பெரும்பாணாற்றுப்படை-விளக்கவுரை/போக்கும் வரவும் மிக்க காட்டு வழி
4. போக்கும் வரவும்
மிக்க காட்டு வழி
4-1 உமணர் உப்பு வண்டிகள்
திரையன் ஆட்சிக்கு உட்பட்ட தொண்டை நாடு, காவல் மிக்கது; அதனால் கொடியோர் அற்றது எனச் சுருக்கமாகச் சொல்லியதால், பெரும்பாணன் உள்ளம் அமைதியுற்றிராது என எண்ணினான் போலும், பரிசில் பெற்று மீள்வோன். அதனால், வழி, காட்டுவழியே ஆயினும், அவ்வழி, எவ்வாறு இடர் அற்றது என்பதை விளக்கமாகக் கூற வேண்டும் என விரும்பினான்.
தொண்டை நாட்டுத்தலைநகராம் காஞ்சிக்குச் செல்லும் பெருவழி, காடுகளை ஊடறுத்துச் செல்வதே எனினும், அது வழங்குவாரற்ற கொடுவழி அன்று; மாறாக, அவ்வழியில், உப்பு வணிகர் முதலாம் பல்வேறு வணிகச்சாத்தின் பல்வேறு வண்டிகள், இரவு பகல் எப்போதும் வரிசை வரிசையாகச் செல்லும் ஆதலாலும், அவ்வண்டிகளில் ஏற்றிச் செல்லும் வணிகப் பொருள்களுக்கு உரிய கங்கவரிகனைத் தண்டும் சுங்கச் சாவடிகள் ஆங்காங்கே அமைந்திருக்கும் ஆதலாலும், அச்சுங்கச் சாவடிகள் அரிய காவல் உடையவாக அமைந்திருக்குமாதலாலும், அப்பெருவழி எப்போதும் ஆரவாரம் மிகுந்ததாகவே இருக்கும் எனக்கூறத் தொடங்கியவன், முதற்கண் அவ்வழியில் செல்லும் உப்பு வணிகர் வண்டிகளின் அமைப்புத் திறனைக் கூறத் தொடங்கினான்.வண்டிச் சக்கரத்து வண்டிகள் கொழு கொழுவென இருக்கும். அவ்வட்டையில் இட்ட துளைகளில் செருகப்பட்ட ஆரக்கால்கள், வட்டைகள் ஆரக்கால்களை விழுங்கி விட்டனவோ எனக் காண்பவர் வியக்குமளவு திருத்தமுறப் பொருத்தப்பட்டிருக்கும், ஆரக்கால்களின் மறுமுனை, முழு மரத்தில் கடையப்பட்ட குடத்தில் நிறுத்தப்பட்டிருக்கும், உருளி என்றும் அழைக்கப்பெறும் அக்குடம் எவ்வாறு இருக்கும் என்பதை விளக்க எண்ணியவன், பெரும்பாணன் அறிந்த ஒன்றை உவமைகாட்டி விளக்கினால், எளிதில் விளங்கும் என்பதால், இசைக் கருவிகளுள் ஒன்றாகிய மத்தளம் போல் காட்சி தரும் அக்குடம் என்றான்.
வட்டையும், ஆரமும், குடமும் உடைய சக்கரத்தின் அமைதியை எடுத்துக் கூறியவன், வண்டியின்பார், இரண்டுகணைய மரங்களை இணைத்தால் போன்ற வடிவும் வலிவும் உடையவாகும் என்றான். இத்தகைய உறுப்பு நலம் அமைந்த வண்டியில் அமர்ந்து செல்வார், வெயிலாலும், மழையாலும் கேடுறாது செல்வான் வேண்டி, வண்டியின் மேலே, தாளிப்பனை ஒலையினால் பின்னப்பட்ட பாய் வேய்ந்த கூரையும் அவ்வண்டிக்கு உண்டு, வலிய பெரிய அவ்வண்டிகள் கூரை வேய்ந்து நிற்கும் காட்சி, மழைக் காலத்தில், கருமேகம் சூழ்ந்த மலைகளை நினைவூட்டுவன வாய் இருக்கும். அவ்வண்டிகள், தம்மை ஈர்த்துச் செல்லும் காளைகளின் ஆற்றல் மிகுதியால், தாம் ஊர்ந்து செல்லும் வன்னிலத்தை எளிதே ஊடறுத்துக் கொண்டு விரைந்து செல்லும் என்றான்.
