பிரதாப முதலியார் சரித்திரம்/அத்தியாயம் 6

விக்கிமூலம் இலிருந்து


6 ஆம் அதிகாரம்
அநாதப்‌ பிள்ளைக்கு அன்னையும்‌ பிதாவும்‌
கிடைத்தல்‌

தேவராஜப்‌ பிள்ளை சரித்திரம்‌—ஒரு கெட்ட சகோதரன்‌

இவ்வாறு சில நாட்கள் கழிந்த பின்பு, ஒரு நாள் நானும் ஞானாம்பாளும், கனகசபையும் தெருத் திண்ணையில் வாசித்துக் கொண்டிருந்தோம். அப்போது அநேக ஆனைகளும், குதிரைகளும், வண்டிகளும், கொடிகளும், குடைகளும், காலாட்களும் நானாவித வாத்திய முழக்கத்துடன் தெருவில் வந்து எங்கள் வீட்டுக்கு எதிரே நின்றன. அவைகளின் மத்தியில், நான்கு குதிரைகள் கட்டின சொர்ணமயமான ரதத்திலிருந்து ராஜ வடிவான ஒரு புருஷனும், ஸ்திரீயும் இறங்கினார்கள். தடாகத்தில் விழுந்தபோது கரையேற்றி விட்ட சந்நியாசியாரும் அவர்களுக்கு முன்னே வந்து கனகசபையைக் கையாலே தொட்டுக் காட்டினார். உடனே மேற்படி ரதத்திலிருந்து இறங்கின அந்த மஹா புருஷன். கனகசபையைத் தழுவி மார்போடு அணைத்துக் கொண்டு "என் மகனே! என் கண்மணியே! என் குலதிலகமே! இந்நாள் வரைக்கும் உன்னைப் பார்க்கக் கொடுத்து வைக்காமற் போனேனே! என்ன பாவமோ உன்னைப் பிரிந்திருந்தேனே! இப்போதாவது உன்னைக் காணாமல் கண்டேனே! இனி மேல் என்னைப் போலே பாக்கியசாலிகள் உண்டா?" என்று சொல்லி, தேகபரவசமாய் ஆனந்தக்கண்ணீர் சொரிந்தார். அவருடன் வந்த ஸ்திரீயும் கனகசபையைக் கட்டித் தழுவிக் கொண்டு "மகனே! மகனே!" என்று பிரலாபித்தாள். பிற்பாடு அந்த மஹாபுருஷன் ஞானாம்பாளை நோக்கி "ஓ! பாக்கியவதியே! ஸ்திரீ ரத்னமே! குண பூஷணியே! நீயே தர்மாவதாரம்! உனக்குச் சமானமான குணவதிகள் இந்த உலகத்தில் இருப்பார்களா? தடாகத்தில் விழுந்த என் புத்திரனை நீ அல்லவோ ரக்ஷித்தாய்? உன்னால் அல்லவோ அவனைக் காணும்படியான பாக்கியம் பெற்றேன்!" என்று சொல்லித் துதித்தார்.

