உள்ளடக்கத்துக்குச் செல்

பெரும்பாணாற்றுப்படை-விளக்கவுரை/மறவர் வீர வாழ்க்கை

விக்கிமூலம் இலிருந்து



6. மறவர் வீர வாழ்க்கை

பாலை நிலத்தில் எயினர் குறும்புகளில் செந்நெல் அரிசி சோற்றையும் உடும்புப் பொரியலையும் வயிறுபுடைக்கத்தின்ற மகிழ்ச்சியோடு, மலைநாடாம் குறிஞ்சி நிலத்தில் நுழையும் பெரும்பாணனுக்கு அம்மண்ணின் வீரப்பெருமையை விளக்கத் தொடங்கினார்.

மகளிர் இயல்பாகவே அஞ்சும் இயல்புடையவர்; வேற்றொலி கேட்பினும் வியர்த்து ஒடுங்கி விடுவர் என்பதும், அஞ்சாமையும் தறுகண்மையும் ஆடவர்க்கே உரியவை; ஆகவே, வீரம் என்றால் அதை ஆடவர்பால் மட்டுமே காணலாம், என்பதும் உலகியல். ஆனால், இது குறிஞ்சி நிலத்தவர்க்கு முழுமையாகப் பொருந்தாது. அந்நிலத்து ஆடவர் எவ்வாறு அடலேறுபோன்ற ஆற்றல்மிகு மறவர்களாக வளர்க்கப்படுகிறார்களோ, அதற்குச் சிறிதும் குறையாத நிலையிலேயே, அந்நிலத்து மகளிரும் மறக்குடி மகளிராகவே வளர்க்கப்படுவர். மகளிர், கருவுற்றிருக்கும்போது சிறிதளவு அச்ச உணர்ச்சிக்கும் ஆளாகிவிடுதல் கூடாது என்ப. குறிஞ்சி நிலத்து மகளிர், இதற்கும், அப்பாற்பட்டவராவர். வாழும் நிலம் கொடு விலங்குகள் மண்டிக்கிடக்கும் காடுகள் செறிந்த மலைநாடு. கோடையில் இடியேறு கூடிய கொடு மழை கொட்டும். கருவுற்றிருக்கும் நிலையிலும், தினைக்காத்தலும் கிழங்கு அகழ்தலும் ஆகிய பணி மேற்கொள்ளும் அந்நிலத்து மகளிர், தங்களைத் தாக்க வரும் யானை கண்டு அஞ்சுவதற்கு மாறாக, அதை அச்சுறுத்தி ஓட்டி மகிழ்வர். படம் எடுத்துப் பாயும் பாம்பைக் கண்டு பயந்து விடாமல் மாறாக, அதைப் பற்றி ஈர்த்துப் பாறை மீது மோதி உயிர், போக்குவர். நீர் உண்டு சூல்கொண்ட கருமேகத்திடையே, கண்ணொளி கெடுக்கும் பேரொளியோடு தோன்றிக் காதுகள் செவிடுபடப் பேரொளி எழுப்பும் இடியொலி கேட்கும் நிலையிலும், கலங்காது தம்பணி மேற்கொள்வர்.

மகளிர் இயல்பே இது என்றால், ஆடவர் வீரம்பற்றிக் கூறவும் வேண்டுமோ? வெறும் உடல் உழைப்பால் பெறலாகும், ஊதியம் கொண்டு உடல் வளர்ப்பதை விரும்பார்; தம் ஆண்மையை நிலைநாட்டிப் பிறரை வெற்றி கொண்டு கொணரும் ஆக்கத்தால் மட்டுமே, தம் உடல் ஆக்கத்தைப் பெருக்க விரும்பும் பேருள்ளம் வாய்க்கப் பெற்றவர். அதற்கேற்ப வாட்போரில் வல்லவர். வாளோடு பிறந்தவர் எனக் கூறுமாறு, உண்ணும் போதும், உறங்கும்போதும்,எப்போதும் வாளேந்தியே காணப்படுவர்.

இம்மறக்குடி மாந்தரின் தலைவனாக வருபவன், அரும்பு மீசையுடைய கட்டிளங் காளையாக, காண்பவர், ஆண் புலிதானோ என எண்ணி அஞ்சும் தோற்றப் பொலிவு உடையவனாகத் திகழ்வான். அவன் கீழ்ப் பணிபுரியும் வீரர்கள், குறிப்பிடும் விலங்கின் மீது குறி தவறாது பாய்ந்து பற்றி ஈர்த்து வரும் ஆற்றலும், தன்னை வளர்ப்பவன் பின், அவன் நிழல்போல் தொடர்ந்து செல்லும் அன்பும் வாய்க்கப் பெற்ற நாய் போன்றவர்கள்; அவன் ஏவும் இடம் சென்று ஏவிய பணியை முடித்து மீளவல்லவர்; அவனை ஒருபோதும் பிரியாப் பேரன்புடையவர். கையில் எப்போதும் வில்லேந்தி இருப்பவர்.

ஆண்மையும் ஆற்றல்மிகு வீரர்களும் இருப்பதால், அவன், தன் ஆணைகேட்டு அதற்கேற்ப நடந்து கொள்ள மறுக்கும் அரசனுக்குரிய அண்டை நாட்டினுள், ஆங்குள்ள அரிய காவல் கண்டு அஞ்சாது, இரவோடு இரவாகப் புகுந்து எல்லைக் காவற்படைகளை அழித்து, அந்நாட்டு எல்லைக் கண் இருக்கும் அந்நாட்டு ஆனிரைகளைப் பொழுது புலர்வதற்கு முன்பே கவர்ந்து கொண்டு வருவர். ஊர் வந்தடைந்ததும் முதற்பணியாக, அன்றுவரை தங்களுக்குக் கடனுக்குக் கள் வழங்கிய கள் விலையாட்டிக்குக் கள் விலையாக, ஆனிரைகளில் ஒரு சிலவற்றைத் தந்து விடுவர். பின்னர்த் தங்கள் மனைகளில், தாங்களே காய்ச்சி வைத்திருக்கும் கள் வகைகளுள், மிக இனியதாகிய, நெல் இட்டுக் காய்ச்சிய கள்ளை உண்டு மகிழ்வர். பிறகு ஊர் மன்றத்திற்குச் சென்று, ஆங்குத் தம் வெற்றியைக் கொண்டாட கொண்டு வந்த ஆனிரைகளுள், கொழுத்துத்திரியும் கொல்லேற்றை அறுத்து, ஆக்கி, ஊராருடன் ஒருங்கிருந்து உண்டு, மகிழ்வர். அது முடிந்ததும் வீர விளையாட்டு மேற்கொள்வர். கொன்ற கொல்லேற்றின் தோலை, மயிர் சிவாமல் மடித்துப்போர்த்த மத்தளத்தை, ஒருவன் கூட்டத்தின் நடுவே வைத்து அடித்து முழக்க அவ்வொலிக்கு ஏற்ப, வில்லேந்திக் கிடக்கும் இடத் தோள்கள் வலப்புறம் வளையவும், வலத்தோள்கள் இடப்புறம் சாயவும் பகலெல்லாம் ஆடி மகிழ்வர்.

இவ்வாறு, சோம்பல் என்பதைச் சிறிதும் அறியாது வீர வாழ்க்கை வாழும் கானவர் குடியிருப்புகள் மிகுந்த மலை நாட்டில், மறவர்களின் வீர விளையாடல்களைக் கண்டு மகிழ்ந்தவாறே, காட்டுப் பாதையைக் கடந்து செல்வீர்களாக என்றார்:


