ஆசிரியர்:மகாவித்வான் ரா. ராகவையங்கார்
இந்த பக்கமோ அல்லது பகுதியோ ஆசிரியர்:ரா. இராகவய்யங்கார் உடன் ஒன்றிணைக்கப் பரிந்துரைக்கப்படுகின்றது. (உரையாடுக) |
←ஆசிரியர் அட்டவணை: ரா | மகாவித்வான் ரா. ராகவையங்கார் (1870–1946) |
மகாவித்துவான் ரா. இராகவையங்கார் . 20-9-1870ல் தோன்றினார். இவர் பிறந்த ஊர், சிவகங்கைச் சீமையைச் சார்ந்த தென்னவராயன் புதுக்கோட்டை. இவருடைய தந்தையார், இராமாநுஜையங்கார்; தாயார் பதுமாசனி அம்மையார். இவர் பிறந்த, கோத்திரம் நைத்துருவகாசிப கோத்திரம் ஆகும். இவர் தம் வாழ்க்கைக் குறிப்பினைக் கீழே காணலாம். |
வாழ்க்கைக் குறிப்பு
[தொகு]சேது சமத்தான மகாவித்துவான் - ரா. இராகவையங்கார்
(1870-1946)
ஆக்கம்: மு. சண்முகம் பிள்ளை
தமிழுலகில் மகா வித்துவான் என்றால், திருவாவடுதுறை ஆதீன மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை அவர்களின் திருப்பெயரே முன்னிற்கும். அது போலவே, சேதுசமத்தான மகாவித்துவான் என்றால், ரா. இராகவையங்கார் நம் எண்ணத்தில் மு.ற்படுவரர். எத்தனையோ மகா வித்துவான்கள் சேது வேந்தர் அவையை அலங்கரித்த போதிலும், ரா. இராகவையங்கார் அம்மகா வித்துவான்௧ளுள்ளே முன்னணியில் வந்து நிற்கிறார்.
மகாவித்துவான் ரா, இராகவையங்கார் . 20-9-1870ல் தோன்றினார். இவர் பிறந்த ஊர், சிவகங்கைச் சீமையைச் சார்ந்த தென்னவராயன் புதுக்கோட்டை. இவருடைய தந்தையார், இராமாநுஜையங்கார்; தாயார் பதுமாசனி அம்மையார். இவர் பிறந்த, கோத்திரம் நைத்துருவகாசிப கோத்திரம் ஆகும்
இளமையில் ஐந்தாம் வயதிலேயே தம் தற்தையாரை இழந்தார். இராகவையங்கார். இவருடைய தாய் மாமனார் சதாவதானம் முத்துசாமி ஐயங்கார் இராமநாதபுரம் சமத்தானத்தில் அரசவைப் புலவராய் அந்நாளில், சிறப்புடன் விளங்கினார். அவர் தமிழிலும், வடமொழியிலும், கன்னடம் முதலிய பிற மொழிகளிலும் வல்லவர். சதாவதாதானி என்பது இவர் தம் கல்வியின் மிகு சிறப்பால் பெற்ற விருதுப் பெயராகும், இத்தகு பெருமை பல கொண்ட தாய் மாமனாரின் ஆதரவில் இராகவையங்கார், இராமநாதபுரத்தில் கல்வி பயின்றார். மெட்ரிக்குலேசன் வரை பள்ளிக் கல்வி பெற்றதோடு, தம் அம்மானிடமும், சமத்தானப் புலவர்களிடத்தும் தமிழும், வடமொழியும் பயின்றார். இளமையிலேயே, கூரிய அறிவும், கவி பாடும் திறமையும் பெற்று இவர் விளங்கினார்.
இராகவையங்கார் , தம் 18ஆம், அகவையிலேயே மதுரைச் சேதுபதி உயர்நிலைப் பள்ளியில் தமிழாசிரியராய்ப் பணி புரியத் தொடங்கினார். இச்சமயம் ஜானகி ௮ம்மாளை வாழ்க்கைத் துணையாகப் பெற்றார். திருச்சியில் உள்ள சேஷையங்கார் பள்ளியிலும் சில காலம் இவர் தமிழாசிரியராக இருந்தார்.
மாண்புமிகு பாஸ்கர சேதுபதி மகாராசா அவர்சுள் இராகவையங்காருடைய புலமைத் திறத்தை மெச்சித் தம் அவையில் தலைமை மகா வித்துவானாக்கினார். இவருக்குப் பல்லக்கு முதலிய வரிசைகளையும் நல்கினார். சமத்தான தர்ம மகமை நிதியிலிருந்து பசலி தோறும் ஆயுட்கால பரியதிதம் ரூபாய் 635 சம்மானமாகத் தரவும் உரிமைப் பத்திரம் பதிவு செய்து தந்துள்ளார். அப்பத்திரத்தில் இராகவையங்காருடைய பல துறைப் புலமையையும் பாஸ்கர சேதுபதி அவர்கள் எடுத்துரைத்துப் பாராட்டியிருப்பது காணத்தக்கதாம்.
