பிரதாப முதலியார் சரித்திரம்/அத்தியாயம் 7

விக்கிமூலம் இலிருந்து


7 ஆம் அதிகாரம்
சோதிடப் பைத்தியம்

அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்;
ஞானாம்பாளுக்குச் சம்பவித்த பிராணாபாய நிவர்த்தி.

நானும் ஞானாம்பாளும் ஒரு நாள் காலையில், வெளித் திண்ணையில் படித்துக்கொண்டு இருக்கும்போது, எனக்குப் பழக்கமான ஒரு ஜோதிட சாஸ்திரியார் வந்து "செலவுக்கு ஒன்றும் இல்லாமல் வருத்தப் படுகிறேன்; ஏதாவது கொடுக்கவேண்டும்" என்று கேட்டார். அப்போது கூட இருந்த எங்கள் உபாத்தியாயர், அவரைப் பார்த்து "சகலருக்கும் சாஸ்திரஞ் சொல்லிப் பாக்கியத்தைக் கொடுக்கிற உமக்குக் கஷ்டமுண்டா?" என்றார். உடனே சாஸ்திரியாருக்கு ஆக்கிரோஷமுண்டாகிச் சொல்லுகிறார்; "நாங்கள் உலகத்தை ரக்ஷிக்கும்பொருட்டு தரித்திர வேஷம் பூண்டுகொண்டு திரிகிறோமே யல்லாமல், எங்களுக்கு ஒரு கஷ்டமுண்டா? நாங்கள் கற்பக விருட்சத்தை வரச்சொன்னால் வராதா? காமதேனுவைக் கூப்பிட்டால், அது வந்து நாங்கள் சொன்னபடி கேளாதா? மகமேருகிரி எங்கள் ஸ்வாதீனமல்லவா?" என்றார். அப்போது அவ்விடத்தில் கட்டியிருந்த ஒரு வேட்டை நாய் சாஸ்திரியாரைப் பார்த்துக் குலைத்துக் கொண்டிருந்தது. அவர் அந்த நாயைப் பார்த்து "கரடி, புலி முதலிய துஷ்ட மிருகங்களின் வாய்களை மந்திரத்தினாலே கட்டிவிடுகிற நான், இந்த நாயின் வாயைக் கட்டி, அது குலைக்காமலும் கடிக்காமலும் செய்ய மாட்டேனா? என்று கையை நீட்டிக் கொண்டும் தலையை ஆட்டிக் கொண்டும் சொல்லிக் கொண்டிருந்தார். உடனே அந்த நாய்க்குக் கோபமுண்டாகி, கட்டியிருந்த சங்கிலியை அறுத்துக் கொண்டு, ஒரே பாய்ச்சலாய் சாஸ்திரியார் மேலே பாய்ந்து அவர் தேகத்தைப் பக்ஷணஞ் செய்ய ஆரம்பித்தது. சாஸ்திரியார் "ஐயையோ! போனேனே! போனேனே!" என்று கூவத் தலைப்பட்டார். உடனே எங்கள் உபாத்தியாயர் ஒரு கழியை எடுத்துக் கொண்டு நாயைத் துரத்திச் சாஸ்திரியாரை விடுவித்து "மந்திரத்தினால் அந்த நாயின் வாயைக் கட்டி விடக்கூடாதா?" என்று சாஸ்திரியாரைக் கேட்டார். அவர் "ஐயா! நாய் கடித்த உபத்திரவம் பெரிதாயிருக்கிறது; அதற்குச் சரியான பரிகாரஞ் செய்தால் உண்மையைச் சொல்லுகிறேன்" என்றார். உடனே எங்கள் ஆசிரியர் தகுந்த பக்குவஞ் செய்து வலியைச் சாந்தப் படுத்தினார்.

