உள்ளடக்கத்துக்குச் செல்

பிரதாப முதலியார் சரித்திரம்/அத்தியாயம் 8

விக்கிமூலம் இலிருந்து


8 ஆம் அதிகாரம்
கற்பலங்காரி சரித்திரம்

ஒரு நாள் எங்களுக்குப் பள்ளிக்கூடம் இல்லாத விடுமுறை நாளா யிருந்த படியால், நாங்கள் பழைய பாடங்களைப் படித்துக் கொண்டிருந்தோம். அப்பொழுது எங்கள் தாயார் வந்து எங்களுடைய படிப்பைப் பரிசோதித்தார்கள். பிறகு ஞானாம்பாள் என் தாயாரைப் பார்த்து "அத்தை யம்மா உங்களுக்கு அநேக சரித்திரங்கள் தெரியுமே! யாதொரு பதிவிரதையி னுடைய சரித்திரம் தெரிந்திருந்தால் சொல்ல வேண்டும்" என்று பிரார்த்தித்தாள். "அப்படியே சொல்லுகிறேன்" என்று என் தாயார் சொல்லத் தொடங்கினார்கள்.

"சில காலத்துக்கு முன் திரிசிரபுரத்தில் அரசு செய்து வந்த விஜயரங்க சொக்கலிங்க நாயகர் சந்ததி யில்லாமல் இறந்து போனபடியால், அவருடைய பத்தினியாகிய மங்கம்மாளுக்குப் பட்டாபிஷேக மாகி, அவள் துஷ்டநிக்கிரஹம் சிஷ்ட பரிபாலனஞ் செய்து, மநுநீதி தவறாமல் அரசாட்சி செய்து வந்தாள். அவளுக்குக் காமியப்ப நாயக்கன் என்கிற பெயருடைய தம்பி ஒருவன் இருந்தான். மங்கம்மாளுக்குத் தம்பி மேலிருந்த பிரியத்தினால், தன்னுடைய நாட்டில் சில ஊர்களைப் பிரத்தியேகமாய்ப் பிரித்து இவனுடைய ஸ்வாதீனப்படுத்தி, தனக்குள்ளாக அவன் சிற்றரசாயிருந்து அரசாட்சி செய்யும்படி திட்டம் செய்தாள். அவன் புதுக்கோட்டையைத் தனக்கு ராஜதானி ஆக்கிக்கொண்டு, அரசாட்சி செலுத்திவந்தான். அவனுக்கு மகோன்னத பதவி கிடைத்த உடனே மதிமயங்கி, சமஸ்தான காரியங்களை எவ்வளவும் கவனிக்காமல் காமாதுரனாய்ப் பரஸ்திரீ கமனம் முதலிய துர்விஷயங்களிற் காலத்தைச் செலவளிக்கத் தலைப்பட்டான். அவனுக்கு ஆஸ்தான உத்தியோகஸ்தர்களில் ஒருவனாகிய மங்களாகரம் பிள்ளையினுடைய பத்தினி கற்பலங்காரி என்பவள், திவ்விய சுந்தரமும் அவளுடைய பெயருக்குத் தகுந்த சுகுணமும் உள்ளவளாயிருந்தாள். அவளிடத்தில், அந்த துஷ்டராஜனுக்கு மோகம் உண்டாகி அவளைத் தன் கைவசப்படுத்தும் பொருட்டு, அவளிடத்துக்குச் சில ஸ்திரீகளைத் தூதாக அனுப்பினான். அவர்கள், அவளுடைய புருஷன் வீட்டி லில்லாத சமயம் பார்த்து, அவளிடஞ் சென்று "அம்மா! நீ செய்த தவ மகிமையினால் உனக்கு ராஜயோகம் வந்துவிட்டது! உன்னைப்போல் அதிர்ஷ்டசாலிகள் உண்டா? நம்முடைய அரசரே உன்னுடைய அழகை விரும்புவாரானால் உன்னுடைய பாக்கியத்துக்கு ஒரு வரம்பு உண்டா? அவருடைய தயவைப் பெற எத்தனையோ ஸ்திரீகள் தவஞ்செய்கிறார்கள்; அவர்களுக்கெல்லாம் சிந்திக்காமல் உனக்கு