"கொழுஞ்சூட்டு அருந்திய திருந்துகிலை ஆரத்து,
முழவின் அன்ன முழுமர உருளி,
எமூஉப் புணர்ந்தன்ன பருஉக்கை நோன்பார்
மாரிக்குன்றம் மழை சுமந்தன்ன
ஆரைவேய்ந்த அறைவாய்ச் சகடம்"
(46-50)
4-2 வண்டி ஓட்டும் பெண்
வண்டிகளின் வடிவுத்திறனைக் கூறியவன், தொடர்ந்து, அவ்வண்டிகளுக்கு உரியவர் அவ்வண்டிகளில் உடைமைகளை ஏற்றிக்கொண்டு ஓட்டிச்செல்லும் காட்சியினை விளக்கத் தொடங்கினான். அவ்வண்டிகளுக்கு உரியவர் உப்பு வணிகராம் உமணர்; அவர்கள், கடல்படு பொருளாம் உப்பை, மருத நிகலத்து உழவர்களுக்கும், முல்லை நிலத்து ஆயர்களுக்கும், குறிஞ்சி நிலத்துக் குறவர்களுக்கும், பாலை நிலத்து மறவர்களுக்கும் கொண்டுசென்று விற்கும் தொழில் மேற்கொள்பவர் ஆதலின், அவர்கள் வாணிகம் கருதி ஒருமுறை வீட்டைவிட்டு வெளிவந்தால், மீண்டும் வீடு போய்ச்சேர ஆண்டுபல ஆதலும் கூடும். அதனால், அவர்கள் எங்குச் செல்லினும், தம் மனைவி மக்களையும் இல்லறம் நடத்துவதற்கு வேண்டும் இன்றியமையாப் பொருள்களையும் உடன் கொண்டே செல்வர். அவ்வாறு உடன் கொண்டுசெல்லும் பொருள்களுள், வழியில் நின்று பார்ப்பவர் கண்களுக்குத் தொலைவில் வரும்போதே புலப்படுவது வண்டிக் கூரைமீது வைக்கப்பட்டிருக்கும் கோழிக்கூடு; அக்கோழிக்கூட்டின் காட்சி, இடைவழியில், தங்கள் புனங்களில் விளைந்து முற்றியிருக்கும் தினையைக்காக்கும் கானவர், தினையை அழிக்கவரும் யானைக் கூட்டங்களைத், தொலைவில் வரும்போதே அறிந்து விரட்டுவதற்காகத் தங்கள் புனங்கள் இடையிடையே அமைத்திருக்கும் பரண்கள்மீது, நிழல்தர வேயப்பட்டிருக்கும் கூரையை நினைவூட்டும். நெடுவழி செல்ல சேர்வதால், ஊர் அற்ற இடைவழியிலும் உணவு ஆக்க நேரிடுமாதலின், அவ்விடங்களில், நெல்லையும் வரகையும் குற்றி அரிசி ஆக்குவதற்கு உதவும் உரல் கிடைப்பது அரிதாகிவிடும் என்பதால், தவறாது உடன்கொண்டு செல்லும் கல் உரலை அக்கோழிக்கூட்டின் வாயிலில் கட்டித் தொங்கவிட்டுச் செல்வர். அவ்வுரல் காட்சி, கடந்துவந்த வழியில் தான்கண்ட