உள்ளடக்கத்துக்குச் செல்

தந்தையும் மகளும்/105

விக்கிமூலம் இலிருந்து


105 அப்பா! டாக்டர் வந்தால் ஏதோ ஒன்றை நெஞ்சில் வைத்துப் பார்க்கிறாரே, அதற்குக் காரணம் என்ன?

அம்மா! அதை நெஞ்சில் மட்டும் வைத்துப் பார்ப்பதில்லை.வயிற்றில் கூட வைத்துப் பார்ப்பதுண்டு. நம்முடைய உடம்பிலுள்ள இருதயம், சுவாசப் பைகள், குடல் போன்ற உறுப்புகளில் ஏதேனும் நோயுண்டாயிருக்கிறதா என்று அறியவே டாக்டர் அதை உபயோகிக்கிறார். அந்த உறுப்புக்கள் வேலை செய்யும் பொழுது உண்டாகும் ஒலிகள் ஒழுங்கான முறையில் கேட்குமானால் நோயில்லை என்றும் ஒழுங்கற்ற முறையில் கேட்குமானால் நோயுண்டு என்றும் தெரிந்து கொள்ளலாம். ஆனால் அந்த ஒலிகளைக் காது வைத்துக் கேட்டால் நன்றாகப் புலப்படா. அதற்காக அமைக்கப் பட்டதே அவர் உபயோகிக்கும் "ஸ்டெதாஸ் கோப்" என்று ஆங்கிலத்தில் கூறும் உடல் ஒலிச் சோதினியாகும்.

அந்தக் கருவியில் மணிபோல் ஒன்றிருக்கும். டாக்டர் அதை நோயாளி உடம்பில் பரிசோதிக்க வேண்டிய இடத்தில் வைத்துக்கொண்டு இரு கவராக உள்ளவற்றின் முனைகளைத் தமது இரண்டு காதுகளிலும் வைத்துக் கொண்டு கேட்பார். அப்பொழுது மணி உருவமான பாகம் உடலில் உண்டாகும் ஒலியை அதிகச் சப்தமாகப் பெருக்கி டாக்டருக்கு நன்றாகத் தெளிவாகக் கேட்கும்படி செய்யும்.

இந்தக் கருவியைக் கண்டு பிடித்தவர் ரெனே லேனக் என்னும் பிரஞ்சு வைத்தியர். அவர் அதை 1816ம் ஆண்டில் கண்டுபிடித்து, 1819ம் ஆண்டில் இன்ன ஒலி கேட்டால் இன்ன நோய் என்று ஒரு பட்டியல் தயாரித்து வெளியிட்டார். இப்பொழுது அது நோய்ப் பரிசோதனைக்கு அதிகப் பயன் தருவதாக இருந்து வருகிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=தந்தையும்_மகளும்/105&oldid=1538280" இலிருந்து மீள்விக்கப்பட்டது