அவருடைய கிருபை கிடைத்தது எவ்வளவு பெரிய அதிர்ஷ்டம்! இனி இந்த நாட்டுக்கெல்லாம் நியே அரசி! சமஸ்தான காரியங்களெல்லாம், உன்னுடைய ஏவலின்படியே நடக்கும். ஆகையால் அவருடைய இஷ்டபூர்த்தி செய்து, அஷ்ட ஐசுவரியங்களையும் கைக்கொள்ளு!" என்றார்கள். இதைக் கேட்டவுடனே கற்பலங்காரிக்கு கோபமுண்டாகிச் சொல்லுகிறாள். “எனக்கு அரசரும், குருவும், தெய்வமும் என்னுடைய பர்த்தாவே அன்றி வேறல்ல; அவருடைய கிருபையே எனக்கு ஐசுவரியம்! அவருக்கு முன்பாக மற்ற அரசர்கள் எல்லாரும் அஜகஜாந்தரம்; உங்கள் அரசருடைய கிருபைக்காகத் தவஞ் செய்கிற ஸ்திரீகளே அந்தக் கிருபையைப் பெற்றுக்கொள்ளட்டும். எனக்கு வேண்டாம்!" என்றாள்.

"மறுபடியும் அவர்கள் அந்த உத்தமியின் புத்தியைக் கலைக்கிறதற்குச் சகல தந்திர வித்தைகளை உபயோகப் படுத்தியும், அவள் இசையவில்லை; அவர்கள் உடனே புறப்பட்டுப் போய், அரசனுக்கு நடந்த காரியங்களைத் தெரிவித்தார்கள். அவள் நிராகரித்த சங்கதி தெரிந்தவுடனே, அவனை அதிக அதிகமாக ஆசைப்பேய் பிடித்து ஆட்டத் தலைப்பட்டது. அவளைப் பலாத்காரமாகக் கொண்டு போகிற பக்ஷத்தில், தன்னுடைய சகோதரி மங்கம்மாளுக்குத் தெரிந்தால், தன்னைச் சிரசாக்கினை செய்வாளென்று பயந்து அவன் பலாத்காரஞ் செய்யத் துணியவில்லை. பணமென்றால் பிணமும் வாயைத் திறக்குமானபடியால், பணத்தைக் கொண்டே, அவ்ளை வசியஞ் செய்யவேண்டுமென்று நினைத்து, அவன் ஒரு பெரிய பெட்டியில் தங்க நாணயங்களையும் வேறொரு பெட்டியில் ரத்னாபரணங்களையும் நிரப்பி, அந்தத் தூதிகள் கையில் கொடுத்து, அவளிடத்திற்கு அனுப்பினான். அவர்கள் அந்தப் பெட்டிகளைக் கற்பலங்காரி வீட்டுகுக் கொண்டுபோய்த் திறந்துகாட்டி, அவளுடைய புத்தியை மயக்கப் பிரயாசப்பட்டார்கள். அவள் அவர்களைப் பார்த்து "ஸ்திரீகளுக்குக் கற்பே சிறந்த ஆபரணம்; அந்த ஆபரணம் போய்விட்டால், இந்த ஆபரணங்களினால் வரும் பிரயோசனம் என்ன?" என்று சொல்லி, அந்த ஆபரனங்களை உதைத்துத் தள்ளி, அவர்களைத் தூஷித்துத் துரத்திவிட்டாள். அவர்கள் போய் சற்று நேரத்துக்குப் பின்பு வீட்டுக்கு வந்த தன் பர்த்தாவிடத்தில் சகல சங்கதிகளையும் தெரிவித்து "இந்த அரசனிடத்தில் உத்தியோகஞ் செய்வது முறையல்ல; உத்தியோகத்தை விட்டுவிட்டுப் பிச்சையெடுத்தாயினும் பிழைப்பது உத்தமம்" என்றாள். அவளுடைய வார்த்தையைப் புருஷன் அங்கீகரித்துக் கொண்டு உத்தியோகம் வேண்டாமென்று ஒரு பத்திரிகை அனுப்பிவிட்டு, அவரும் அவருடைய