பெண் யானையின் முழங்காலை நினைவூட்ட, பரிசில்பெற்று மீள்வோன், அப்பிடியானையின் முழங்கால் அழகு, அதன் உடலின் கருநிறம், அதன் வாயின் இருபுறமும் முளைத்து மூங்கில் முளைபோல் சிறிதே வெளிப்பட்டுத்தோன்றும் தந்தம் ஆகிய காட்சி நலன்களில் சிறிதே மயங்கி இருந்துவிட்டு மேலும் தொடர்ந்தான். அவ்வண்டியைக் காண்பார் கண்களில் தப்பாது படும் மற்றொரு பொருள் செல்லும் இடங்களில் இன்றியமையாது வேண்டப்படும் ஊறுகாய் நிறைந்த மிடா. அம்மிடா, வண்டியின் மூக்கணை அருகே கட்டிவிடப்பட்டிருக்கும். பரிசில் பெற்றும் மீளும் பாணன் காட்டுவழியை மட்டும் கண்டு வருபவன் அல்லன். தொண்டை நாட்டுப் பேரூர்களில் பலநாள் இருந்து வந்தவன். அதனால், அப்பேரூர் ஆடரங்குகளில் நிகழும் ஆடல்பாடல்களை அறிந்து வந்தவன். அவை, அவன் உள்ளத்தில் பசுமையாகவும் இருந்தன. அதனால், மேற்புறத்தில் வரிசையாகப் பின்னப்பட்ட கயிற்றின் அகத்தே அகப்பட இட்டு வைத்திருக்கும் அம்மிடாக் காட்சி, பரிசில் பெற்று மீள்வோன் உள்ளத்தில் வார்கொண்டு வரிசை வரிசையாக வரிந்து கட்டப்பட்டிருக்கும், முழுவு என்ற இசைக் கருவின் காட்சியை நினைவூட்டிவிடவே, அம்முழவினின்றும் வெளிப்படும் ஓசை இன்பம், அவ்வோசைக்கு ஏற்ப ஆடும் ஆடல் மகளிர், அவர்கள் ஏறி ஆட அமைத்த ஆடரங்கு ஆகிய காட்சிகளையும், அவன் மனத்திரையில் கொண்டு வந்து நிறுத்திவிட்டனபோலும்; சிறிது நேரம் தன்னை மறந்துவிட்டான். அவன் மெய்மறந்து நிற்கவே, வண்டிகளும் நின்றுவிட்டனபோலும் அதனால் நின்ற காளைகளை அடித்து ஓட்டவேண்டி நேர்ந்தது. மாடுகளை அடித்து ஓட்டிய ஓசை கேட்டுத், தன் உணர்வு வரப்பெற்று நோக்கும் போது, ஊறுகாய் நிறைந்த காடிப்பானை வைத்திருக்கும் இடத்திற்கு அருகில் அமர்ந்திருக்கும் பெண், அக்காளைகளை அடித்து ஓட்டுவதையும், அப்பெண்ணின் மடியில் அழகிய குழந்தை சிரித்து விளையாடிக்கொண்டிருப்பதையும் கண்டான். தான் கண்டுவந்த அக்காட்சின்யப் பெரும் பாணனுக்கு விளங்க எடுத்துரைத்தான்.