சாஸ்திரியாருக்குச் சந்தோஷம் உண்டாகிச் சொல்லுகிறார். எங்கள் வித்தையெல்லம் சுத்தப் பொய்; உலகத்தில் உதரநிமித்தம் பல பேர் பல வேஷங்கள் பூண்டுகொண்டு ஜீவிக்கிறார்கள்; அப்படியே நானும் இந்த வேஷம் போட்டுக் கொண்டு திரிகிறேன்; என்னுடைய சொந்த விஷயத்தில் சாஸ்திரம் பலிக்காமலிருக்கும்போது அன்னியர்கள் விஷயத்தில் கேட்கவும் வேண்டுமா? எனக்கு நாலு புத்திரிகள்; சாஸ்திர சகுனங்கள் பார்த்து, சாதகங்கள் பார்த்து, பொருத்த நிமித்தங்கள் பார்த்து, அவர்களைக் கலியாணஞ் செய்துக் கொடுத்தேன். அந்த நாலுபேரும் அமங்கலி யாய்விட்டார்கள். மந்திரங்கால் மதி முக்கால் என்பது போல என்னுடைய புத்தியைக் கொண்டு பிழைக்கிறேனே யல்லாது, சாஸ்திரத்தைக் கொண்டு பிழைக்கவில்லை; சகலருக்கும் சுகமுந் துக்கமுங் கலந்து வருகிறபடியால், நானும் சுகத்தையும் துக்கத்தையுங் கலந்து சகலருக்கும் சாஸ்திரஞ் சொல்லிக் கொண்டு வருகிறேன்; ஆனால், சுகத்தையே யாவரும் விரும்புகிறபடியால் சுகத்தையே அதிகமாகச் சொல்லி, யாவரையும் நான் சந்தோஷப்படுத்துகிறது வழக்கம்; இப்போது காலம் விபரீதமாய்ப் போய்விட்டது.. நான் ஒருவனுக்கு யோகம் வருமென்று சொன்னால் அவனுக்குக் கஷ்டம் சம்பவிக்கின்றது; சுபிக்ஷ காலமென்று சொன்னால் துர்பிக்ஷ காலமாய் முடிகின்றது; ஒரு கர்ப்ப ஸ்திரீயைப் பார்த்து, அவளுக்குப் பிள்ளை பிறக்குமென்று சொன்னாலும் அந்தக் கர்ப்பம் பொய்யாகி, மகோதரமாய் முடிகின்றது; கர்ப்பத்திலிருக்கிற பிள்ளை கூட என்னை ஒருதரம் மோசம் செய்துவிட்டது. எப்படியென்றால், நான் நெடுநாளாக ஆசிரதம் செய்து வந்த ஒரு பிரபு, என்னை அழைத்து கர்ப்பிணியா யிருக்கிற தன் மனைவிக்கு, என்ன குழந்தை பிறக்குமென்று கேட்டார். நான் ஆண் பெண் இரண்டில் ஒன்றுதானே பிறக்கவேண்டுமென்று நினைத்து, ஆண் குழந்தை பிறக்குமென்று அவரிடத்தில் தனிமையாகச் சொன்னேன் அவருக்குத் தெரியாமல் அவருடைய மனைவியிடத்திலே போய், பெண் குழந்தை பிறக்குமென்று அதி ரகசியமாகச் சொல்லி வைத்தேன். கடைசியாய்ப் பிறந்த குழந்தை ஆணுமல்லாமல், பெண்ணுமல்லாமல் அலியாயிருந்தது. சாஸ்திர விஷயத்தில் சகலருக்கும் இருந்த நம்பிக்கையும், நாளுக்கு நாள் குறைந்துவிட்டது. இனிமேல் இந்த தொழிலை விட்டுவிடுவதென்று நான் யோசித்துக் கொண்டிருக்கும்போது, உங்களுடைய நாயே எனக்கு நல்ல புத்தி கற்பித்துவிட்டபடியால், இனிமேல் சாஸ்திரத்தைக் கட்டித் தூரத்தில் எறிந்துவிடச் சித்தமாயிருக்கிறேன்." என்றார். அவர் நிசம் சொன்னதற்காக, அவருக்குத் தகுந்தப் பிரயோசனஞ் செய்யவேண்டுமென்று எங்கள் போதகர் சொன்னதினாலே, அவருக்கு நானும் ஞானாம்பாளும் பத்து ரூபாய் கொடுத்து அனுப்பினோம். இவ்விதமாக ஜோசியர் காரியம் ஆசியமாக முடிந்தது; எனக்குச் சோதிட விஷயத்திலிருந்த பைத்தியமும் தீர்ந்தது.