பத்தினியும் ஊரைவிட்டுப் புறப்பட்டு அடுத்த கிராமத்துக்குப் போய், ஒருவருக்குந் தெரியாமல் அந்தரங்கமாக வசித்தார்கள். உத்தியோக வரும்படியைத் தவிர வேறே சீவனத்துக்கு மார்க்கம் இல்லாதபடியால், உத்தியோகம் போன பிற்பாடு அவர்கள் பட்ட கஷ்டம் சொல்லி முடியாது. அவர்களுடைய நகைகள், பாத்திர சாமான்கள் முதலியவைகளை விற்றுச் சில நாள் காலக்ஷேபஞ் செய்தார்கள். பிற்பாடு, கையில் காசும் இல்லாமல், கடன் கொடுப்பாருமில்லாமல் கைப்பாடுபடவுந் தெரியாமல், இராப்பட்டினி பகற்பட்டினியாயிருக்க ஆரம்பித்தார்கள். அந்த அரசனுக்கு அவர்கள் போயிருக்கிற இடம் சில நாள் தெரியாமலிருந்து பிற்பாடு தெரிந்தது. சாம, பேத, தான, தண்டம் என்கிற நான்கு உபாயங்களைச் செய்துவிட்டோம். இனி மேல் நாலாவது உபயோகமாகிய தண்டத்தை உபயோகிப்பதே காரியமென்று அவன் நிச்சயித்து, தானாயிறந்துபோன ஒரு அநாதைப் பிரேதத்தை, நடுச் சாமத்தில் அவர்கள் இருக்கிற வீட்டிற் போட்டுவிடும்படியாயும், மங்களாகரம் பிள்ளை கொலை செய்ததாகக் குற்றம் சாட்டிப் பிடிக்கும்படிக்கும் ஜாக்கிரதை செய்தான். அந்தப் பிரகாரம் சேவகர்கள் வந்து, மங்களாகரம் பிள்ளையைப் பிடித்துக் கொண்டு போய் விட்டார்கள்; கற்பலங்காரி வெளியே போகாதபடி வீடைச் சுற்றிப் பாரா வைத்துவிட்டார்கள்.

"உத்தியோகம் போனபிற்பாடு, தரித்திர முதலிய சகல கஷ்டங்களையும் தைரியமாகச் சகித்த அந்தக் கற்பலங்காரி, தன் புருஷனைக் குற்றவாளியாக்கி, சேவகர்கள் பிடித்துக் கொண்டுபோனதைச் சகிக்க மாட்டாதவளாய் நெருப்பிலே போட்ட புஷ்பம் போல வாடிப் பதைத்து விம்மி அழுதாள். அந்தச் சமயத்தில் அந்தக் கொடுங்கோல் மன்னவனுடைய தாதிகள் வந்து, கற்பலங்காரியை நோக்கி "தானாய் வருகிற சீதேவியைக் காலால் உதைத்துத் தள்ளுவது" போல, நீயே உன்னுடைய வாழ்வைக் கெடுத்துக் கொள்கிறாய். உன் புருஷன் கொலை செய்ததாகச் சாட்சிகளால் குற்றம் ஸ்தாபிக்கிறபடியால், மரண தண்டனை கிடைக்குமென்பது நிச்சயம். ஆனால் நாங்கள் சொல்லுகிறபடி, நீ கேட்டால் உன் புருஷனுக்கு ஜீவ லயம் நேராது; நீயும் எப்போதும் சுமங்கலியாகவும், பாக்கியவதியாகவும் இருப்பாய்! எங்களுடைய வார்த்தையை நீ தள்ளி விட்டால் நீ அமங்கலி தான்" என்றார்கள். இந்த வார்த்தையைக் கேட்ட உடனே அந்தப் பதிவிரதையினுடைய சித்தம் சிறிதும் சலனப் படாமல் அவர்களைப் பார்த்துச் சொல்லுகிறாள். "எளியாரை வலியார் அடித்தால், வலியாரைத் தெய்வந் தண்டிக்காமல் விடாது". மானம் பெரிதே அல்லாமல் ஜீவன் பெரிதல்ல; என்றைக்கிருந்தாலும் மனுஷ தேகம் எடுத்தவர்கள் சாவது நிச்சயமே யல்லாது சாகாத வரம் வாங்கிக் கொண்டு வந்தவர்கள் ஒருவரும் இல்லை. எப்படியும் ஒரு நாள் சாகப் போகிறவர்கள், சில நாள் முந்திச் செத்தால் பாதகம் என்ன? நான் என் புருஷனின் உயிரைக் காப்பாற்றுகிறதற்காகக் கற்பை இழந்து, பாவத்தையும், பழியையும், நரகத்தையும் சம்பாதித்துக் கொள்கிறதைப் பார்ர்க்கிலும், பதிவிரதா பங்கமில்லாமல் நானும் என் புருஷனும் இறந்து, நித்திய மோக்ஷ சாம்ராஜ்ஜியத்தை அடைவது உசிதம் அல்லவா?" என்றாள். "அப்படியானால் வருகிறதை நீ அநுபவித்துக் கொள்" என்று அந்தத் துஷ்டர்கள் சொல்லிப் போய்விட்டார்கள். இனிமேல் கடவுளைத் தவிர வேறு திக்கு திசை இல்லாதபடியால், அந்த உத்தமி கடவுளை நோக்கிப் பிரலாபித்துத் தன் குறைகளைச் சொல்லி முறையிடுவாள் ஆயினாள்.

அவளுடைய வீட்டைச் சுற்றிப் பாரா இருக்கிறவர்களில் ஒருவன், அவளுடைய புருஷனுக்கு மித்திரன் ஆனபடியால், குற்ற விசாரணை எப்படி நடக்கிறதென்று விசாரித்துத் தெரிவிக்கும்படி சொல்லியிருந்தாள். அதிரகஸியமாய் விசாரணை நடந்தபடியால், அவனுக்குக் கூட சில நாள் வரைக்கும் சங்கதி வெளியாகாமலிருந்து, பிறகு பிரகடனம் ஆயிற்று. மங்களாகரம் பிள்ளை கொலை செய்ததாகக் குற்றம் ஸ்தாபிக்கப்படுகிறதாகவும், ஆனால் மங்கம்மாளுடைய உத்தரவு இல்லாமல் மரண தண்டனை செய்ய அந்தச் சிற்றரசனுக்கு அதிகாரமில்லாதபடியால், மங்களாகரம் பிள்ளையை மரண தண்டனை செய்ய உடனே உத்தரவு அனுப்பவேண்டுமென்று இந்தக் கொடியன் மங்கம்மாளுக்கு ரகசியமாக எழுதிக்கொண்டிருப்பதாகவும், அந்தக் காவற்சேவகன் மூலமாகக் கற்பலங்காரி கேள்விப்பட்டு, அவளுக்கு உண்டான மனக்கிலேசம் எவ்வளவென்று யார் விவரிக்கக்கூடும்? அம்பு பட்டு விழுந்த மயில்போல அவள் கீழே விழுந்து புரண்டு "ஐயோ தெய்வமே! நான் என்ன செய்வேன்! இந்த அநியாயத்தை யாரிடத்திலே சொல்லுவேன்? பிரஜைகளால் துன்பத்தை அடைந்தவர்கள் அரசனிடத்தில் முறையிடுவார்கள். அரசனே அக்கிரமஞ் செய்தால் உம்மைத் தவிர வேறு யாரிடத்தில் சொல்லுவேன்? என் புருஷனை இரக்ஷித்தருளும் ஸ்வாமி" என்று முறையிட்டாள். பிறகு கடவுளது கிருபையால் அவளுக்குத் திடச் சித்தம் உண்டாகி, மங்கம்மாளிடத்திலிருந்து உத்தரவு வருகிதற்குமுன், அந்த அரசியிடத்திற்குத் தான் எப்படியாவது போய்த் தன் புருஷனைக் காப்பாற்றுகிறதற்கு மார்க்கந் தேடவேண்டுமென்று நினைத்து, அந்தக் காவற்காரனுடைய சகாயத்தால் அவள் நடுச்சாமத்தில் வீட்டை விட்டு