பக்கம்:அண்ணாவின் பொன்மொழிகள்.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

97


இசைத் துறையிலும் பழமையை நீக்கிப் புதுமை எண்ணங்களையும், நல்வாழ்வுக் கருத்துக்களையும் புகுத்திப் பயன்படுத்தவேண்டும்.

🞸🞸🞸

ரேடியோவைத் திருப்பினால் ஏன் பள்ளி கொண்டீரையை ஸ்ரீ ரங்கநாதரே" என்பன போன்ற பாடல்களைக் கேட்கிறோம் அடிக்கடி. என்றோ படுத்து எழுந்திராத--எழுந்திருக்கவும் முடியாதவரைப் பற்றி ஆராய்ச்சியேன்? இதை விட்டு மக்கள் மனவளத்திற்கான பாதையிலே இசை வல்லுனர்கள்--இசை வாணர்கள் தம் திறமையைப் பயன்படுத்த வேண்டுகிறேன்.

🞸🞸🞸

நாடகத்தில் மறுமலர்ச்சி மிகமிக முக்கியமானது. நாட்டின் விழிப்புக்கு அது நல்லதோர் அளவுகோல், நாளை நாம் எப்படி இருப்போம் என்பதற்கு அதுவே அறிகுறியாகும்.

🞸🞸🞸

இயலிலும், இசையிலும் கருத்துரைகளைக் கேட்க மட்டுமே முடியும். நாடகத்திலேயோ, கருத்துரையைக் கேட்பதுடன் கருத்து விளக்கக் காட்சிகளைக் காணவும் முடிகிறது. எனவே நாடக மூலம், மனதை அதிகமான அளவுக்கு வசப்படுத்த முடிகிறது.

🞸🞸🞸

மின்சாரம் பாய்ச்சப்பட்ட கம்பிகள் போல நல்ல திறமை, நாடகத்தைக் காண்பவர்களை நடிகனின் உணர்ச்சி வயத்தவராக்கிவிடுகிறது.

🞸🞸🞸