எதிர்பாராத முத்தம்/பாடல் 10

விக்கிமூலம் இலிருந்து


10

விடியுமுன் துடியிடை


சேவலுக்கும் இன்னுமென்ன தூக்கம்? இந்தத்
தெருவார்க்கும் பொழுது விடிந்திட்ட சேதி.
தேவையில்லை போலும்! இதை நான்என்
                                    [தாய்க்குச்
செப்புவதும் சரியில்லை. என்ன கஷ்டம்!
பூவுலகப் பெண்டிரெல்லாம் இக்கா லத்தில்
புதுத்தினுசாய்ப் போய்விட்டார்! இதெல்லாம்
                                      [என்ன?
ஆவலில்லை இல்லறத்தில்! விடியும் பின்னால்;
அதற்குமுன்னே எழுந்திருந்தால் என்ன குற்றம்!
விடியுமுன்னே எழுந்திருத்தல் சட்டமானால்
வீதியில்நான் இந்நேரம், பண்டாரம்போல்
வடிவெடுத்து வரச்சொன்ன கண்ணாளர்தாம்
வருகின்றா ரா வென்று பார்ப்பே னன்றோ?
துடிதுடித்துப் போகின்றேன்; இரவி லெல்லாம்
தூங்காமல் இருக்கின்றேன். இவற்றை யெல்லாம்
ஒடிபட்ட சுள்ளிகளா அறியும்? என்றே
உலகத்தை நிந்தித்தாள் பூங்கோ தைதான்.

தலைக்கோழி கூவிற்று! முதலில் அந்தத்
தையல்தான் அதைக்கேட்டாள். எழுந்திருந்தாள்

கலைக்காத சாத்துபடிச் சிலையைப் போலே
கையோடு செம்பில்நீர் ஏந்தி ஓடி,
    
விலக்கினாள் தாழ்தன்னை! வாசல் தன்னை
விளக்கினாள் நீர் தெளித்து! வீதி நோக்கக்

குலைத்ததொரு நாய் அங்கே! சரிதான் அந்தக்
கொக்கு வெள்ளை மேல் வேட்டிப் பண்டாரந்தான்

என்று மனம் பூரித்தாள், திருவிழாவே
எனைமகிழ்ச்சி செய்ய நீ வாவா என்று

தன் முகத்தைத் திருப்பாமால் பார்த்திருந்தாள்
சணப்பனா? குணக்குன்றா? வருவதென்று

தன் உணர்வைத் தான் கேட்டாள் ! ஆளன்
                                   வந்தான்:
தகதகெனக் குதித்தாடும் தனது காலைச்

சொன்னபடி கேள் என்றாள். பூரிப்பெல்லாம்
துடுக்கடங்கச் செய்துவிட்டாள். "அத்தான்"
                                     என்றாள்?

"ஆம்" என்றான். நடைவீட்டை அடைந்தார்!
                                     அன்னை
அப்போது பால் கறக்கத் தொடங்குகின்றாள்.
தாமரை போய்ச் சந்தனத்தில் புதைந்ததைப்
                                      போல்
தமிழ்ச்சுவடிக் கன்னத்தில் இதழ் உணர்வை

நேமமுறச் செலுத்தி நறுங் கவிச்சு வைகள்
நெடுமூச்சுக் கொண்டமட்டும் உரிஞ்சி நின்று

மாமியவள் பால்கறந்து முடிக்க, இங்கு
மருமகனும் இச்சென்று முடித்தான் முத்தம்!

பூமுடித்த பொட்டணத்தை வைத்துச் சென்றான்.
பூங்கோதை குழல் முடித்துப் புகுந்தாள் உள்ளே!

நீ முடித்த வேலையென்ன என்றாள்' அன்னை!
நெடுங்கயிற்றை தலைமுடித்துத் தண்ணீர்
                                    மொண்டேன்.
ஆ முடித்த முடியவிழ்த்துப் பால் கறந்தீர்;
அதை முடித்தீர்; நீர் தௌித்து முடித்தேன்,
                                     இன்னும்
ஈ முடித்த தேன்கூட்டை வடித்தல் போலே
எனை வருத்தாதீர் என்றாள் அறைக்குள்
                                  சென்றாள்.