உள்ளடக்கத்துக்குச் செல்

காட்டு வழிதனிலே/பாரதி வாக்கு

விக்கிமூலம் இலிருந்து

பாரதி வாக்கு


மிழ் நாடு தூங்கிக்கொண்டிருந்தது. கும்பகர்ணனைப்போல ஒரே தூக்கம். தூக்கத்தோடு தாழ்வு மனப்பான்மையும் சேர்ந்துகொண்டது. விழித்துப் பார்த்தவர்கள்கூட நம்மால் என்ன செய்ய முடியும் என்று சோர்ந்து கிடந்தார்கள். அந்தச் சமயத்திலே பாரதியார் வந்தார். “தமிழா எழுந்து நில், உன்னுடைய அறிவு, உன்னுடைய மொழி, உன்னுடைய கலைகள்—இவற்றைப் போல உலகத்திலே எங்கும் கிடையாது” என்று தமது கவிதைக் குரலிலே முழங்கினார்.

கவிதைக்கு ஒரு அற்புதமான மந்திர சக்தியிருக்கிறது. அதன் உண்மைக் குரலைக் கேட்டவுடனே தமிழர்கள் விழித்துக் கொண்டார்கள். எங்கிருந்தோ அவர்களுக்கு ஆச்சரியமான சக்தி பிறந்துவிட்டது. நாட்டிலே ஒரு புதிய யுகத்தைத் தோற்றுவிக்க அவர்கள் முனைந்துவிட்டார்கள்.

தமிழின் மறுமலர்ச்சிக்கும் தமிழர்களின் விழிப்புக்கும் முக்கிய காரணமாக யாராவது ஒருவரைச் சொல்ல வேண்டுமானல் அவர் பாரதியார்தான். எத்தனையோ அரசியல் தலைவர்கள், தியாகிகள், எழுத்தாளர்கள், பேச்சாளர்கள் இப்பணியிலே பங்கு கொண்டிருக்கிருர்கள். ஆனால், நிலைத்த தனிச்சிறப்புக்கு உரிய ஒரு சிலருள் பாரதியார் முக்கியமாவர் என்பது என் கருத்து.

பாரதியாரின் சீரிய, எண்ணங்கள் உணர்ச்சி பொங்கும் கவிதைகள் நாட்டு விடுதலைக்கு மட்டுமல்ல, மற்ற எல்லா முன்னேற்றங்களுக்கும் உதவியாக நமக்குக் கிடைத்திருக்கின்றன. அவற்றில் பல இன்னும் நூல் வடிவிலே வெளிவராமலிருக்கின்றன. வெளி வந்தனவும் வராதனவுமான சில கருத்துக்களைத் திரட்டி இங்கே தருகின்றேன்.

பாரதியார் நேரான பார்வையை விரும்புகிறார். கோணல் பார்வை, சாய்ந்த தந்திரப் பார்வை அவருக்குப் பிடிக்காது. அவருடைய படத்தையே பாருங்கள். கண்கள் நம்மை ஊடுருவிப் பாய்வன போல ஒளிர்கின்றன. பெண்களுக்கும் நிமிர்ந்த பார்வையும் நேர்கொண்ட நன்னடையும் வேண்டுமென்பவர் அவர்.

மேலும் அவர் சொல்லுகிறார்:—

“சாமான்ய ஜனங்கள் கண்ணை முழுவதும் விழித்துப் பார்க்காமல் அரைப்பார்வையும் கோணற் பார்வையும் பார்க்கும்படி செய்கிற அஞ்ஞானத்தையும் பயத்தையும் பழிக்கிறேன்”

“பொய் இல்லாவிட்டால் பார்வை நேராகும்—கவனி!
பொய் தீர்ந்தால் நேரே பார்க்கலாம்.
பயம் தீர்ந்தால் நேரே பார்க்கலாம்—கவனி!
பொய் தீர்ந்தால் பயம் தீரும்.

பயம் தீர்ந்தால் பொய் தீரும்”

என்று அவர் முழங்குகிறார்.

நம் நாட்டிலே யந்திரத் தொழில் விருத்தியாக வேண்டுமென்பது பாரதியார் விருப்பம்.

