தந்தையும் மகளும்/33
33அப்பா! திருவனந்தபுரம் போகும் வழியில் ரயில் ஆரியாங்காவு, மலைக்குடைவுக்குள் நுழைந்ததும் அதிகமாகச் சப்தம் கேட்கிறதே. அதற்குக் காரணம் என்ன?
ஆம், அம்மா! ரயில் வெளியில் ஓடும்பொழுது உண்டாகும் சப்தத்தைவிட மலைக்குடைவுக்குள் ஓடும் பொழுது உண்டாகும் சப்தம் அதிகமாகத்தான் இருக்கிறது. ஆனால் ரயில் அதிகமான சப்தம் செய்வதாகச் சொல்லுகிறோமே. வெளியில் ஓடுவது போலவேதான் உள்ளேயும் ஓடுகிறது. ஆயினும் அதிகமாகச் சப்தம் கேட்பதேன்?
சப்தம் என்பது காற்றில் உன்டாக்கப்படும் அலைகள், நம்முடைய காதுக்குள் வந்து தோல்பறையில் பட்டு மூளையை அடையும்போது உண்டாகும் உணர்ச்சிதான் என்பதை நீ அறிவாய். அதுபோல் ரயில் வெளியே ஓடும் போது அதிலிருந்து வரும் சப்த அலைகள் நாலா பக்கங்களிலும் பரவுகின்றன. அவற்றில் சில நம்முடைய காதுக்கு வந்து சேருகின்றன. மற்றவை வராமல் போய் விடுகின்றன.
ஆனால் ரயில் மலைக்குடைவுக்குள் ஓடும்போது சப்த அலைகளில் சில நம்முடைய காதுக்கு வருகின்றன. மீதியுள்ளவை மலைக்குடைவின் சுவரில் மோதி, அங்கிருந்து திரும்பி நம்முடைய காதுக்கே வந்து சேர்கின்றன. இப்படி அதிகமான அலைகள் வருவதால்தான் காது வெடிக்கும்படியாக உரத்த சப்தம் உண்டாய் விடுகிறது.