"வேழம் காவலர் குரம்பை ஏய்ப்பக்
கோழிசேக்கும் கூடுடைப் புதவின்
முளைஎயிற்று இரும்பிடி முழந்தாள் ஏய்க்கும்
துளையரைச் சீறுரல் தூங்கத் தூக்கி
நாடக மகளிர் ஆடுகளத்து எடுத்த
விசிவீங்கு இன்னியம் கடுப்பக் கயிறுபிணித்துக் காடிவைத்த கலன்உடை மூக்கின்
மகஉடை மகடூஉப் பகடு புறந்துரப்ப"
(51–58)
4-3 ஓடும் வண்டிகளின் ஒழுங்கு
பெண்டிர், வண்டிகள் மீது அமர்ந்து மாடுகளை அடித்துத் துரத்த, ஓடும் வண்டிகளின் ஒழுங்கைக் கூறத் தொடங்கினான். வண்டிகள் எல்லாம் உப்புப் பொதி ஏற்றப்பட்ட வண்டிகள். அதனால் வண்டியின் பாரமோ அதிகம், அதே நேரத்தில், வண்டிகள் செல்லும் வழியோ கரடுமுரடான பாதை மேட்டில் ஏறியும், பள்ளத்தில் இறங்கியும், பெருமணலை ஊடறுத்துச் செல்ல நேரிடும், மேட்டில் ஏறும் போதும், மணலை ஊடறுத்துச் செல்லும் போதும் மாடுகளுக்குத் துணையாக, வண்டிகளின் பின்புறம் இருந்து வண்டிகளைத் தள்ளி விடுதலும், வண்டிகள் பள்ளம் நோக்கிப் பாயும் போது, வண்டிகள் விரைந்து உருள, அவ்விரைவிற்கு ஈடு கொடுக்க இயலாமல் மாடுகள் கால் மடங்கி வீழ்தலும் கூடும் என்பதால், வண்டிகளைப் பின்புறம் இருந்து ஈர்த்து ஈர்த்து விடுதலும் செய்தல் வேண்டும். மேலும் வண்டியில் பூட்டியுள்ள காளைகள் அனைத்தும் ஒத்த பழக்கமும், வயதும், வலிவும் உடையவாய் அமைதல் இயலாது அதனால் சில, ஒழுங்கை விட்டு அலைக்கழித்து ஈர்த்துச் செல்லவும் கூடும். வண்டி போகும் வழி, அகன்ற பெருவழி அன்று, ஆதலின், ஒன்றன்பின் ஒன்று என்ற ஒழுங்கு மீறின், வண்டிகளின் போக்கு தடையுறும். அதனால், வண்டிகளின் இருபுறமும் சிலர் நடந்து சென்றவாறே, மாடுகள் ஒழுங்கு மீறிச் செல்லாவாறு காத்துச் செல்லவும் வேண்டும். மேலும், பெரும்பாரம் ஈர்க்க மாட்டாது சில காளைகள் படுத்துவிடுதலும் உண்டு. அந்நிலையில் அக்காளைகளை அகற்றி விட்டு, வேறு வலிய காளைகளைப் பூட்டி விடுவர். அதற்காக, வண்டியில் பூட்டும் மாடுகளோடு, சில மாடுகளை வறிதே கொண்டு செல்லவும் வேண்டும்.
நெடுவழி ஓடி ஓடித் தேய்ந்து போவதால், சிலசமயம் அச்சு முறிந்து போதலும் உண்டு. அவ்வாறு முறிந்து போகும் இடங்களில், வண்டியில் உள்ள மூட்டைகளைக் கீழே இறக்கி வைத்து விட்டு, முறிந்த அச்சுக்குப் பதிலாக, இது போல் நேர்ந்தவழி உதவுவதற்கென்றே உடன் கொண்டு செல்லும் சேம அச்சு எனப்படும் புது அச்சை மாட்டி, மீண்டும் மூட்டைகளை ஏற்றிக் கொள்ளுதல் வேண்டும். இந்தப் பணிகளை எல்லாம் வண்டிக்குரிய உப்பு வணிகன் ஒருவனே தணித்துச் செய்துவிடல் இயலாது. அதனால் வண்டிகளை இடையூறு இன்றிக் காத்து ஓட்டிச் செல்லவல்ல சிலர், உப்பு வணிகர்க்குத் தேவைப் பட்டனர். அதனால், அப்பணிக்கு ஏற்ற உடல்கட்டு உடையவராகச் சிலரைத் தேர்ந்து, செல்லுமிடந்தோறும் உடன் அழைத்துச் செல்வர். முறுக்குண்ட உடலும், வலிவு மிக்கு இறுகிய தோளும் அமையப்பெற்று, அன்றைய ஆணழகர்களாகக் காட்சி தரும் அவர்கள், கொளுத்தும் கோடை வெய்யிலால், தம் தலைகள் காய்ந்து கொதிப்பேறி விடாதபடி, இளம்தளிருக்கிடையே கொத்துக் கொத்தாகப் பூத்து மணக்கும் வேப்பிலை முதலாம் பசுந்தழைகளையும், மணம் வீசும் வேறு பல மலர்களையும் கலந்து கட்டிய மாலையைத் தம் தலையிலே சுற்றிக் கொண்டு, உருண்டு திரண்ட நுகத்தடியில் உள்ள துளைகளில் நுழைத்து, மாடுகளை ஒழுங்காகக் கட்டிய கயிறுகளைக் கையில் பற்றிக்கொண்டு, வண்டிகளின் இருபுறங்களிலும் நடந்தவாறே, ஒழுங்கு குலையாமல் காத்து வண்டிகளை ஓட்டிச் செல்வர்.
