்சான் பகையாளி-உங்களப்பன்
பம்முனாரு பயமில்லாமே
பட்டாக்கத்தி விசையிலே-உங்களப்பன்
பறந்தானே பகையாளி
மாடு ரண்டும் மிரண்டோட-உங்களப்பன்
மத யானைபோல் முன்னே ஓடி
மடக்குளுரு மாடுகளே-உங்களப்பன்
மத்தியான வேளையிலே