பக்கம்:அன்பு வாழ்க்கை, அண்ணாதுரை.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

56


னாலே தான் இவ்வளவு ஆபத்து. இதை நீ உன் வீட்டிலே வளரச் செய்தே, ஒரே வருஷத்திலே அப்பனை முழுங்கிவிடும்; பிறகு நீ, உன் மூத்தவன், இப்படி 'காவு வாங்கிக் கொண்டே இருக்கும். அதனாலே இதை வேறெயாருக்காவது தத்து கொடுத்துவிடு. உன்பிள்ளை என்கிற எண்ணமே கூடாது. நீயும் "இதுவும்' ஒரே கூரையிலே இருந்தாலே ஆபத்துத்தான் ஒரு ஐந்து நிமிஷத்துக்கு மேலே, நீ இதைப் பார்த்தாக்கூட ஆபத்து ஏற்படும், இது பேய்க்கிப் பொறந்தது என்று சொன்னான். மூணாமாசம் என் தங்கச்சி தூக்கிட்டுப் போனா. அதிலே இருந்து அங்கேயே அவன் இருந்துகிட்டான். ஆனதாலே தான் டாக்டரய்யா, நான் அவனோட போய் இருக்க முடியறதில்லை. இதை அவனுக்குச் சொல்லவும் கூடாதுன்னு பூசாரி சொல்லியிருக்கிறான். மகன் என்கிற பாசத்தாலோ, இந்தத் தள்ளாத வயதிலே நிம்மதியா இருக்கலாமே என்ற எண்ணத்தாலேயே, நான் அவனோட போய் இருக்கிறதுன்னா, என்னாலே, ஊருக்கே நாசம வந்துடுமே, அந்தப்பாவத்தைச் சுமக்கச் சொல்றிங்களா. அவனும் குழந்தை குட்டிகளோட இப்ப சுகமா இருக்கிறான் -- நானும் அவனும் ஒரே கூறையின் கீழே இருக்க ஆரம்பிச்சா. அந்தப் பேய் அவன் குழந்தை குட்டிகளையும் காவு கேட்டுவிடும். அதனாலேதான், 'அக்கரை போயிருக்கிற என் மகன் வருகிற வரையிலே என்ன வேதனையானாலும் அனுபவிச்சுகிட்டு இருக்கிறதுன்னு ஏற்பட்டுப் போச்சு" என்று கூறினாள். டாக்டருக்கு வந்த ஆத்திரத்துக்கு அளவே இல்லை. 'எங்கே அந்தப் பூசாரி? என்று கோபமாகக் கேட்டார்--"அவன் செத்து வருஷம் ஆறு ஆவுதே" என்றாள் கிழவி.

என்ன செய்வான் பாதிரியப்பன், பேயாவது பூதமாவது, சாபமாவது என்று சொன்னால், கிழவியால் நம்ப முடியுமா! பல கலை வல்லவர்களே அந்த மயக்கத்திலிருந்து விடு-