வண்டிகளை, ஊறு நேராவாறு ஓட்டிச் செல்லும் பொறுப்பு அவர்களுடையதாகவே, உப்பு வணிகர், வண்டியோட்டும் கவலையற்று, உப்புவிற்கும் ஒரே நோக்குடையவராகி, "நெல்லும் ஒப்பும் நேரே" என உப்புக்கு மாறும் பொருளும், அதன் அளவு கூறி, "உப்போ உப்பு" என உரக்கக் குரல் கொடுத்து வாணிகம் புரிந்தவாறே செல்வர்-இவ்வாறு, வாணிகம் மேற்கொண்டு ஊர்ஊராகச் செல்லும் உமணர்களின் வண்டித் தொடர் செல்வதால், உடன்வரும் முடலையாக்கை முழுவலிமாக்கள், உப்பு வணிகர்க்கு மட்டும் அல்லாமல், அப்பெருவழியில் அனைவர்க்கும் இரவில் அல்லாமல் பகலிலும் நல்ல காவலாய் நிற்பர்.
"கோட்டிணர் வேம்பின் ஏட்டிலை மிடைந்த
படலைக்கண்ணி, பரேர் ஏறுழ்த் திணிதோள்
முடலையாக்கை முழுவலி மாக்கள்
சிறுதுளைக்கொடுநுகம் நெறிபட நிரைத்த
பெருங்கயிற்று ஒழுகை மருங்கில் காப்பச்
சில்பத உணவின் கொள்ளை சாற்றிப்
பல்லெருத்து உமணர் பதிபோகு நெடுநெறி
எல்லிடைக் கழியுநர்க்கு ஏமமாக."
(59-65)
4-4 மிளகுப் பொதி ஏற்றிச் செல்லும்
கழுதைச் சாத்து
உமணர் உப்பு வண்டியோடு, துணையாகச் செல்லும் முடலையாக்கை முழுவலி மாக்கள், வண்டிகளை ஊறுஇன்றி ஓட்டிச் செல்லவும், தேவைப்படும் இடங்களில் உப்பு மூட்டைகளை ஏற்றவும் இறக்கவுமே பயிற்சி பெற்றவர்; ஆறலைகள்வரால் வரலாகும் இடையூறுகளைப் போக்குவது அவரால் இயலாது. அதனால் அவர் துணை நம்பி காட்டுவழி செல்வது கூடாது எனப் பெரும் பாணன் எண்ணி விடுதலும் கூடும் என்பதால் வணிகக் சாத்துடன், முடலையாக்கை முழுவலி மாக்கள் மட்டுமே செல்வர் என்பதில்லை. முழுப் பயிற்சி பெற்ற சிறுபடையும் உடன் செல்லும்; அப்படை வீரர், ஆறலைகள்வர் எத்தகையவராயினும் அவரை அழித்து ஒழிக்கவல்ல ஆற்றல் வாய்ந்தவர் என்பதையும் எடுத்துக்கூறவேண்டியதாயிற்று.