"யானை தாக்கினும் அரவு மேல் செலினும்
நீல்நிற விசும்பின் வல்ஏறு சிலைப்பினும்
சூல் மகள் மாறா மறம்பூண் வாழ்க்கை
வலி கூட்டு உணவின் வாட்குடி பிறந்த
புலிப்போத்து அன்ன புல் அணல் காளை
செந் நாய் அன்ன கருவில் சுற்றமொடு
கேளா மன்னர் கடிபுலம் புக்கு

நாள் ஆதந்து நறவு நொடை தொலைச்சி

"இல் அடு கள்ளின் தோப்பி பருகி
மல்லல் மன்றத்து மதவிடை கெண்டி
மடிவாய்த் தண்ணுமை நடுவண் சிலைப்பச்
சிலைநவில் எறுழ்த்தோள் ஒச்சி வலன் வளையூஉப்
பகல் மகிழ்தூ ங்கும் தூ ங்கா இருக்கை

முரண்தலை கழிந்த பின்றை."

(134-147)

(யானை தாக்கினும்—யானை தாக்க வந்தாலும்; அரவு மேல் செலினும்—பாம்பு தன்மேல் ஊர்ந்து சென்றாலும், நீல் நிற விசும்பின்—நீல நிறம் வாய்ந்த மேகத்திடையே தோன்றும்; வல்ஏறு சிலைப்பினும்—கொடிய இடி இடித்தாலும்; சூல் மகள்—கருவுற்ற மகளும்; மாறா மறம் பூண் வாழ்க்கை—அவற்றிற்கு அஞ்சித் தன் வாழ்க்கை முறைகளை மாற்றிக் கொள்ளாத வீரம் செறிந்த வாழ்க்கையினையும்; வலிக்கூட்டு உணவின்—தம் ஆற்றலால்; பிறர் நாட்டைக் கொள்ளைகொண்டு உண்ணும் வழக்காற்றினையும் உடைய; வாள்குடிப் பிறந்த—வாள் தொழில் வல்ல குடியில் பிறந்த; புலிப் போத்து அன்ன—ஆண்புலி போன்ற; புலி அணல் காளை—புல்லிய அரும்பு மீசை கொண்ட அக்குடித் தலைவன்; செல் நாய் அன்ன—குறித்த விலங்கின் மீது குறி தவறாது பாயவல்ல நாயை ஒத்த; கருவில் சுற்ற மொடு—ஏவிய பணியை இடையூறு இன்றி முடிக்க வல்ல, வலிய விற்படையுடைய வீரர்களுடன்; கேளா மன்னர் கடிபுலம் புக்கு—தன் ஆணைகேளாத பகை அரசருடைய காவல்மிக்க இடத்தே சென்று; நாள் ஆதந்து—விடியற்காலத்தில் அவர்கள் ஆனிரைகளைக் கவர்ந்து வந்து, நறவு நொடை தொலைச்சி—அவற்றை கள்ளுக்கு விலையாகக் கொடுத்து; இல்அடுகள்—வீட்டில் உள்ள கள் வகைகளில்; இன் தோப்பி பருகி—இனிய, நெல்லால் செய்த கள்ளை உண்டு; மல்லல் மன்றத்து—
ஆரவாரம் மிக்க ஊர் மன்றத்தில்; மதவிடை கெண்டி—கொழுத்த கொல்லேற்றை அறுத்துத் தின்று; மடிவாய்த் தண்ணுமை—மடிந்த தோல் போர்த்த தண்ணுமை; நடுவண் சிலைப்ப—நடுவே இருந்து முழங்க; சிலை நவில் எறுழ்தோள் ஓச்சி—வில் கிடக்கும், வலிய இடது தோளைத் தூக்கி; வலன் வளையூஉ—வலப் பக்கமாக வளைத்து; பகல் மகிழ் தூங்கும்—பகற் போதெல்லாம் மகிழ்ந்து ஆடிச் சிறக்கும்; தூங்கா இருக்கை—சோம்பலைக் காணாக்குடியிருப்புகளைக் கொண்ட; முரண் தலை கழிந்த பின்றை—கரடுமுரடான காட்டு நிலத்தைக் கடந்த பின்னர்.)