இப்படியாக நிகழ்ந்த அதிசயங்களைக் கேள்விப் பட்டு, எங்கள் தாய் தந்தைமார்கள் சுற்றத்தார் யாவரும் வந்து சூழ்ந்து கொண்டு அவருக்கும், அவருடைய பத்தினிக்கும் தகுந்த ஆசனங்கள் கொடுத்து வீற்றிருக்கச் செய்தார்கள். அவர்கள் இன்னாரென்றும் அவர்களிடத்தில் என்னது பேசுகிறதென்றுந் தெரியாமல் பிரமித்துப் போய் உட்கார்ந்திருந்தோம். அவர்கள் எங்களை நோக்கி, "ஓ! புண்ணியவான்களே! புண்ணியவதிகளே! நீங்கள் இந்நாள் மட்டும் என் மகனுக்குச் செய்து வந்த உபகாரங்களுக்கு நான் என்ன கைம்மாறு செய்யப் போகிறேன்? நான் இன்னானென்றும் இந்தப் பிள்ளையை நான் பிரிந்திருந்த காரணத்தையும் நீங்கள் அறிய விரும்புவீர்களாதலால் அதைப் பற்றி உங்களுக்குத் தெரிவிக்கிறேன். அதிக செல்வமும் சிறப்பும் பொருந்திய ஆதியூர் பாளையப்பட்டுக்கு நான் அதிபதி. நாங்கள் பூர்வீக அரசர்களுக்கு முடியெடுத்து வைக்கிற வேளாளர்களானதால், எங்களுக்கு அநேக கிராமங்களும் பூமிகளும் தானமாய்க் கிடைத்து, சர்வ சுதந்திரமாக அநுபவித்து வருகிறோம். என்னுடைய தகப்பனார் ஆதிமூலம் பிள்ளைக்கு நானும் என் தம்பியாகிய தெய்வநாயகம் பிள்ளையும் புத்திரர்கள்; என் பேர் தேவராஜப் பிள்ளை. எங்கள் குடும்பத்தில் ஜேஷ்ட புத்திரர்களுக்கும், அவர்களுடைய சந்ததிகளுக்கும் பட்டம் ஆகிறதே தவிர, கனிஷ்டர்களுக்குப் பட்டம் ஆகிறதில்லை; ஆனால் ஜேஷ்டர்களுக்குச் சந்ததி இல்லாவிட்டால், கனிஷ்டர்களுக்குப் பாத்தியம் உண்டாகும்; நான் மூத்தவன் ஆனதால் எனக்குப் பட்டாபிஷேகம் ஆகி, என் தம்பி என்னுடைய சம்ரக்ஷணையிலிருந்து வந்தான்; இதற்குப் பன்னிரண்டு வருஷத்துக்கு முன், இந்தக் குழந்தையை என் பத்தினி பிரசவித்தாள்; ஆறு மாசத்துக் குழந்தையாயிருக்கும்போது எனக்குக் குரூரமான வியாதி கண்டு, எங்கள் குடும்ப வைத்தியர்கள் பலர் ஔஷதம் கொடுத்தும் சௌக்கியப்பட வில்லை; இங்கிலீஷ் டாக்டர்கள் மருந்து கொடுத்துக் கொஞ்சம் சௌக்கியமான உடனே, நான் தேச யாத்திரை செய்தால், எனக்கு முழுதும் சௌக்கியமாகுமென்று வற்புறுத்திச் சொன்னார்கள்; இந்தக் குழந்தை அதி பால்யமாயிருந்ததால் அதை நாங்கள் கூடக் கொண்டுபோகாமல், என் தம்பி வசத்தில் ஒப்புவித்துப் பாளையத்தைச் சேர்ந்த காரியங்களையும் அவனே பார்க்கும்படி திட்டஞ் செய்து, நானும் என் பெண்ஜாதியும் பரிவாரங்களும் தேச யாத்திரை செய்யப் புறப்பட்டோம். பங்காளம் பம்பாய் முதலான இடங்களெல்லாம் சுற்றிக் கொண்டு நாங்கள் திரும்பிவர ஆறுமாசம் சென்றது; நாங்கள் பங்காளத்தில் இருக்கும்போது, எங்கள் தம்பி யிடத்திலிருந்து வந்த கடிதத்தில், எங்கள் பிள்ளை சுழிமாந்தங் கண்டு இறந்துபோனதாக எழுதியிருந்த படியால், நானும் என் பத்தினியும் பட்ட துயரம் இவ்வளவென்று சொல்லி முடியாது. என் பாரியாள் மட்டும் பிள்ளை விஷயத்தில் ஏதாவது மோசம் நடந்திருக்குமென்று சந்தேகித்தாள். எனக்கு என் தம்பியிடத்தில் இருந்த விசுவாசத்தினால் அவள் சந்தேகப்படுவது சரியல்ல என்று கண்டித்தேன்; நாங்கள் ஊருக்கு வந்த பிறகு பிள்ளை இறந்தது வாஸ்தவமென்று சகலரும் பிரஸ்தாபித்து வந்தபடியால், என் மனையாளுடைய சந்தேகமும் நிவர்த்தியாய் விட்டது.

