உள்ளடக்கத்துக்குச் செல்

எதிர்பாராத முத்தம்/பாடல் 9

விக்கிமூலம் இலிருந்து


9

நுணுக்க மறியாச் சணப்பன்


பொன்முடி படித்த பின்னர்ப்
புன்சிரிப்போடு சொல்வான்:

“இன்றைக்கே இப்போதே ஓர்
பொய்த்தாடி எனக்கு வேண்டும்,

அன்னத னோடு மீசை
அசல் உமக்குள்ள தைப்போல்

முன்னே நீர் கொண்டு வாரும்
முடிவுசொல் வேன் பின்“ என்றான்.

கணக்கர்கள் அவன் சமீபம்
கை கட்டி ஏதோ கேட்க

வணக்கமாய் நின்றி ருந்தார்;
வணிகர் சேய் கணக்கர்க் கஞ்சிச்

சணப்பன் பண்டாரத் தின் பால்
சங்கதி பேசவில்லை.

நுணுக்கத்தை அறியா ஆண்டி
பொன்முடி தன்னை நோக்கி,

“அவள் ஒரு வெள்ளை நூல்போல்
ஆய்விட்டாள்” என்று சொன்னான்.

”அவுஷதம் கொடுக்க வேண்டும்
அடக்” கென்றான் செம்மல்! பின்னும்.

”கவலை தான் அவள் நோய்” என்று
பண்டாரம் கட்டவிழ்த்தான்.

”கவடில்லை உன் தாய்க்” கென்று
கவசம் செய் ததனை மூடிக்,

”கணக்கரே ஏன் நிற்கின்றீர்?
பின்வந்து காண்பீர் என்றான்

கணக்கரும் போக லானார்;
கண்ட அப்பண்டாரந்தான்,

அணங்குக்கும் உனக்கும் வந்த
தவருக்குந் தானே என்றான்,

குணமிலா ஊர்க் கதைகள்
கூறாதீர் என்று செம்மல்,

பண்டாரந் தனைப் பிடித்துப்
பரபர என இழுத்துக்

கொண்டேபோய்த் தெருவில் விட்டுக்,
”குறிப்பறி யாமல் நீவிர்
    
குண்டானிற் கவிழ்ந்த நீர்போல்
கொட்டாதீர்” என்றான். மீண்டும்
    
பண்டாரம், கணக்கர் தம்மைப்
பார்ப்பதாய் உள்ளே செல்ல,

பொன்முடி “யாரைப் பார்க்கப்
போகின்றீர்?” என்று கேட்டான்.

“பொன்முடி‘ உனக்கும் அந்தப்
பூங்கோதை தனக்கும் மெய்யாய்
    
ஒன்றும் சம்பந்த மில்லை
என்று போய் உரைக்க எண்ணம்“

என்று பண்டாரம் சொன்னான்.
பொன்முடி இடை மறித்தே,

பண்டாரம் அறியத் தக்க
பக்குவம் வெகுவாய்க் கூறிக்,

கண்டிடப் பூங்கோதைபால்
காலையில் போக எண்ணங்
    
கொண்டிருப்பதையுங் கூறிப்,
பிறரிடம் கூறி விட்டால்

உண்டாகும் தீமை கூறி
உணர்த்தினான் ! போனான் ஆண்டி.