"இரும்பைக் காய்ச்சி உருக்கிடுவீரே
யந்திரங்கள் வகுத்திடுவீரே"


என ஏவுகின்றார். ஆனால், அதே சமயத்தில் யந்திரத் தொழிலினால் மனிதனுக்கு ஏற்படும் தீங்கையும் எடுத்துக் கூறி எச்சரிக்கை செய்திருக்கிறார்,

"யந்திரத் தொழிற்சாலைகள் மனிதரை மிருகங்களுக்குச் சமானமாகச் செய்துவிடுகின்றன. காலை முதல் மாலை வரை ஒருவன் ஒரு மனையின் மேலிருந்துத கொண்டு, நரக வாதனை போன்ற தீராத யந்திரச் சத்தத்தினிடையே, யந்திரத்திற்குள் கொஞ்சங் கொஞ்சமாகப் பஞ்சை நுழைத்துக்கொண்டிருந்து விட்டு சாயங்காலம் வீட்டிற்கு வந்தவுடன் குடித்து மதிமயங்கிக் கிடந்து மறுநாள் காலை பொழுது விடியுமுன்னே மறுபடி பஞ்சு போடப் போய்விடுகிறான். இவன் தன்னுடைய அறிவை விசாலப்படுத்தவும், தியானம் பூஜை முதலிய தெய்வ காரியங்கள் செய்யவும் நேரமெங்கே?

எப்போதும் இடைவிடாமல் அவன் காதில் யந்திரத்தின் பேய்க் கூச்சலும் கண்முன் இரும்பும் பஞ்சும் மாறாமல் இருப்பதால், அந்த மனிதன் நாளடைவில் மனிதத் தன்மை மாறித் தானும் ஒரு இரும்பு யந்திரம் போலாய்விடுகிறான்.”

யந்திரத் தொழிலில் இன்றுள்ள குறைகளை நீக்கி அதை வளர்க்க வேண்டுமென்பதே அவர் கருத்து. நம் நாட்டுச் செல்வவந்தர்களுக்கும் மடாதிபதிகளுக்கும் 1917-ஆம் ஆண்டில் பாரதியார் ஒருவேண்டு கோள் விடுத்திருக்கிறார். அது இன்று பன்மடங்கு அவசியமாக இருக்கின்றது. அந்த வேண்டுகோளே நிறைவேற்ற அனைவரும் முன் வந்தால் உலகத்துக்கு தன்மையுண்டாகும்; மக்கட் கூட்டத்திற்கு நன்மையுண்டாகும். அவர் கூறுவதாவது: “இவ்வுலகத்திலே நாம் செய்கிற ஒவ்வொரு செய்கையையும் ஸ்வப் பிரயோஜனத்தைக் கருதாமல் லோகோபகாரத்தை முன்னிட்டுக்கொண்டு செய்யவேண்டும். தீராத ஆவலும், அவசரமும், ஓயாத பரபரப்பும் உள்ள ஜ்வர வாழ்க்கை நாகரிகமாகமாட்டாது. சரியான நாகரிகத்துக்குச் சாந்தியே ஆதாரம், யந்திரப் பீரங்கிகளும் சப்மரீன்களும் நாகரிகத்து அடையாளமல்ல. நிலக்கரிச் சுரங்கங்களும் ஆகாச வெடி குண்டுகளும் அபிவிருத்திக்கு லக்ஷணமல்ல. அவை மனுஷ்யனுக்குப் பலமல்ல, துணையல்ல. அவை மனிதனுக்குப் பகை. மனிதனையும் அவனுடைய நாகரிகத்தையும் அழிக்கும் குணமுடையன.

கர்வத்தினாலே மரணமுண்டாகும். அடக்கம், பொறுமை, ஜீவகாருண்யம் என்ற குணங்களே உண்மையான நாகரிகத்தையும் நித்திய ஜீவனையும் விளைவிக்கும். இப்படி நூற்றுக்கணக்கான ஹிந்து தர்மக் கொள்கைகளை நாம் உலகத்தார் கேட்க முழங்குவதற்கு இதுவே நல்ல தருணம். இந்தச் சமயத்தில் மனித சமூகம் அழிந்து போகாமல் அதைக் காப்பாற்றி நல்ல வழியிலே சேர்க்கக்கூடிய ஜாதியார் நம்மைத் தவிர வேறு யாரும் இல்லை.” இவ்விஷயத்தை ஆழ்ந்து எண்ணிப் பார்த்து வெளி நாடுகளுக்கு நூற்றுக்கணக்காக சொற்பொழிவாளர்களே அனுப்பும்படி அவர் கேட்டுக்கொள்ளுகிறார்.