கடல் கடந்த நாடுகளின் பொற்காசுகள் தமிழகத்தில் வந்து குவிவதற்குக் காரணமாய் இருப்பனவற்றுள் தலையாயது மிளகு: அரிய விலையுடையது. அதனால் மிளகை, வாணிகம் கருதி, ஓர் ஊரிலிருந்து பிறிதோர் ஊருக்குக் கொண்டு செல்லுங்கால், படைத்துணையோடு செல்லவேண்டியிருந்தது. அக்கால மிளகு வணிகர், அத்தகைய படைத்துணைக்கு அரசை எதிர்நோக்கி இராது ஒரு சிறுபடையைத் தாமே வைத்துக்கொண்டிருந்தனர். அதை, அக்கால அரசும் அனுமதித்திருந்தது. அத்தகைய வணிகப்படை இல்லாதிருந்திருக்குமாயின், அகிலும், ஆரமும், பொன்னும், மணியும், மிளகும் போலும் மலை நாட்டுப் பொருள்களைவும், முத்தும் பவழமும் போலும் கடல்விளைபொருள்களையும், நாட்டவர் பெற்றிருக்க முடியாது. அப்படைவீரர்களின் துணை இருந்ததினாலேயே அக்கால வணிகர், அப்பொருள்களை ஓரிடத்திலிருந்து பிறிதோரிடத்திற்கு அச்சமின்றி எடுத்துச் சென்று வாணிகம் புரிந்தனர். அத்தகைய வாணிகம், தங்கு தடையின்றி நடைபெற்றதினாலேயே, அக்கால மக்களுக்கு அப்பொருள்கள் கிடைத்தன. அதனால், கடல்படுபயனையும், மலைதரு செல்வத்தையும் நாட்டு மக்கள் நுகர்த்துணை நின்ற பெருமை, அவ்வீரர்களையே சாரும்.
அவ்வீரர்கள், குற்றம் தீர்ந்த நல்ல செயல்களையே மேற்கொள்வர். மேற்கொள்வதன் முன், முட்டின்றி முடித்தற்காம் வழிமுறைகளை ஆராய்ந்து துணிந்த பின்னரே மேற்கொள்வர். எடுத்துக்கொண்ட வினைக்கு எத்தனை பெரிய இடையூறுகள் நேர்ந்தாலும் சோர்ந்து விடாது முயன்று முடிக்கவல்ல உறுதியாளர்கள். உள்ளத்தில் உறுதியும் உடலில் உரமும் முடிக்கவல்ல உறுதியாளர்கள். உள்ளத்தில் உறுதியும் உடலில் உரமும் எவ்வளவுதான் சிறந்தனவாய் அமைந்து விட்டாலும் அவற்றிற்குத் துணை புரியல்ல படைக்கலங்களும் தேவை என்பதை உணர்ந்து, ஏற்றபடைக்கலங்களையும் உடன் கொண்டே செல்வர். காலில் அணிந்திருக்கும் செருப்பு, முழங்கால் வரையும் மறைத்துவிடும் சட்டை, அவர்மேனியை மூடிக்காத்துக் கிடக்கும். ஆறலைகள்வரோடு , போரிட்டு, அவர்தம், வில்லாற்றலை முரித்து அழிக்க மேற்கொண்ட போர்களில் ஒரோ வழி, அவர் அம்புபாய்ந்து உண்டாக்கிய புண்வடுக்கள், மார்பிற்கு அணியாகி அழகு தரும். விரிவரியான கோடுகள் விளங்க, பண்ணப்பட்ட அச்சு அவர் மார்பின் குறுக்கே வரிந்து கட்டப்பட்டிருக்கும்; அது, மலையின் குறுக்கே ஊர்ந்து ஏறும் மலைப்பாம்பினை நினைவூட்டுவதாய் இருக்கும். அக்கச்சில், இடது கைப்புறமாக, வெள்ளிய கைப்பிடி பொருத்தப்பெற்ற கூரியவாள் கட்டித்தொங்க விடப்பட்டிருக்கும். இடையில் உடுத்தியிருக்கும் ஆடை, தம்மை மறந்துபோரில் ஈடுபட்டிருக்கும் போதும் நெகிழ்ந்து