சாஸ்திரியார் போனபின்பு, உபாத்தியாயர் எங்களைப் பார்த்து "சோதிடம் பொய்யென்று, அந்தச் சாஸ்திரியே ஒப்புக்கொள்வதால், இனிமேல் உங்களுக்கு வேறே சாக்ஷியம் வேண்டுவதில்லை. இனிமேல் வரும் காரியங்கள் நமக்கு முந்தித் தெரியாதபடி, நம்முடைய நன்மைக்காகவே சுவாமி மறைத்து வைத்திருக்கிறார். இனிமேல் வருகிற துன்பம், நமக்குத் தெரியாமலிருப்பதால், அந்தத் துன்பம் வருகிற நிமிஷம் வரையில் நாம் துக்கமில்லாமலிருக்கிறோம். அது முந்தி நமக்குத் தெரிந்திருக்குமானால் முந்தியுந் துக்கம் பிந்தியுந் துக்கம்; எக்காலத்திலும் துக்கமாக முடியும் அல்லவா? அப்படி நன்மை வருகிறதும் நமக்கு முந்தித் தெரியாமலிருந்து வந்தால், நமக்கு அதிக சந்தோஷத்துக்கு இடமாகும். அப்படியில்லாமல் முன்னமே தெரிந்திருக்குமானால் சந்தோஷம் மிகவும் குறைந்துபோகும். தீர்க்க தரிசனம் என்பதே, இப்போது உலகத்தில் இல்லை. அந்த மேலான வரத்தை எத்தனையோ புத்திமான்களும் இருக்க, அவர்களுக்குக் கொடாமல் இந்த சாஸ்திரிகளைப் போலொத்த சர்வ மூடர்களுக்கும், குடுகுடுப்பைக் காரர்களுக்கும், கோணங்கிக்காரர்களுக்கும், குறத்திகள் முதலானவர்களுக்கும் சுவாமி கொடுத்திருப்பாரா? பின்னும் நமக்கு வருகிற நன்மை தீமைகள், நமக்குத் தெரியாமலிருக்க அசேதன ஜந்துக்களாகிய பல்லிகளுக்கும் பட்சிகளுக்கும் தெரிந்து, அவைகள் நமக்குத் தெரியப்படுத்தக்கூடுமா?" என்று உபாத்தியாயர் செய்த பிரசங்கத்தைக் கேட்டவுடனே, என்னைப் பிடித்திருந்த சாஸ்திரப் பேய் பறந்தோடிவிட்டது.