பிற்பாடு சீமாமூலகாரியங்களை நானே வகித்துப் பார்த்துக் கொண்டு வந்தேன். என் தம்பி சில நாள் வியாதியாயிருந்து, ஒரு மாசத்துக்குமுன் தேக வியோகமானான். அவன் இறந்த விசனத்தால் அவன் பிரேதத்தின் மேல் விழுந்து புலம்பி அழுதேன். அப்போது அவன் இடுப்பிலிருந்து ஒரு கடிதம் வெளிப்பட்டது; அது என் பேரால் மேல் விலாசம் எழுதப் பட்டு, முத்திரிக்கப்பட்டிருந்த படியால், நான் தனியாக ஒரு அறைக்குள்ளே போய், அதனை வாசிக்கத் தொடங்கினேன்; அது வருமாறு:—

"ஐயோ! அண்ணா! நான் உங்களுக்குப் பரம சத்துருவே தவிரத் தம்பியல்ல; தாங்கள் பங்காளத்திலிருந்தபோது தங்களுடைய பிள்ளை வியாதியால் இறந்து போனதாக நான் தங்களுக்கு எழுதினது சுத்த அபத்தம். தங்களுக்குப் பிறகு எனக்குப் பட்டம் நிலைக்க வேண்டியதற்காகத் தாங்கள் ஊரில் இல்லாத காலத்தில், தங்களுடைய பிள்ளையை எப்படியாவது தொலைத்துவிட வேணுமென்று என் பிரிய நேசனாகிய முத்துவீரனுக்குச் சொன்னேன்; அவன் அப்படிச் செய்யக் கூடாதென்று, எனக்குப் பல வகையில் போதித்தான்; நான் பிடிவாதஞ் செய்ததனால், அவன் பிள்ளையை வாங்கிக் கொண்டு "உன் மனதுப்படி செய்கிறேன்" என்று சொல்லிப் போய்விட்டான்; அந்தச் சமயத்தில் அந்தப் பிள்ளைகளுக்குப் பால் கொடுத்தவளுடைய பிள்ளை சுழி மாந்தத்தினால் இறந்து போனதால், அவளைப் பொருள் மூலம் ஸ்வாதீனப் படுத்திக்கொண்டு, அவள் பிள்ளையைத் தங்கள் பிள்ளையென்று பேர் பண்ணி, சகலரும் அறிய இராக் காலத்தில் அந்தப் பிள்ளையைப் பிரேத ஆலயத்தில் ஆடம்பரமாக அடக்கஞ் செய்தோம். இந்த ரகசியம் எனக்கும் அந்தப் பாற்காரிக்கும் அவளுடைய புருஷனுக்கும் மட்டும் தெரியும். தங்களுடைய புத்திரனைக் கொண்டு போன முத்துவீரனை வெகு காலமாக நான் பார்க்கவில்லை; அவன் உலகத்தைத் துறந்து சந்நியாசியாகப் போனதாகக் கேள்விப்பட்டேன்; அவன் தங்கள் பிள்ளையைக் கொலை செய்திருப்பானென்றே எண்ணியிருந்தேன். முந்தாநாள் வந்த சந்நியாசி, தங்கள் பிள்ளையைக் கொலை செய்யவில்லையென்றும், சத்தியபுரியில் சாந்தலிங்கம் பிள்ளை வீட்டில் அந்தப் பிள்ளை வளருவதாகவுஞ் சொன்னான்; அந்தச் சந்நியாசியை இங்கே இருக்கும்படி சொல்லியிருக்கிறேன்; அவனை விசாரித்தால் ஆதியோடு அந்தமாகச் சகல சங்கதிகளும் விசிதமாகும்; தங்களுக்கு நான் செய்த துரோகத்துக்காக என் மனச் சாக்ஷி எனக்குச் செய்த தண்டனை சாமானியம் அல்ல; என் வியாதிக்கும் மரணத்திற்கும் காரணம் என் மனச் சாக்ஷியேயன்றி வேறல்ல. இனி எழுத எனக்குச் சக்தி இல்லை; சாகப் போகிற என்மேலே கோபம் வைக்க வேண்டாம்" என்று எழுதப்பட்டிருந்தது.

