உள்ளடக்கத்துக்குச் செல்

உணர்ச்சி வெள்ளம்/சுதந்திரத் திருநாள்

விக்கிமூலம் இலிருந்து

சுதந்திரத் திருநாள்


துவரைக்கும் சுதந்திர நாள் விழாக்களில் அமைச்சர்கள் கலந்து கொண்டிருந்தார்கள். அந்த அமைச்சர்கள் 1967 தேர்தலுக்குப் பிறகு பதவி நீங்கிய காரணத்தால் இந்த சுதந்திர விழா அமைச்சர்கள் இல்லாமலேயே நடைபெறுமோ என்ற அச்சம் இந்த விழாவின் மூலம் நீக்கப்பட்டிருக்கிறது.

யார் அமைச்சர்களாக வந்தாலும்--நாட்டின் சுதந்திர நாள் கொண்டாடப்படும்; அந்த விழாவில் அமைச்சர்கள் கலந்து கொள்கிறார்கள் என்பதைக் காட்டத்தான் சுதந்திர நாள் விழாவில் இந்த அமைச்சரவை கலந்து கொள்கிறது. நாங்கள் ஏன் சுதந்திர நாளைக் கொண்டாடுகிறோம் என்ற ஐயப்பாட்டிக்கு நான் தரும் இந்த எளிய விளக்கமாகிலும் புரியும் என்று நம்புகிறேன்.

இப்படியொரு சுதந்திரநாள் விழாவில் கலந்துகொள்ள வேண்டும் என்பது எனது இருபதாண்டுகால ஆசை. 1947ஆம் ஆண்டே--அன்று நான் இருந்த கட்சித் தலைமைக்கு எதிராகச் சுதந்திர நாள் கொண்டாடப்பட வேண்டியதுதான் என்று எழுதிக் கோபதாபத்திற்கெல்லாம் ஆளாக்கப்பட்டேன். அப்போது சுதந்திர நாள் விழாக் கொண்டாட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்று எண்ணமிருந்தாலும், அப்போது கலந்து கொண்டிருந்தால் சாதாரண அண்ணாத்துரையாகத்தானே கலந்துகொள்ள. வேண்டியதிருக்கும். ஆனால் இன்று முதலமைச்சர் என்ற முறையில் கலந்து கொண்டாலும், 20 ஆண்டுக்கால ஆசைக் கனவு நிறைவேறுகிறது என்ற மனநிறைவு எனக்கு ஏற்பட்டிருக்கிறது.

இந்தத் திருநாளில்--சுதந்திரப் போராட்டத்தில் உயிர்த் தியாகம் செய்தோருக்கும்--உயிர்த்தியாகம் செய்யாவிட்டாலும் பல தியாகத் தழும்புகளை ஏற்று உயிர் வாழ்ந்து கொண்டு--வதைப்பட்ட வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கும் எண்ணற்ற தியாகிகளுக்கும் நமது மனம் நிறைந்த மரியாதையை பேரம் பேசாத மரியாதையை-- பயன் கருதாத மரியாதையைத் தெரிவிக்கிறேன்.

தென்னை மரத்தின் அடியில் (தாளில்) சாதாரணத் தண்ணீர் ஊற்றினாலும் அதன் உச்சி சுவைமிக்க இளநீரைத் தருவதுபோல் அந்தத் தியாகிகள் எதையும் எதிர்பாராமல் பணிபுரிந்து--நம்மை யெல்லாம் தலைநிமிர்ந்து நடக்கச் செய்தார்கள். இத்தகைய தியாகிகளுக்கு மரியாதை செய்வதில் தி. மு. கழகம் என்றும் தயக்கம் காட்டியதில்லை; காட்டப் போவதுமில்லை!

நாட்டிலே ஆட்சி ஒரு கட்சியிடமிருந்து இன்னொரு கட்சியிடம் செல்லலாம். தலைமையிலே மாறுதல் வரலாம். ஆனால் சுதந்திரம் என்றென்றும் நிரந்தரமானது. சுதந்திரத்தைப் போற்றுவது பேச்சினால் மட்டுமல்ல; செயலினாலும் இருக்க வேண்டும்; ஒரு நாளில் ஒரு விழாவில் மட்டுமல்ல! எல்லா நாட்களிலும் போற்றப்படுவது, விரும்பி வரவேற்கப்பட வேண்டியது.

யார் கட்டளையிட்டார்கள் சிதம்பரனாருக்கு--செக்கிழுக்கும் துன்பம் ஏற்கும் காரியத்தைச் செய்யச் சொல்லி யாரும் கட்டளையிடவில்லை.

