உள்ளடக்கத்துக்குச் செல்

உழைப்பாளி தொழிலாளி பாட்டாளி/13. கைத்தறி நெசவாளர்கள் பற்றி அண்ணா

விக்கிமூலம் இலிருந்து

13. கைத்தறி நெசவாளர்கள் பற்றி
அண்ணா

ஒரு காலத்தில் உலகம் பார்த்து வியப்படையக் கூடிய வகையிலே உயர்ந்த முறையில் நெசவு செய்து புகழ் பெற்ற நம் நாட்டு நெசவாளர்களுக்கு ஏன் இன்று இந்த நிலை? அவர்கள் பல நெருக்கடிகளுடனேயே வாழ வேண்டியிருக்கிறது; நெசவாளியும் நெருக்கடியும் ஒன்றாக பிறந்தது போல் என்றைக்கும் ஏதாவது ஒரு நெருக்கடி அவர்களைச் சூழ்ந்து கொண்டிருக்கிறது.

ஒரு காலத்தில் நெய்வதற்கு நூல் கிடைக்காது; நூல் கிடைத்தால் மற்ற சாதனங்கள் கிடைக்காது; எல்லாம் கிடைத்து நெய்தால், துணி விலை போகாது; தக்க ஊதியம் கிடைக்காது; இந்த நிலையைத்தான் கடந்த பல ஆண்டுகளாக நாம் கண்டு வந்திருக்கிறோம்; இதற்கு ஒரு பரிகாரம் கண்டாக வேண்டும்.

"நோயுற்றிருக்கும் ஓர் ஆள், இனிப் பிழைக்கவே முடியாது' என்றால், அவனை அழைத்துச் செல்ல வேண்டிய இடம் -- வைத்தியன் வேறு; பிழைப்பான் என்றால் அழைத்துச் செல்ல வேண்டிய இடமும் -- வைத்தியனும் வேறு; பிழைக்கவே கூடாது என்றால் அதற்கான இடம் வேறு; அதைப் போல் கைத்தறிப் பிரச்சினையிலும் ஒரு முடிவை நிர்ணயித்துக் கொள்ள வேண்டும்."

ஆண்டுக்குப் பத்துக் கோடி ரூபாய் அந்நியச் செலாவணியை இந்தியாவுக்குத் தேடிக் கொடுத்துக் கொண்டு -- இந்த விஞ்ஞான யுகத்தையும் சமாளித்துக் கொண்டு ஆலைகளுடன் போட்டியிடக் கூடிய ஒரு தொழிலாக இருக்கிறது இது!

நான் ஏதோ கனவு காண்பதாக நினைக்க வேண்டாம்; உண்மையிலேயே இந்த நாட்டை - தென்னகத்தை நாமே ஆளும் நிலை வருமானால், அமெரிக்காவுக்கு மேஜை விரிப்புத் துணி மட்டும் இங்கிருந்து கைத்தறித் துணியாக அனுப்பி -- அதன் மூலம் ரூபாய் 50 கோடி அந்நியச் செலாவணியை நாம் பெற முடியும், உலகம் பார்த்து மெச்சக் கூடிய--பாராட்டக்கூடிய நிலையில் முன்பிருந்த நிலையை நாம் மீண்டும் பெறமுடியும்.

இந்தக் கைத்தறித் தொழிலுடன் எனக்குள்ள தொடர்பும் அக்கறையும், நான் பொறுப்பேற்றுக் கொண்டுள்ள இந்த நேரத்தில் மட்டுமன்று--அதற்கு முன்பிருந்தே இருந்து வருகிறது; இதற்குக் காரணம், நான் பிறந்து--வளர்ந்து--வாழ்ந்து வருகின்ற காஞ்சிபுரம், நெசவாளர்கள் நிறைந்துள்ள பகுதியாகும்.

காஞ்சிபுரம் என்பது--நெசவாளர்கள் நிரம்பிய பேட்டைகளும், பாளையங்களும், வீதிகளும் நிறைந்துள்ளதாகும். நெசவுத் தொழிலை நம்பியுள்ள மக்கள் நிறைந்த பகுதியில் வாழ்கின்ற காரணத்தால், பல ஆண்டுகளாக அவர்களது சிரமங்களை நேரடியாக உணர்ந்துள்ள நான், இந்தத் தொழிலின் மீது அக்கறை காட்டுவது இயற்கையே!

நெசவாளர்களின் துன்பம் நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டிருக்கின்றது; அதற்குரிய பரிகாரங்கள் கிடைக்கவில்லை என்று கூறப்பட்டது.

நூல் எப்போதும் சிக்கலுக்கு ஆளாவதுதான்; நூலுடன் தொடர்பு கொண்டுள்ள நெசவாளர்களின் வாழ்க்கையும் சிக்கல் கொண்டதாகத்தான். இருக்கும்; பக்குவமாக அந்தச் சிக்கலை நீக்குவது தான், இப்போது நாம் செய்ய வேண்டிய வேலை!