வெளிப்பட்டுத் திரிசிரபுரத்தை நோக்கி ஓட்டமும் நடையுமாகப் போக ஆரம்பித்தாள். ஓடும்போதே தபாற்காரன் எதிரே வருகிறானாவென்று பார்த்துக் கொண்டு ஓடினாள். தங்க விக்கிரகம் போல் அவளுடைய மேனி பிரகாசிக்க, அவளுடைய கூந்தல் அவிழ்ந்து சோர, ஜலப்பிரவாகமாய்க் கண்ணீர் வடித்துக் கொண்டு அவள் ஓடுவதைப் பார்த்தவர்கள் "இவள் தேவ ஸ்திரீயோ! அல்லது ராஜ ஸ்திரீயோ!" என்று மயங்கி அவள் துக்கத்துக்காக இரங்கி அழாதவர்கள் ஒருவருமில்லை. அவள் நடுவழியில் தபால்காரன் வருவதைக் கண்டு, அவனுக்கு நமஸ்காரஞ் செய்து "ஏதாவது விசேஷம் உண்டா?" என்று வினாவ, அவன் மகாராணியிடத்திலிருந்து மரண தண்டனை உத்தரவைக் கொண்டுபோவதாகத் தெரிவித்தான். அவள் உடனே தீர்க்க தண்டஞ் சமர்ப்பித்து, மரண தண்டனை உத்தரவை மாற்றுவதற்காகவே தான் மங்கம்மாளிடத்துக்குப் போவதாகவும், எப்படியும் அனுகூலம் கிடைக்குமென்றும், ஆகையால் அவன் புதுக்கோட்டைக்குப் போகாமல் தாமதிக்க வேண்டுமென்றும், மிகவும் பரிதாபமாய்க் கெஞ்சிக் கேட்டுக் கொண்டாள். இரக்க சுபாவமுள்ள அந்தத் தபாற்காரன், தேவ ஸ்திரீக்குச் சமானமாகிய இந்த ஸ்திரீயினுடைய பிரார்த்தனையை மறுக்கமாட்டாமல், ஒரு நாள் தாமதஞ் செய்வதாக ஒப்புக் கொண்டான். அந்தப்படி அவனிடத்தில் பிரமாணம் வாங்கிக்கொண்டு, வேடனுக்குப் பயந்து ஓடும் மான்போல, ஒரே ஓட்டமாக ஓடித் திரிசிரபுரத்தை அடைந்து மங்கம்மாளுடைய அரண்மனையில் பிரவேசித்தாள். அரண்மனைக் காவற்காரர்கள் இவள் யாரோ தேவியென்று அவளைத் தடுக்க மனம் வராமல், உள்ளே விட்டுவிட்டார்கள்.

"அவள் மங்கம்மாளுடைய கொலு மண்டபத்தை நோக்கி "மகாராணியே அபயம்! மண்டலேஸ்வரியே அபயம்!! மங்கையர்க்கரசியே அபயம்!!! உலகநாயகியே அபயம்!!!!" என்று ஓலமிட்டு, சிம்மாசனத்தின் அடியிற் போய் விழுந்தாள். சில நாளாய் அன்னம் ஆகாரமில்லாதபடியாலும், நாற்காத வழியும் ஒரே ஓட்டமாய் ஓடி வந்தபடியாலும், தேக ஸ்மரணை தப்பி மூர்ச்சையாய் விட்டாள். அப்போது சிங்காசனத்தின் மேல் வீற்றிருந்த மங்கம்மாள், உடனே இறங்கி, அவளைக் கட்டித் தழுவி அவளுடைய மூர்ச்சை தெளியும்படி சைத்தியோபசாரங்கள் செய்வித்து மூர்ச்சை தெளிந்தவுடனே, அவள் கையைப் பற்றி அழைத்துக் கொண்டுபோய்த் தன் பக்கத்தில் இருத்தி, அவளுடைய குறையைத் தெரிவிக்கும்படி உத்தரவு செய்தாள். கற்பலங்காரி, அந்தச் சிற்றரசன் செய்த கொடுமைகளை வியக்தமாக விக்ஞாபித்த உடனே மகாராணிக்குத் தன் தம்பி மேல் உக்கிர கோபாக்கினி மூண்டு, அவனையும் சாட்சி