திருப்பூர் குமரனுக்கு, "போலீஸார் குண்டாந்தடியால் அடிப்பார்கள்; ரத்தம் குபுகுபு என வரும் போ!"--என்று யார் கட்டளையிட்டார்கள்? யாரும் கட்டளையிடவில்லை!

உள்ளத்தில் ஏற்பட்ட ஓர் உணர்ச்சி--தூய உணர்ச்சி--தூய ஒரு நோக்கத்திற்காக அவ்விதம் செய்யச் சொல்லிற்று! அந்தத் தூய உணர்ச்சியை--தூய நோக்கத்திற்காக நாமும் பெறுவதற்குத்தான் இந்த விழா!

சுதந்திரம் பெறுவதுகூட எளிது; பெற்ற சுதந்திரத்தைக் காப்பதுதான் பெரிது! அதற்காக நமது நினைப்பை அறிவை--ஆற்றலை--வீர உறுதியை ஒப்படைக்க வேண்டும்.

சீனம் படையெடுத்த போது அந்த வீர உறுதியை இந்த நாடு காட்டியது. இந்த நாடு நம்முடையது; இந்த நாட்டுச் சுதந்திரம் காப்பாற்றப்பட வேண்டியது--சுதந்திரத்தின் முழுப்பயன் எல்லா மக்களுக்கும் கிடைக்க வேண்டும் என உறுதி எடுக்கும் விழா இந்த விழா!

1947 ஆகஸ்ட் 15ஆம் நாளில் வந்த முதல் சுதந்திர நாள்--கணக்குத் தீர்த்த நாள்! நமக்கும் நம்மை ஆண்ட வேற்று நாட்டவனுக்கும்--நமக்கும் நம்மை அடிமையாகக் கொண்டவனுக்குமுள்ள கணக்குத் தீர்த்த நாள்.

ஆனால், 1967 ஆகஸ்ட் 15ஆம் நாளில் வந்த இந்த சுதந்திர தின விழா கணக்குப் பார்க்கும் நாள்! பெற்ற சுதந்திரத்தால் பெற்ற பயன் என்ன?--என்பது பற்றிக் கணக்குப் பார்க்கும் நாள் இந்த நாள்!

குழந்தை கருவிலிருந்து வெளியாகிக் கீழே விழுந்ததும் கறுப்பா; சிவப்பா--என்று பார்த்து அகமகிழ்வது முதற்கட்டம்! பிறர் எள்ளி நகையாடாதபடி துள்ளி விளையாடி, மழலை மொழி பேசி--அந்த மழலை குழலையும் விஞ்சக் கூடியது என்ற வள்ளுவர் மொழியை மெய்ப்பித்துக் காட்டுவது அடுத்த கட்டம். இந்தக் கட்டத்தில்தான் நாம் இருக்கிறோம்.

இப்படிப் பெரிய கணக்குப் பார்க்கும் இந்த வேளைவில் சில்லறைக் கணக்கைப் பார்க்க என் மனம் ஒப்பவில்லை. அவர்கள் செய்வதைச் சில்லறைக் கணக்கில் மட்டும் சேர்க்கவில்லை.. 1967 - பிப்ரவரியிலேயே பைசல் செய்யப்பட்ட கணக்கு அது? சுதந்திரம் பெற்றோம்; 20 ஆண்டுகள் உருண்டோடிவிட்டன.

நாம் அடிமையாயிருந்த காலத்தில் வெளிநாட்டார், இந்தியா தங்கச் சுரங்கம் நிறைந்த நாடுதான். மாடு சுட்டிப் போரடித்தால் போதாது என்று சொல்லி யானை கட்டிப் போரடித்த வளம்மிக்க நாடுதான். இருந்தாலும் அங்கே வறுமை இருக்கிறது; அறியாமை இருள் இருக்கிறது; இல்லாமை இருக்கிறது; போதாமை இருக்கிறது--காரணம் வெளிநாட்டார் ஆட்சியிருக்கிறது--என்று பிற நாடுகள் எல்லாம் நம்மிடம் பரிவு காட்டின.

ஆனால் சுதந்திரம் பெற்று 20 ஆண்டுக்காலம் ஆன பிறகு நம்மை நாமே ஆளுகிறோம் என்ற நிலை ஏற்பட்ட பிறகு--நான்கு பொதுத் தேர்தல்களை நடத்தி--மூன்று ஐந்தாண்டுத் திட்டங்களைப் போட்டு ஏழ்மையும்--இல்லாமையும்--தீண்டாமையும்--கல்லாமையும் இருக்கிறது என்றால் முன்பு நம்மைப் பார்த்துப் பரிதாபப்பட்ட நாடுகள் எல்லாம் எள்ளி நகையாடத்தானே செய்யும்? ஆங்கிலேயன்தான் உன் வளர்ச்சிக்குத் தடை என்றாயே--அவன்போய் 20 வருடங்களாகிவிட்டனவே; இன்னும் ஏன் வறுமையும். சுல்லாமையும் அகலவில்லை என்று கேட்கமாட்டார்களா?