இந்தச் சங்கத்தை நடத்துபவர்கள், எந்த அளவு முயற்சி எடுத்துக் கொண்டு இந்தச் சிக்கலைப் பக்குவமாக நீக்க வேண்டுமோ--அந்த அளவு முயற்சி எடுத்துக் கொண்டு செயல்பட வேண்டியவர்களாக இருக்கின்றார்கள்!

மற்ற ஆலைத் தொழிலுக்குக் கிடைக்கும் வாய்ப்பும்---வசதியும்--விஞ்ஞானக் கருவிகளின் துணையும்--பொறிகளின் உதவியும் கிடைக்காத நிலையிலும், நேர்த்தியாக--நீடித்து உழைக்கக்கூடிய--நல்ல தரமுள்ள--மெச்சத்தக்க--வியக்கத்தக்க வகையில் நமது கைத்தறியாளர்கள் துணிகளைத் தயாரிக்கின்றனர்!

ஆலைகளில் பொறிகளின் துணைக் கொண்டு உற்பத்தி செய்யப்படும் சரக்கைவிடக் கண்ணைக் கவரத்தக்க வகையில் புதுப்புது ரகங்களை கைத்தறியில் உற்பத்தி செய்கின்றனர்!

ஆலைகளில்தான் இப்படிப்பட்ட துணிகளை உற்பத்தி செய்ய முடியும்' என்ற நம்பிக்கை இருந்து வந்த காலம் ஒன்றிருந்தது; ஆனால், இன்று ஆலைகளையும் மிஞ்சத் தக்க வகையில்--விதவிதமான வேலைப்பாடுகளுடன் வேகமாகவும் தயாரிக்க முடியும் என்பதை, நமது நெசவாளர்கள் மெய்ப்பித்து வருகின்றனர்!

இருந்தும், அவர்களது வாழ்வில் முன்னேற்றமில்லை; எதிர்காலத்தில் நம்பிக்கை ஏற்படக் கூடியதாக இல்லை! என்றாலும் பல்லாண்டுகளாக இருந்து வரும் கலைத்திறனை--உலக மக்கள் பாராட்டி வரவேற்கும் அளவுக்கு வளர்ந்துள்ள வெளிநாட்டுச் சந்தையிலிருந்து, ஏராளமான, பணத்தை ஈட்டித் தரும் ஒரு நேர்த்தியான கலைத்திறனை--அப்படியே அடியோடு அழிந்து போகும்படி விடுவது விரும்பத் தக்கதன்று!

வெள்ளை வேட்டியாகட்டும் வண்ணச் சேலையாகட்டும்--எதைப்பார்த்தாலும் கண்ணைக் கவரக் கூடியதாக--கருத்தை ஈர்க்கக்கூடியதாக இருக்குமே அல்லாது, 'நம்முடைய அனுதாபத்திற்குப் பாத்திரமாக வேண்டும்' என்ற பரிதாபத்திற்குரிய நிலையில் எதுவும் இருக்காது!

எந்தச் சரக்கைப் பார்த்தாலும், 'அதை வாங்கலாமா என்று தோன்றுமே தவிர, அந்தச் சரக்கின் நேர்த்தியைப் பற்றி--நீடித்து உழைக்கும் தரத்தைப் பற்றி அய்யப்பாடோ, 'நெசவாளியின் நேர்மை--நாணயம் பற்றி ஆராய்ச்சியில் ஈடுபட வேண்டும்' என்றோ யாருக்கும் தோன்றாது.

அப்படிப்பட்ட நெசவாளர் குடும்பங்கள் பல இன்று ஏழ்மையிலே உழலுகின்றது! அவர்களிடம் உள்ள தொழில் திறனை வேறு எதிலும் காண முடியாது! இருந்தும் இலட்சக்கணக்கான கெசமுள்ள கைத்தறித் துணி தேங்கிக்கிடக்கிறது நாட்டில்!

கைத்தறியாளர்கள்--புதுப்புது 'மோஸ்தர்'களைக் கண்டு பிடிக்கிறார்கள்! ஆலைக்காரர்கள் கூட அப்படிக்கண்டு பிடிக்க முடியாது.

நெசவாளி--தான் மட்டுமா வேலை செய்கிறான்? அவனுடைய மனைவியும், மகனும் கூட அல்லவா வேலை செய்கிறார்கள்? இருந்தும் வாழ்க்கைக்கு ஏற்ற ஊதியம் கிடைக்கவில்லை! மாலை 6 மணிக்கே எங்கள் ஊர்ப் பிள்ளையார்ப் பாளையத்தில் விளக்கை அணைத்துத் தூங்கி விடுகிறார்கள்--'இரவு பத்து மணி வரை விழித்தால் விளக்கு எண்ணெய் செலவாகுமே என்று! அப்படிப்பட்ட கேவலமான நிலையில் வாழ்க்கை நடத்துகிறார்கள்! அவர்களுடைய வாழ்க்கையில் நிம்மதி இல்லை! அவர்கள் வாழ்வு வளம் பெற வழிவகைகள் செய்யப்பட வேண்டும் என்பதே நம் குறிக்கோள்!

(1967-ல் அண்ணா அவர்களின் உரை)