முதலானவர்கலையும் உடனே கொண்டுவரும்படி, குதிரைப் பட்டாளத்தைச் சேர்ந்த நூறு போர்வீரர்களைப் புதுக்கோட்டைக்கு அனுப்பினாள். அந்தத் துஷ்ட அரசன் மங்களாகாரம் பிள்ளையைக் கொல்வதற்காகக் கொலைக்களத்திலே கொண்டுபோய் வைத்துக் கொண்டு, இராணியினுடைய உத்தரவை எதிர்பார்த்துக் கொண்டு இருந்தான். அந்தச் சமயத்தில் நூறு போர்வீரர்களும் போய்ச் சேர்ந்து, இராணியினுடைய உத்தரவைத் தெரிவித்தார்கள். அதைக் கேட்டவுடனே, அந்த அரசனுக்குக் கோபமுண்டாகி, அந்தப் போர்வீரர்களின் மேல் பாய்ந்து, அவர்களில் இருவரை வெட்டிக் கொன்றுவிட்டான்; மற்றவர்கள் எல்லாரும் அவனைப் பிடித்து, நிராயுதபாணி ஆக்கிப், பின்கட்டு முறையாகக் கட்டி, அவனையும் சாட்சிகள் முதலானவர்களையும் கொண்டுபோய், மகாராணி சமுகத்தில் விட்டார்கள். மகாராணி சாட்சிகளைப் பார்த்து "மங்களாகாரம் பிள்ளை கொலை செய்தது உங்களுக்குத் தெரியுமா?" என்று கேட்க, அவர்கள் தங்களுக்கு யாதொன்றும் தெரியாதென்றும், ஆனால் அரசனுடைய ஆக்கினைக்குப் பயந்து தங்களுக்குத் தெரிந்தது போல் பொய் வாக்குமூலம் எழுதி வைத்திருப்பதாகவும் சொன்னார்கள்.

உடனே இராக்கினி, தன் தம்பியைப் பார்த்து, "நீ என்ன சொல்லுகிறாய்?" என்று கேட்க, அவன் இராணியைக் கூட மதிக்காமல், சகோதரி என்கிற தைரியத்தால், அலட்சியமாக மறுமொழி சொன்னான்; மகாராணிக்கு அடங்காத கோபம் உண்டாகி, கிங்கரர்களைப் பார்த்து "இவனை நான் உன்னத ஸ்தானத்தில் வைத்திருக்க, அந்த ஸ்தானத்துக்குத் தன்னை அபாத்திரன் ஆக்கிக் கொண்டபடியால், இவனை உன்னத ஸ்தானத்தினின்றே தள்ள வேண்டியது நியாயமாயிருக்கிறது. ஆகையால் இவனைத் தாயுமானஸ்வாமி மலைச் சிகரத்தின் மேலே ஏற்றி, அங்கே இருந்து கீழே தள்ளிவிடுங்கள்" என்று உத்தரவு கொடுத்தாள். அந்தப் பிரகாரம் அவனை மலைமேல் ஏற்றித் தள்ளிவிட்டார்கள். அவனுடைய யோகமும், தேகமும், மோகமும் இவ்வகையாக ஒரு நிமிஷத்துக்குள் முடிவு பெற்றன. பிறகு மங்கம்மாள் தனது நியாயசபையில், மங்களாகாரம் பிள்ளைக்குப் பெரிய உத்தியோகம் கொடுத்து, அவனைக் குபேர சம்பத்து உடையவன் ஆக்கினாள். "என்றைக்கிருந்தாலும் பரஸ்திரீ கமனஞ் செய்கிறவர்களுடைய கதி அதோகதி, என்பதற்கு அந்தக் காமியப்ப நாயக்கனே சாட்சி. கற்புள்ள ஸ்திரீகள் மேன்மை அடைவார்கள், என்பதற்குக் கற்பலங்காரியே சாட்சி" என்று என் தாயார் சொல்லி முடித்தார்கள். இந்தச் சரித்திரத்தைக் கேட்டு, நானும் ஞானாம்பாளும் அளவற்ற வியப்புங் களிப்பும் அடைந்தோம்.