உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:குழந்தை செல்வம்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

40

குழந்தைச் செல்வம்


அன்றியும் உன் தம்பி மாரும் கடும்பசி
      ஆறிக் களித்திருப்பார்கள் அன்றோ?
இன்றினிச் செய்வதென்? இவ்வுலகம் விட்டு
      யாத்திரை போவது திண்ணம்' என்றார். 11

ஆனதனாலே கிடைத்த பொருளை - நாம்
      ஆகும் மட்டும்பகுத் துண்ணவேண்டும்;
ஈனமாந் தன்னயத் தால்வருந் துன்பமே;
      இன்பம் அளிக்கும் பொதுநயமே. 12

அளவு கடந்திடில் ஆரமுதும் - விஷம்
      ஆகும் என்று நம தான்றோர்கள்
உளபடியே சொன்ன வாக்கியத் துண்மையை
      உள்ளத்திற் கொள்ளுங்கள், தோழர்களே! 13

36. ஔவையும் இடைச்சிறுவனும்

வேனிற் பருவத்திலே - ஒருநாள்
     வெய்யில் வேளையிலே,
ஞானத் தமிழ்க்கடலென் - றிந்த
     நாடு புகழும் ஒளவை, 1

தூரம் மிகநடந்து - களைத்துச்
     சோர்ந்து, வரும் வழியின்
ஓரத்தில் ஓர்நாவல் - நிழலில்
     ஒதுங்கிச் சற்றுநின்றாள். 2