இதை உணருவோமானால்--அந்த நிலை போக்கப்பட வேண்டும் என்ற உறுதி பிறக்க-ஆண்டுக்கு ஒரு நாளாகிலும்--அனைவரும் கூடிக் கொண்டாட வேண்டிய நாளாக இந்தச் சுதந்திர நாள் இருக்க வேண்டாமா?

ராஜாஜி அவர்களிடம் சிறிது நேரத்திற்கு முன்பு பேசிக் கொண்டிருந்தேன். என்னுடன் முன்னாள் காங்கிரஸ் அமைச்சரும் மக்களவைத் தலைவருமான சஞ்சீவி ரெட்டி இருந்தார்.

அவரிடம் ராஜாஜி அவர்கள், "இந்த சுத்ந்திர நாளையாகிலும் ஒரு கட்சிக்குச் சொந்தம் என்று ஆக்கிவிடாமல், நாட்டுக்குச் சொந்தம் என்றாக்கி--நாடே கொண்டாடும்படி இருந்திருக்கலாம்--” என்று சொன்னார்.

அதற்குச் சஞ்சீவரெட்டி இருந்திருக்கலாம்". என்று கூறினார். நான் அந்தக் கேள்விக்கு எதுவுமே கூறவில்லை!

சுதந்திர நாள் ஒரு கட்சிக்கு மட்டும் உரியதல்ல

சுதந்திர நாள் என்பது கட்சி அடிப்படையில் அல்லாமல் நாடு முழுவதும் கொண்டாடப்பட வேண்டியது. அப்படித்தான் பிற நாடுகளில் கொண்டாடுகிறார்கள். பாரிஸ் நகரில் அந்த நாட்டுச் சுதந்திர நாளை மக்கள் அனைவரும் மகிழ்ச்சியுடன் கொண்டாடுகிறார்கள்! பாடத் தெரிந்தவர்கள் மட்டுமல்ல-அந்த ஒரு நாளில் பாடத் தெரியாதவர்களும் நாட்டைப்பற்றிப் பாடுவார்கள்! எங்கெங்கும் விழாக்கோலம் இருக்கும்! மகிழ்ச்சிக் கொண்டாட்டம் இருக்கும் என்று ஏடுகளில் படித்திருக்கிறேன்.

ஆனால் இங்கு ஒரு கட்சிக்கு மட்டுமே உரியது சுதந்திர நாள் என்று ஆக்கப்பட்டுவிட்டது.

இரண்டாவது உலகப் போரில் அழிக்கப்பட்ட நாடுகளான ஜப்பானும் ஜெர்மனியும்--பெரும் தாக்குதலுக்காளான ரஷ்யாவும் மீண்டும் தங்களை வளர்த்துக் கொண்டு பிறருக்கும் உதவ முன்வருகின்றன. இத்தனையையும் யுத்தம் நடந்து முடிந்த 15 ஆண்டுகளில் செய்து முடித்தார்கள். 15 வருடத்தில் மயானக் குழியிலிருந்து எழுந்து மாடியில் உலவுவது போன்ற உயர்நிலை அடைய முடிந்தது அந்த நாடுகளால்!

ஆனால் 20 ஆண்டுகளாகச் சுதந்திர நாடாக இருந்தோம்; திட்டம் பல போட்டோம்; இன்னும் வறுமையிலும்--இல்லாமை இருளிலும் உழல்கிறோம். இந்த வறுமையைப் போக்குவதும், அறியாமையைப் போக்குவதும் கூடத்தான் சுதந்திரப் போராட்டத்தின் கூறுகளாகும்.

ஏழை மக்கள் உரிமை பெற-தொழிலாளர் உரிமை பெறப் போராடுவது--சுதந்திரப் போராட்டத்தில் ஒரு கூறாகும்!

எல்லோரும் இந்நாட்டு மக்கள், எல்லோரும் ஓர் நிறை; எல்லோரும் இந்நாட்டு மன்னன்--என்ற குறிக்கோலுக்காகப் பாடுபடுவதும்--சுதந்திரப் போராட்டத்தின் குறிக்கோளாகும்.


Wikidata: Q15624730