அந்தக் கடிதத்தை நான் வாசித்த உடனே ஒரு பக்கத்தில் பெரிய ஆச்சரியமும், ஒரு பக்கத்தில் என் கனிஷ்டன் மேலே பிரதாபமான கோபமும் ஜனித்து, இன்னது செய்கிறதென்று தெரியாமல் சற்று நேரம் சித்திரம் போல அசைவற்றிருந்தேன். பிறகு பிள்ளை ஜீவந்தனாயிருக்கிறானே, அவனைக் காணலாமென்கிற சந்தோஷம் மேலிட்டு, சந்நியாசியார் வந்திருக்கிறாராவென்று விசாரித்தேன்; அவர் வந்திருக்கிறதாகக் கேள்விப்பட்டு அவரை ரகசியமாக அழைத்து, அவர் மூலமாகச் சகல சங்கதிகளையும் பரிஷ்காரமாக அறிந்து கொண்டேன். என் தம்பியினுடைய உத்தரக்கிரியைகளெல்லாம் முடித்துக் கொண்டு நானும் என் பத்தினியும், பரிவாரங்களும் புறப்பட்டு வந்து, என் பிள்ளையையும் உங்களையும் கண்டேன்; ஆனந்தங் கொண்டேன். இப்படிப்பட்ட பிரமானந்தத்தை நான் பிறந்தது முதல் ஒருநாளும் அநுபவித்ததில்லை; ஆனால் இதுவெல்லாம் மெய் தானோ, அல்லது கனவோ என்கிற சந்தேகம் ஒன்று மத்தியில் போராடுகிறது; முந்தி நாம் பார்த்த காரியங்களைக் கனவில் காணுகிறதே யல்லாமல், பாராத காரியங்களைக் கனவில் காணக்கூடுமோ? இந்த ஊரையும், ராஜ கிருஹங்களுக்குச் சமானமாகிய உங்கள் கிருஹங்களையும், அவைகளின் நானாவித அலங்காரங்களையும் மகா புண்ணியாத்துமாக்களான உங்களையும், இதற்குமுன் நான் ஒருநாளும் பாராதிருக்க இப்போது நான் பார்க்கிறபடியால் இவ்வளவும் கனவல்ல, உண்மையென்றே நிச்சயிக்கிறேன்." என்றார். பிறகு கனகசபையைச் சிறு பிள்ளை முதல் வளர்த்தவர் எங்கே என்று விசாரித்துத் தெரிந்துகொண்டு அவரை நோக்கி "ஐயா! உம்மைப் போல நல்லவர்கள் உண்டா? நாங்கள் பிள்ளையைப் பெற்ற கடமையே அல்லாமல், அவனுக்கு ஒரு நன்மையுஞ் செய்ததில்லை. நீர் எவ்வளவோ பாடுபட்டு அவனை அருமை பெருமையாக வளர்த்து அவனை மனுஷனாக்கி விட்டீரே! என் கூடப் பிறந்த தம்பி என் பிள்ளையைக் கொலை செய்ய நினைத்தானே! ஒரு சம்பந்தமும் இல்லாத நீர் சொந்தப் பிள்ளையைப் பார்க்கிலும் நூறு பங்கு அதிகமாகப் பிள்ளையை வளர்த்தீரே! உமக்கு இந்த உலகம் முழுமையும் கொடுத்தாலும், நீர் செய்த உபகாரத்துக்குத் தகுந்த பிரதிப் பிரயோஜனம் ஆகுமா?" என்று சொல்லி, பிறகு என் தாயார் தகப்பனார் பந்துக்கள் முதலிய ஒவ்வொருவரையும் பார்த்துத் தனித்தனியே ஸ்தோத்திரஞ் செய்யத் தொடங்கினார். அவர் செய்கிறதைப் பார்த்தால் உலக முடிகிறவரையில் உபசாரத்தை நிறுத்தமாட்டாரென்று தோன்றிற்று. என் தகப்பனாரும் ஞானாம்பாள் தகப்பனாரும் எழுந்து "போஜனத்துக்கு நேரமாகிறதே, கிருபை செய்ய வேண்டும்!" என்று பிரார்த்தித்தார்கள். அவரும் அவருடைய பத்தினியாரும் "எங்களால் எல்லாரும் பசியாயிருக்கிறீர்களே" என்று சொல்லி உடனே எழுந்து ஸ்நானம், ஜபம் முதலிய நித்திய கருமங்களை முடித்துக் கொண்டு ஒரே பந்தியாய் இஷ்டான்ன போஜனஞ் செய்தோம். மறு நாள் முதல் எங்கள் கிருகத்தில் அவர்களை வரவழைத்து வைத்துக் கொண்டு, பத்து நாள் வரையில் அவர்களுக்கு சோடசோபசாரங்களும் செய்தோம். துரும்பு போல் இளைத்திருந்த கனக சபை, தாய் தகப்பனைக் கண்ட சந்தோஷத்தினால் பாரித்துப் பூரித்து அவர்களுடன் வந்த யானைகளின் ஒன்று போல் ஆனான்.