எங்கள் கொல்லைக்குப் பின்புறத்தில் இருக்கிற சிங்காரத் தோட்டங்களின் மதிலுக்கு அப்பால், கொஞ்ச தூரத்தில் ஒரு பாழ் மண்டபமும், அதற்குப்பின் ஒரு விஸ்தாரமான காடும் இருந்தன. அந்தக் காட்டுக்கு அந்தப் பாழ்மண்டபத்தின் வழியாகத்தான் போகவேண்டும். சில காலத்துக்கு முன், அந்தப் பாழ் மண்டபத்தில் யாரோ ஒருவன் கழுத்தில் சுருக்கிட்டுக் கொண்டு இறந்துபோனதாகவும், அவன் பிசாசு ரூபமாகி அந்த மண்டபத்தில் வாசஞ் செய்வதாகவும், பின்னும் ஒரு சங்கிலிக் கறுப்பு ஒரு மரத்திலிருப்பதாகவும், எப்போதும் சங்கிலி ஓசை கேட்பதாகவும், அந்த மண்டபத்துக்குப் போன ஆடு மாடு முதலான ஜீவ ஜந்துக்கள் திரும்பி வராமல் பிசாசுகளுக்கு இரையாகி விடுவதாகவும் ஒரு வதந்தி பிறந்து, வெகு காலமாக அந்த மண்டபத்துக்காவது காட்டுக்காவது ஒருவரும் போக்குவரவு இல்லாமல் நின்றுவிட்டது. இராக் காலங்களில், அந்த இடத்தில் பயங்கரமான பல சப்தங்கள் கேட்கிறதும் உண்டு. உபாத்தியாயரிடத்தில் அதைப் பற்றித் தெரிவித்தேன்' அவர் "மனப் பேயே தவிர வேறு பேயில்லை; நீ என்னுடன் கூட வந்தால் காட்டுகிறேன்." என்றார். அவருடைய விவேகமும், தைரியமும் எனக்குத் தெரியுமாதலால் வேட்ட நாயையும் கையில் பிடித்துக் கொண்டு, அவரைத் தொடர்ந்து போனேன்; மண்டபம் சமீபித்தவுடனே, நான் பயப்படுவேனென்று அவர் என் கையைப் பிடித்துக் கொண்டு நடந்தார். உபாத்தியாயர் கை முன்னே இழுக்கப் பயம் பின்னே இழுக்கக் கொலைக் களத்துக்குப் போகிறவன் போல, திகில் கொண்டு நிர்ஜீவனாய் நடந்தேன். மண்டபத்துக்குள் நுழையும்போது நமனுடைய வாய்க்குள் நுழைவது போலிருந்தது; நாங்கள் மண்டபத்துக்குள் நுழைந்தவுடனே, கணக்கில்லாத பல பட்சிகள் "கா, கூ" என்று சப்தித்துக் கொண்டு புறப்பட்டன; அந்தப் பட்சிகளுடைய எச்சங்களால், மண்டபத்தில் கால் வைக்க இடமில்லாமல் துர்நாற்றம் எங்கள் குடலைப் பிடுங்க ஆரம்பித்தது; உடனே காட்டைப் பார்க்கிறதற்காக, மண்டபத்தை விட்டுக் கீழே இறங்கினோம்; எங்களுக்கு முன் எங்கள் வேட்டை நாய் மிருக வாசனை பிடித்துக் கொண்டு, காட்டுக்குள் ஓட ஆரம்பித்தது; அதைக் கண்டவுடனே நரிகளும் ஓநாய்களும், காட்டுப் பூனை முதலான பல மிருகங்களும், நாலு பக்கங்களிலும் கத்திக்கொண்டு ஓடத் தலைப்பட்டன. நாங்கள் போகும்போது ஒரு ஓநாய், ஒரு ஆட்டைப் பிடித்துத் தின்றுகொன்றிருந்தது. அந்த ஓநாய் மேல் எங்கள் வேட்டை நாய் பாய்ந்து பிடித்துக் கொண்டு, எங்களுக்குப் பாதகாணிக்கை கொண்டுவருவது போல், எங்கள் முன்பாக ஓடிவந்தது. உடனே உபாத்தியாயர், என்னை நோக்கிச் சொல்லுகிறார்:- "இந்தக் காட்டைப் பார்த்தால், உலகம் உண்டானது முதல் மனுஷ சஞ்சாரம் இல்லாதது போலத் தோன்றுகிறது. யாரோ ஒருவன் துர்மரணமாய் இறந்து