தமிழ் நாட்டிலே இசையைப்பற்றி ஒரு பெரிய விவாதம் நடக்கிறது. பாரதியார் இது சம்பந்தமாகத் நமது கருத்தை முன்பே வெளியிட்டிருக்கிறார்.

“பூர்விக மஹான்களுடைய பாட்டுகளை மறந்து போய்விடவேண்டும் என்பது என்னுடைய கட்சியன்று. அவற்றை அர்த்தத்துடன் பாடவேண்டும். பதங்களைப் பிழையாக உச்சரிக்கக் கூடாது. பதங்களை வாய்விட்டுத் தெளிவாகச் சொல்லவேண்டும். விழுங்கிவிடக்கூடாது. பத்து முப்பது கீர்த்தனங்களையே ஓயாமற் பாடி சங்கீதத்தை ஒரு தொல்லையாகச் செய்துவிடக் கூடாது.

“வித்வான்கள் பழைய கீர்த்தனங்களையே பாடம் பண்ணிப் புராதன வழிகளைத் தெரிந்து கொள்ளுதல் அவசியம். ஆனால், தமிழ்ச் சபைகளிலே எப்போதும் அர்த்தம் தெரியாத பிற பாஷைகளில் பழம் பாட்டுக்களை மீட்டும் மீட்டும் சொல்லுதல் நியாயமில்லை. அதனால் நமது ஜாதி சங்கீத ஞானத்தை இழந்துபோகும்படி நேரிடும்.”

மனித சமூகத்தின் நன்மைக்காகச் சாஸ்திரங்கள் ஏற்பட்டன. அவை காலத்திற்குத் தக்கபடி மாறும். ஒரு காலத்தில் நன்மை பயந்த ஒரு சாஸ்திர விதி மற்றெந்தக் காலத்திலும் நன்மை பயக்குமென்பதில்லை. ஆதலால், காலத்தை அனுசரித்து அதை மாற்றிக்கொள்ள வேண்டுமென்று பாரதியார் உபதேசம் செய்கிறார்.

‘சாஸ்திரம் மனிதனால் எழுதப்பட்டது. ஆதலால், இன்னும் நிறைவு பெறவில்லை. தெய்விக விதிகளைக் கூடியவரை பின்பற்றியே சாஸ்திரக் காரர்கள் எழுத முயற்சி செய்திருக்கிறார்கள். ஆனால், கால தேச வர்த்தமானங்கள் மாறுபடுகின்றன. தெய்வ விதிகளைப்பற்றிய புதிய வித்தைகள் வழங்கப்படுகின்றன. அப்போது சாஸ்திர விதிகளை மாற்றுதல் அவசியமாகிறது.

தர்ம சாஸ்திரத்தை எடுங்கள்: பஞ்சபாண்டவர் காலத்தில் ஒரு ஸ்தீரீ பல புருஷர்களை விவாகம் செய்து கொள்ளலாம். வேதவியாசர் காலத்தில் தமையன் பிள்ளையில்லாமல் இறந்து போனால் தம்பி அவனுக்குச் சந்ததி ஏற்படுத்திக் கொடுக்கலாம்.

“சாஸ்திரங்களை யெல்லாம் காலத்துக்குத் தகுந்த படி மாற்றிக்கொண்டு போகிறோம்.” காலத்திற் கேற்றபடி மாறுதல்கள் ஏற்படாத சமூகம் அழிந்து போகுமென்று பாரதியார் எச்சரிக்கை செய்கிறார்,

"நமது ஜன சமூகத்தில் மாறுதல்கள் நடக்க வேண்டும். மாறுதலே உயிர்த் திறமையின் முதற் குறியாகும். மேன்மேலும் செளகரியத்தை விரும்பித் தானகவே புதிய புதிய மாறுதல்கள் செய்து கொள்ளாத ஐந்துவை இயற்கைத் தெய்வம் வலிய வந்து கீழ் நிலைமைக்கு மாற்றுகிறது. புராதன ஆசாரங்களில் நல்லதைக் கடைப்பிடித்துக் கெட்டதை நீக்கிவிட வேண்டும். புராண மித்யேவ நஸாது ஸர்வம். பழமை என்ற ஒரே காரணத்தால் எல்லாம் நல்லதாய்விட்டது.” லோகோபகாரம் செய்யவேண்டும் என்பதையும் அதனால் சிறந்த பயனுண்டு என்பதையும் பாரதியார் எடுத்துக் காட்டியிருக்கிறார், லோகோபகாரத்தையே பரிபூரணமாகச் செய்வோன் மனித நிலை கடந்து அமர நிலை பெறுவான் என்கிறார் அவர்.