அவிழ்ந்து விடாதவாறு இறுகக்கட்டப்பட்டிருக்கும்: அவ்வுடைக்குள் ஒரு குத்து வாளும் செருகப்பட்டிருக்கும். இவ்வளவிற்கும் மேலாக, நீண்ட பெரிய வேற்படையைக் கையில் ஏந்திச் செல்வர். இத்தனை படைக்கலங்களையும் பயன்படுத்துவதற்கேற்ற பரந்து அகன்ற தோளாற்றலும் உடையராகிய அவ்வீரர்களைப் பார்த்த, பரிசில் பெற்று மீள்வோன் அகக்கண்முன், அவன் கடந்து வந்த மலை நாட்டுத் தெய்வமாம் முருகன் காட்சி அளிக்கவே அவர்களை, அவனாகவே மதித்து மகிழ்ந்ததோடு அக்காட்சி இன்பம், பெரும்பாணன் உள்ளத்திலும் பெருக்கெடுக்கும் வகையில், விளங்க எடுத்துரைத்தான்.வழி, காவல் மிகுந்தது என்பதை வலியுறுத்த வணிகச்சாத்தோடு செல்லும் படைவீரர் இயல்பை எடுத்துக்கூறிய புலவர், அப்படை வீரர் துணை வர, வாணிகப் பெருநகர் நோக்கிச் செல்லும் வணிகர் இயல்பையும் எடுத்துக் கூறினார். மிளகு உப்பு போல் கனமுடையது அல்ல ஆதலாலும், சிறிய அளவுள்ள பொதிக்கே பெரு முதல் வேண்டுமாதலாலும், மிளகு வணிகர்க்கு, மிளகுப் பொதிகளைக் கொண்டு செல்ல, உப்பு வணிகர்க்குத் தேவைப் பட்டது போல், பெரிய பெரிய வண்டிகள் தேவைப் பட்டில. மேலும், மிளகை, அதுவிளையும் மலைநாட்டு உட்பகுதிக்கும் சென்று கொள்முதல் செய்யவேண்டிவரும். அத்தகைய இடங்களுக்கு வண்டிகள் செல்வது இயலாது. அதனால் மிளகு வணிகர், தம்பொதி வண்டிகளில் கொண்டு செல்வதை விரும்பாது, கழுதைகளின் முதுகின்மீது கொண்டு செல்வதையே விரும்புவர். கழுதை பெரும்பாரம் சுமக்கக் கூடியது; மலைக்காடுகளின் ஊடே நுழைந்து நுழைந்து செல்லக்கூடியது. அதனால் கழுதைகளே ஏற்புடையவை என எண்ணினர். பொதி சுமப்பதற்கென்றே பிறந்தவை போல், கழுதைகளின் முதுகு இயல்பாகவே வளைந்திருக்கும். மேலும் பொதி சுமந்து சுமந்து தழும்பேறியிருக்கும். கழுதையின் அத்தகைய வளைந்த முதுகில், இருபக்கமும் எடை ஒத்திருக்கப் போடப்பட்டிருக்கும் மிளகுப் பொதிக்காட்சி, புலவர் உள்ளத்தில், மலைநாட்டில் தாம் கண்டு வந்த ஒரு வேர்ப் பலாமரத்தையும், அதன் வளைந்த கிளை ஒன்றில் இரு புறமும் காய்த்துத் தொங்கிக் கிடந்த இருபலாக் கனிகளையும் நினைவிற்குக் கொண்டுவரவே—வேர்ப்பலாவாதலால், மரம் ஏறவேண்டிய முயற்சியும் தேவைப்படாது, எளிதில் பறிக்கக் கிடைத்தமையால், ஒரு பழத்தைப் பறித்துப் பிளந்து, எண்ணிக்கையில் சிலவே ஆயினும், உருவில் பெரியவாக இருந்த சுளைகளைத் தின்றுவந்த இனிய உணர்வுக்கும் சிறிது பொழுது ஆட்பட்டுவிட்டார்; மீண்டும் தம் நினைவு வரப்பெற்றதும், நிமிர்ந்த காதுகளையுடையவாகிய, அக்கழுதைகள், வரிசை வரிசையாகச் செல்லும் வனப்பினை விளங்க எடுத்துரைத்தார்.