போனானென்கிற பயப் பிராந்தியினால் வெகு காலமாக ஒருவரும் இவ்விடத்தில் சஞ்சரிக்காதபடியால், பட்சிகளும் பல மிருகங்களும் அந்த மண்டபத்தையும், காட்டையும் தங்கள் வாசஸ்தலங்களாக ஆக்கிக் கொண்டன. அவைகளால் இரவில் உண்டாகிற சப்தங்களைப் பிசாசுகளுடைய சப்தங்களென்று மௌட்டியமாக நினைத்துக்கொண்டார்கள். இந்தக் கானகத்துக்குள்ளே பிரவேசிக்கிற ஆடுமாடுகளை மிருகங்கள் தின்றுவிடுவதை அறியாமல், பிசாசுகள் தின்றுவிடுவதாக நினைத்தார்கள். இவ்விடத்தில் இருக்கிற பலவகையான மரங்களின் இலைகள் காய்ந்துபோய்க் காற்றினால் அடிபட்டுக், கலகலவென்று சப்திப்பதைச் சங்கிலிக்கறுப்பன் என்று நினைத்தார்கள். அறிவில்லாத மிருகங்களும், பட்சிகளும் நிர்ப்பயமாய் வசிக்கிற இடத்தில், அறிவுள்ள மனுஷர் சஞ்சரிக்கப் பயப்படுவது எவ்வளவு மௌட்டியம்?" என்று போதித்தார். அதற்குமுன் சோதிடப்பேய் பறந்ததுபோல் அன்றுமுதல் மனப்பேயும் பறந்துவிட்டது. அந்தக் காட்டை எங்களிடத்தில் சாசுவதக் குத்தகையாக ஒப்புக்கொண்டு அதை வெட்டித் திருத்திச் சாகுபடி செய்து, பயிரிட்டு அநுபவிப்பதுந் தவிர, அந்த மண்டபத்தில் அவரே குடும்ப சகிதமாய்க் குடியிருந்து வருகிறார்.

எங்கள் உபாத்தியாயரிடத்தில், நான் பல புத்திகளைக் கற்றுக்கொண்டதுபோலவே, என் தாயாரிடத்திலும் ஞானாம்பாளிடத்திலும் அநேக நற்குணங்களையும் கற்றுக்கொண்டேன். எந்தக் காலத்திலாவது அவர்களிடத்தில் கோபம், குரோதம், மூர்க்கம் முதலான துர்க்குணங்களை நான் கண்டதேயில்லை; எப்போதும் அவர்கள் பேசுவது மிருது பாஷையே தவிரக் கடூர வார்த்தைகளை அவர்களிடத்தில் நான் கேட்டதே யில்லை. அவர்கள் வாயிலிருந்து வருவதெல்லாம் உண்மையே தவிரப் பொய்யென்பது மருந்துக்குக் கூட கிடையாது. ஒருநாள் என் முகத்தைக் கடுகடுத்துக்கொண்டு, பல்லைக் கடித்துக்கொண்டு என் வேலைக்காரனைக் கோபித்தேன். அப்போது கூட இருந்த ஞானாம்பாள் ஒன்றும் பேசாமல் எழுந்துபோய் விட்டாள். பிறகு அவளை நான் கண்டு "ஏன் போய்விட்டாய்?" என்று கேட்க, “உங்களுக்குக் கோபம் வரும்போது, உங்களைப் பார்த்தால் எனக்குப் பயமாயிருக்கிறது; நீங்கள் கோப முகத்தோடு கண்ணாடியைப் பார்த்தால், உங்களுக்குத் தெரியும்" என்று சொன்னாள். நான் தனிமையாகப் போய்க் கோப முகத்துடனே கண்ணாடியைப் பார்த்தேன்; அப்போதிருந்த கோரம் எனக்கே சகிக்காமல் அன்று முதல் கோபத்துக்கு விடை கொடுத்துவிட்டேன். ஞானாம்பாள் எனக்கு இளையவளாயிருந்தாலும், அவளுடைய விநய காம்பிரியமும் நாகரிகமும் சுசீல ஒழுக்கமும் எப்படிப்பட்டவையென்றால், பெரியோர்கள் சமூகத்தில் இருக்கும்போது எவ்வளவு மரியாதையும் சிரத்தையும் உண்டாகுமோ, அவ்வளவு மரியாதை அவளிடத்தில் இருக்கும்போதும் என்னை அறியாமலே உண்டாகும்.