தெய்வம் உண்டு. நலம் செய்வோன் எவனும் கெட்ட வழி சேரமாட்டான் என்று கீதை சொல்லுகிறது. அவனுக்குக் கெடுதி நேரிடாதபடி அவனுடைய யோகஷேமத்தைத் தான் சுமப்பதாகத் தெய்வம் வாக்களித்திருக்கிறது. ஆனால், ஆரம்பத்திலே சோதனைகள் நேரிடும். மனந்தளராமல் லோகோபகாரம் செய்துகொண்டே போனால் பிறகு, சோதனைகள் நின்றுபோய் நன்மை உதயமாகும். லோகோபகாரத்தின் ஆரம்பத்தில் மனத்தளர்ச்சி ஏற்படுவது சகஜம்.

"ஏதடா இது, தெய்வத்தை நம்பி, தெய்வம் கர்த்தா, நாம் கருவியென்று நிச்சயித்து மற்றவர்களுக்கு நன்மை செய்யப்போன இடத்தில் நமக்குத் தீமை உண்டாகிறதே, கிணறு வெட்டப்போன இடத்தில் பூதம் புறப்படுகிறதே, உலகத்தைக் கிளி என்று நினைத்து அதன் பசி தீரப் பால் வார்க்கும்படி போனால் அது கழுகாக மாறி நம்மைக் கொத்துகிறதே என்று திகைத்துப்போய் மனிதன் லோகோபகாரத்தைக் கைவிடக் கருதுதல் சாமான்யம். இது தவறு. தெய்வம் நமக்குத் தகுதி ஏறும் பொருட்டாக நம்மைச் சோதனை செய்கிறது. உள்ளம் பதறாதிருந்தால் விரைவில் வானந் தெளியும்.”  எல்லா மனிதர்களும் சமமென்ற கொள்கையைச் சமூக வாழ்க்கையில் நிறுவும்வரை மானிடருள்ளே இகல், பொறாமை, வஞ்சனை, போர் முதலியவை நீங்கமாட்டா என்கிறார் பாரதியார்.

உலகத்தில் இன்பம் நிலைக்கும் நெறியை இந்தியாவே நிலைநாட்ட முடியும் என்பது பாரதியாருடைய நம்பிக்கை. காந்தி மகானுடைய கொள்கைகளே பாரதமாதாவின் உபதேசம் என்றும், அவற்றாலேயே உலகத்திற்கு உய்வு ஏற்படும் என்றும் குறிப்பாகக் காட்டும் பாட்டு ஒன்றைப் பாரதியார் ஆங்கிலத்திலிருந்து மொழிபெயர்த்துத் தந்திருக்கிறார். அதில் ஒரு பகுதி வருமாறு :

வருக காந்தி, ஆசியா வாழ்வே,
தரும விதிதான் தழைத்திட உழைப்பாய்,
ஆன்மா அதனால் ஜீவனை யாண்டு
மேனெறிப் படுத்தும் விதத்தினை யருளினாய்,
பாரதநாட்டின் பழம்பெருங் கடவுளர்
வீரவான் கொடியை விரித்து நீ நிறுத்தினாய்
மானுடர் தம்மை வருத்திடும் தடைகள்
ஆனவையுருகி அழிந்திடும் வண்ணம்
உளத்தினில் நீகனல் உறுத்துவாய் எங்கள்
காந்தி மஹாத்மா, நின்பாற் கண்டனம்
மாந்தருட் காணநாம் விரும்பிய மனிதனை
நின்வாய்ச் சொல்லில் நீதிசேர் அன்னை
தன்வாய்ச் சொல்லினைக் கேட்கின்றனம் யாம்
தொழுந்தா யழைப்பிற் கிணங்கி வந்தோம் யாம்
எழுந்தோம், காந்திக் கீந்தோம் எமதுயிர்.

இவ்வாறு பாரதியாருடைய வாக்கினில் நாம் போற்றி மனத்திற் கொள்ளவேண்டிய உயர்ந்த கருத்துக்கள் பல இருக்கின்றன. அவற்றையெல்லாம் அறிந்துகொள்வது முன்னேற்றத்திற்கு உதவியாக இருக்கும்.