வணிகச் சாத்தோடு சிறுபடையும் செல்வதால், வழியில் இடையூறு இராது எனக் கூறி முடிக்குமளவில், இடை வழியில், மேலும் ஒரு வழித்துணை இருப்பதும் நினைவிற்கு வரவே, அதையும் உரைக்கத் தொடங்கினார் புலவர். மிளகு, விலையுயர்ந்த் பொருள். அம்மிளகு வாணிகம் புரிவார் பெரும் பொருள் ஈட்டுவர். அவ்வாறு ஈட்டும் செல்வத்தின் ஒரு பகுதியை வரியாகப்பெற அரசுக்கு உரிமை உண்டு. அதனால் அத்தகைய விலையுயர்ந்த வாணிகப் பொருள்கள் மீது வரிதண்டும் சுங்கச் சாவடிகளைப் பெருவழிகளில் அதிலும், பல பெருவழிகள் ஒன்றுகூடும் நாற்சந்தி, முச்சந்திகளில் நிறுவிவைத்திருந்தது அரசு. அத்தகைய சுங்கச் சாவடிகளில் வரியாக வாங்கிய பொற்காசுகள் திரண்டிருக்கும் ஆதலின், அந்நிதியைக் காத்தற்பொருட்டு அரசுப்படையின் ஒரு பிரிவாம் விற்படை ஆங்கு நிலையாக நிறுத்திவைக்கப்படும். சுங்கச் சாவடியும், அதுகாக்கும் விற்படை வீரர் வாழிடமும் இடம்பெற, ஒரு சிறு ஊரே போல் காட்சி அளிக்கும் அத்தகைய இடங்களும், வழிப் போவார்க்குப் பெருந்துணையாகும். ஆகவே, வழியச்சம் சிறிதும் இல்லை, பெரும்பாண! இனியும் தாமதம் செய்யாது. புறப்படுவாயாக என ஊக்கப்படுத்தினார் புலவர்.
"மலையவும் கடலவும் மாண்பயம் தரூஉம்
அரும்பொருள் அருத்தும் திருந்துதொடை நோன்தாள்
அடிபுதை அரணம் எய்திப், படம்புக்குப்
பொருகணை தொலைச்சிய புண்தீர் மார்பின்
விரவுவரிக் கச்சின், வெண்கை ஒள்வாள்
வரையூர் பாம்பிற் பூண்டுபுடை தூங்கச்
சுரிகை நுழைந்த சுற்றுவீங்கு செறிவுடைக்
கருவில் ஒச்சிய கண்ணகன் எறுழ்த்தோள்
கடம்புஅமர் நெடுவேள் அன்ன மீளி
உடம்பிடித் தடக்கை ஓடா வம்பலர்
தடவுநிலைப் பலவின் முழுமுதல் கொண்ட
சிறுசுளைப் பெரும்பழம் கடுப்ப மரியல்
புணர்ப்பொறை தாங்கிய வடுவாழ் நோன்புறத்து
அணர்ச்செவிக் கழுதைச் சாத்தோடு வழங்கும்
உல்குடைப் பெருவழிக் கவலை காக்கும்
வில்லுடை வைப்பின் வியங்காட்டு இயவின்."
(67–82)