எதிர்பாராத முத்தம்/பாடல் 11
Appearance
11
அறையிலிருந்து அம்பலத்தில்
"ஒருநாள் இரவில் உம்எச மானின்
அருமைப்பிள்ளை, ஐயோ பாவம்
பட்டபாடு பருத்திப் பஞ்சுதான்
பட்டிருக்குமா? பட்டிருக் காதே"
என்று கூறினான் இரிசன் என்பவன்.
"என்ன" என்றான் பொன்னன் என்பவன்.
இரிசன் என்பவன் சொல்லு கின்றான்;
"பரிசம் போட்டுப் பந்தலில் மணந்த
மாப்பிள்ளை பொன்முடி! மணப்பெண் பூங்கோதை!
சாப்பாடு சமைத்துச் சாப்பிடு வதுபோல்
புன்னை அடியில் பூரிப்பு முத்தம்
தின்றுகொண் டிருந்தார்! திடீரென் றெசமான்,
பிடித்துக்கட்டினார் பிள்ளையாண்டாளை!
அடித்தார் மிலாரால்! அழைத்தார் என்னை!
அவிழ்த்து விட்டபின் அவதியோ டோடினான்!!"
என்றது கேட்ட பொன்னன் உடனே
சொன்னதை யெல்லாம் தோளில் முடிந்து,
மான நாய்கன் தன்னிடம்
போனான் விரைவில் புகல்வ தற்கே!