எதிர்பாராத முத்தம்/பாடல் 8
8
அவள் எழுதிய திருமுகம்
பொன்முடி கடையிற் குந்திப்
புறத் தொழில் ஒன்று மின்றித்,
தன்மனத் துட்புறத்தில்
தக தக என ஒளிக்கும்
மின்னலின் கொடி நிகர்த்த
விசித்திரப் பூங்கோதைபால்
ஒன்று பட்டிருந்தான் ! கண்ணில்
ஒளியுண்டு; பார்வை யில்லை!
கணக்கர்கள் அங்கோர் பக்கம்
கடை வேலை பார்த்திருந்தார்.
பணம் பெற்ற சந்தோஷத்தால்
பண்டாரம் விரைந்து வந்தே
மணிக்கொடி இடையாள் தந்த
திருமுகம் தந்தான்; வாங்கித்.
தணலிலே நின்றிருப்போர்
தண்ணீரில் தாவுதல்போல்,
எழுத்தினை விழிகள் தாவ
இதயத்தால் வாசிக்கின்றான்.
“பழத்தோட்டம் அங்கே; தீராப்
பசிகாரி இவ்விடத்தில்!
அழத்துக்கம் வரும் படிக்கே
புன்னையில் உம்மைக் கட்டிப்
புழுதுடி துடிப்ப தைப்போல்
துடித்திடப் புடைத்தார் அந்தோ!
புன்னையைப் பார்க்குந் தோறும்
புலனெலாம் துடிக்க லானேன்;
அன்னையை, வீட்டிலுள்ள,
ஆட்களை, அழைத்துத் தந்தை
என்னையே காவல் காக்க
ஏற்பாடு செய்து விட்டார்!
என் அறை தெருப் பக்கத்தில்
இருப்பது நானோர் கைதி!
அத்தான்!என் ஆவி உங்கள்
அடைக்கலம்! நீர் மறந்தால்
செத்தேன்! இஃதுண்மை. இந்தச்
செகத்தினில் உம்மை அல்லால்
சத்தான பொருளைக் காணேன்!
சாத்திரம் கூறுகின்ற
பத்தான திசை பரந்த
பரம் பொருள் உயர்வென்கின்றார்.
அப்பொருள் உயிர்க் குலத்தின்
பேரின்பம் ஆவ தென்று
செப்புவார் பெரியார் யாரும்
தினந்தோறும் கேட்கின்றோமே;
அப்பெரி யோர்க ளெல்லாம்
—வெட்கமாய் இருக்கு தத்தான்—
கைப்பிடித் தணைக்கும் முத்தம்
ஒன்றேனும் காணார் போலும்!
கனவொன்று கண்டேன் இன்று
காமாட்சி கோயி லுக்குள்
என தன்னை, தந்தை, நான், இம்
மூவரும், எல்லா ரோடும்
தொன தொன என்று பாடித்
துதி செய்து நிற்கும் போதில்,
எனது பின் புறத்தில் நீங்கள்
இருந்தீர்கள் என்ன விந்தை!
காய்ச்சிய இரும்பாயிற்றுக்
காதலால் எனது தேகம்!
பாய்ச்சலாய்ப் பாயும் உம்மேல்
தந்தையார் பார்க்கும் பார்வை!
கூச்சலும் கிளம்ப, மேன் மேல்
கும்பலும் சாய்ந்த தாலே,
ஓச்சாமல் உம்தோள் என்மேல்
உராய்ந்தது சிலிர்த்துப் போனேன்!
பார்த்தீரா நமது தூதாம்
பண்டாரம் முக அமைப்பை?
போர்த்துள்ள துணியைக் கொண்டு
முக்காடு போட்டு, மேலே
ஓர் துண்டால் கட்டி மார்பில்
சிவ லிங்கம் ஊச லாட,
நேரினில் விடியுமுன்னர்
நெடுங்கையில் குடலை தொங்க,
வருகின்றார்; முகத்தில் தாடி
வாய்ப்பினைக் கவனித்தீரா?
பரிவுடன் நீரும் அந்தப்
பண்டார வேஷம் போடக்
கருதுவீரா என் அத்தான்?
கண்ணெதிர் உம்மைக் காணும்
தருணத்தைக் கோரி, என்றன்
சன்னலில் இருக்கவா நான்?
அன்னையும் தந்தை யாரும்
அறையினில் நம்மைப் பற்றி
இன்னமும் கட்சி பேசி
இருக்கின்றார்; உம்மை அன்று
புன்னையில் கட்டிச் செய்த
புண்ணிய காரியத்தை
உன்னத மென்று பேசி
உவக்கின்றார் வெட்க மின்றி!
குளிர்புனல் ஓடையே, நான்
கொதிக்கின்றேன் இவ்விடத்தில்!
வௌியினில், வருவதில்லை;
வீட்டினில், கூட்டுக் குள்ளே
கிளியெனப் போட்ட டைத்தார்
கெடுநினைப் புடைய பெற்றோர்!
எளியவள் வணக்கம் ஏற்பீர்!
இப்படிக் குப் பூங் கோதை.”