அவள் ஸ்தோத்திரப்பிரியை அல்லவென்று சில திருஷ்டாந்தங்களால் நான் அறிந்துகொண்டேன். எப்படியெனில், ஒரு நாள் சிங்காரத்தோட்டத்திலிருந்து ஒரு ரோஜாப் புஷ்பத்தைப் பறித்து அவள் கையிலே கொடுத்து "உன்னுடைய முகம் இந்தப் புஷ்பத்துக்குச் சமானம்" என்றேன். அவள் "அந்தப் புஷ்பம் சீக்கிரத்தில் வாடிப்போவதுபோல, அழகும் சீக்கிரத்தில் அழிந்துபோகும்" என்றாள்; "அந்தப் பூவை உபமானித்தது சரியல்ல. உன் முகம் சந்திரனுக்குச் சமானம்" என்றேன். அவள் சற்று நேரம் சும்மா இருந்து, பிற்பாடு சொல்லத் தொடங்கினாள்; "சந்திரனுக்கு ஸ்வயம் பிரகாசம் இல்லையென்றும், சூரியனுடைய ஒளியினால் சந்திரன் பிரகாசிக்கிறதென்றும், நாம் புஸ்தகங்களில் வாசித்திருக்கிறோம். அப்படியே மனுஷர்களுடைய வடிவெல்லாம் சூரியனாகிய கடவுளிடத்திலிருந்து உண்டாவதால், அவரே ஸ்தோத்திரத்துக்குப் பாத்திரர்" என்று சொல்லிக்கொண்டு அப்பாற் போய்விட்டாள்; அன்று முதல் அவளை ஸ்தோத்திரம் செய்கிறதில்லையென்று பிரதிக்ஞை செய்துகொண்டேன்.

அதற்குச் சில நாளுக்குப் பின்பு, நானும் ஞானாம்பாளும் வழக்கப்படி சிங்காரத் தோட்டத்துக்கு விளையாடப் போனோம். நான் கொஞ்ச தூரத்தில் புஷ்பம் பறித்துக் கொண்டிருந்தேன். அவள் ஒரு மரத்து நிழலில், ஒரு சின்னவாத்தியப் பெட்டியை வைத்து வாசித்துக் கொண்டிருந்தாள். அந்தச் சப்தங் கேட்டவுடனே அவ்விடத்தில் மேய்ந்து கொண்டிருந்த ஒரு துஷ்டக் காளை, அலறிக்கொண்டு சமீபத்திலிருக்கிற சித்திர மண்டபத்துக்கு ஒரு பக்கம் துரத்த, ஒரு பெரிய ஆட்டுக் கடா இந்தப் பக்கத்தில் துரத்த ஆரம்பித்தன. இப்படி இரண்டுக்கும் நடுவில் அகப்பட்டுக் கொண்டு அவள் அவஸ்தைப்படும்போது, நான் ஒரே ஓட்டமாய் ஓடி ஞானாம்பாளைத் தூக்கிச் சித்திரமண்டபத்து வெளித் திண்ணையின்மேல் ஏறிக்கொண்டேன். அந்தச் சித்திரமண்டபத்துத் திண்ணை அதிக உயரமானதாலும், அதன் படிகள் அந்தப் பக்கத்தில் இல்லாமல் வேறே பக்கத்தில் இருந்தமையாலும், அந்தச் சமயத்தில் நான் இல்லாமல் இருந்தால் அவளுக்குப் பெரிய அபாயம் நேரிட்டிருக்கும். இந்தச் சமாசாரம் ஞானாம்பாள் மூலமாக எங்கள் இரண்டு வீட்டாருக்கும் தெரிந்து, அவர்கள் ஒவ்வொருவரும் எனக்குச் செய்த ஸ்தோத்திரம் அபரிமிதமே. இராவணாதி அசுரர்களை நாசஞ்செய்து சீதையைச் சிறை மீட்டுக்கொண்டுபோன இராமருக்கு எவ்வளவு பிரதாபம் கிடைத்ததோ, அவ்வளவு பிரதாபம் எனக்கு வாய்த்தது.