எங்களைக் கூட அழைத்துக்கொண்டு போய்த் தகுந்த மரியாதைகள் செய்தனுப்ப வேண்டுமென்பது கனகசபையின் தகப்பனாருடைய அபேக்ஷையா யிருந்தாலும், நாங்கள் அதற்குச் சம்மதிக்கமாட்டோமென்று தெரிந்துகொண்டு, அவர் எங்களைப் பார்த்து "நீங்கள் ஒன்றிலும் குறைவில்லாத பாக்கியசாலியாயிருக்கிறீர்கள்!`நீங்கள் செய்த பேருபகாரத்திற்குக் கடவுள் கிருபை செய்யவேண்டுமே யல்லாமல், என்னாலே செய்யக் கூடியது யாதொன்றுமில்லை; உங்களுக்குப் பிரதி உபகாரம் செய்யவேண்டுமென்று நான் நினைத்தால், என்னைப் போல் நன்றி கெட்டவர்கள் வேறொருவரும் இருக்க மாட்டார்கள்; ஏனென்றால், உங்களுக்கு, ஒரு துன்பம் வந்த காலத்தில் அல்லவே நான் உங்களுக்குச் சகாயம் செய்யவேண்டும்; ஆகையால், உங்களுக்குப் பிரதி உபகாரஞ் செய்ய நினைப்பது, உங்களுக்குத் துன்பம் வரவேண்டுமென்று பிரார்த்திப்பது போலாகுமானதால், நான் பிரதி உபகாரஞ் செய்ய நினைக்கமாட்டேன்" என்றார். அவர் பயணப்படுமுன்னுக்கு எங்கள் பாட்டியார் வந்து, "ஐயா! உங்கள் பிள்ளை என்னால் வெகுவாக அடிபட்டான்! அதை நினைக்கும்போது எனக்கு வருத்தமாயிருக்கிறது" என்றார்கள். உடனே அவர் என் பாட்டியாரை நோக்கி "அவன் அடிபட்டது அவனுக்குப் பெரிய அநுகூலம். துன்பமே ஞானத்தின் பாடசாலை; துன்பப்படாதவன் ராஜாங்கத்துக்கு யோக்கியனாக மாட்டான். தான் அடிபடாதவனா யிருந்தால், அடியினால் உண்டாகிற உபத்திரவம் இன்னதென்று தெரியாமல் தன்னுடைய பிரஜைகளை அடிக்கடி அடிக்கச் சொல்லுவான்; துன்பப்படாதவனுக்கு ஏழைகளுடைய வருத்தம் எப்படித் தெரியும்?" என்றார். அப்போது தான் அடியினால் உண்டாகிற பிரயோஜனம் இன்னதென்று எனக்குத் தெரிந்தது. பிற்பாடு அவரும் அவருடைய பத்தினியாரும் கனகசபையும் அவனை வளர்த்த தந்தை தாய்மார்களையும் அழைத்துக் கொண்டு எங்களிடத்தில் தனித் தனியே விடைபெற்றுக்கொண்டு, பரிவாரங்களுடன் சென்றுவிட்டார்கள். கூடப் பிறந்த அன்புள்ள சகோதரன் போல நெடுங்காலம் என்னுடன் கூட இருந்து, சகல சுகதுக்கங்களுக்கும் உடந்தையாயிருந்த கனகசபையைப் பிரிந்தது, எனக்குப் பெரிய மனோதுக்கமும் வியாசங்கமுமாயிருந்தது. அவனுக்கு அதிபால்யத்தில் நேரிட்ட ஆபத்துகளை நீக்கி, அவனை அற்புதமாக வளர்ப்பித்த கடவுளது திருவருட் செயலை வியந்து ஸ்தோத்தரித்தேன்.