இப்பத்திரத்தில் பாஸ்கர சேதுபதி அவர்கள் இராகவையங்கார் அவர்கள் தமிழ்ப் புலமையிலும் தமிழ்ப் பணியிலும் சேது சமஸ்தானத்தில் எவ்வளவு சிறப்புடையராய் விளங்கினார் என்பதனை எடுத்துக் காட்டியிருத்தல் காணலாம்.
சேது சமத்தான வித்துவானாக இவர் விளங்கிய காலத்தில்தான் சுவாமி விவேகானந்தர் அங்கு வந்து, சேதுபதிகளின் ஆதரவினால், மேல் நாடுகளுக்குச் சென்று திரும்பினார். சுவாமி விவேகானந்தர் போன்ற பெரியோர்களின் பழக்கம் இவருக்கு ஏற்பட ஒரு வாய்ப்பாயிற்று, சேதுபதியை நாடி வந்து பொருளுதவி பெற்ற புலவர் பெருமக்கள் பலராவர். அப்புலவர்களுடனும் கலந்து பழகும் வாய்ப்பும் இவருக்கு நேர்ந்தது.
பாஸ்கர சேதுபதிகளின்ஆதரவில், பாண்டித்துரைத் தேவரவர்சுளின் முயற்சியால், மதுரை மாநகரில் தமிழ்ச் சங்கம் 1901ஆம் ஆண்டு செப்டம்பர் 14 ஆம் நாள் நிறுவப் பெற்றது. இச்சங்கத்தை நிறுவும் பணியில் இராகவையங்கார், தேவர் அவர்களுக்குப் பெரும் துணையாயிருந்தார். நான்காம் தமிழ்ச் சங்கம் என இது போற்றப் பெற்றது. சங்கத்திலிருந்து தமிழ்ப்பணி புரியத் தம் அவைப் பெரும் புலவரான இராகவையங்காரைச் சேதுபதியவர்கள் அனுப்பி வைத்தார்.
மதுரைத் தமிழ்ச் சங்கத்தில் நூற்பதிப்பு, ஆராய்ச்சித் துறைகளின் தலைவராய் இராகவையங்கார் விளங்கினார். மதுரைத் தமிழ்ச் சங்கமும், செந்தமிழ்ப் பத்திரிகையும், பெரும் புகழ் பெற்று விளங்குவதற்கு இவரே காரணமாயிருந்தார். இலக்கிய ஆராய்ச்சியும், சரித்திர ஆராய்ச்சியும் இவரால் பெரிதும் ஊக்குவிக்கப்பட்டன,
அந்நாளில் பல இடங்களுக்கும் சென்று பழஞ்சுவடிகளை தேடிச் சேர்த்துச் சங்கத்துப் பாண்டியன் புத்தக சாலையில் தொகுத்து வைத்தார். மதுரைத் தமிழ்ச் சங்கத்தில் 1902 ஆம் ஆண்டிலே ‘செந்தமிழ்’ என்னும் திங்கள் இதழ் தொடங்கப் பெற்ற போது, இப்பத்திரிகையின் முதல் இதழாசிரியராக இராகவையங்கார் பொறுப்பேற்றார். இப் பத்திரிகையில் ‘ஆராய்ச்சி’ என்னும் தலைப்பில் இவர்கள் தொடர்ந்து தமிழிலக்கிய இலக்கணம் முதலியன குறித்து ஆய்வுரைகள் எழுதி வந்தார். இவருடைய ஆழ்ந்த கல்வியும், நுண்ணிய ஆராய்ச்சித் திறனும், பொருள்களை முறைப்படப் பாகுபடுத்திப் பார்த்து விளக்கும் பேராற்றலும் இவர் எழுதிய கட்டுரைகளில் புலனாகின்றன.
செந்தமிழ் வாயிலாகப் பழஞ்சுவடிகளிலிருந்து எடுத்து இவர் பதிப்பித்த நூல்களும் பலவாகும். அவையாவன ஐந்திணையைம்பது—உரை, கனா நூல், வளையாபதிச் செய்யுட்கள், புலவராற்றுப்படை, இனியவை நாற்பது உரை, நேமிநாதம் உரை, திருநூற்றந்தாதி, முத்தொள்ளாயிரச் செய்யுட்கள், பள்னிரு பாட்டியல், தொல்காப்பியச் செய்யுளியல் நச்சினார்க்கினியர் உரை முதலியனவாகும். எட்டுத் தொகை நூல்களுள் ஒன்றாகிய அகநானூற்றைப் பதிப்பிக்கச் சங்கத்தின் வாயிலாக, இவர் எடுத்த முயற்சி முற்றுப் பெறவில்லை. பின்னாளில், ‘கம்பர் விலாசம்’ இராச. கோபாலையங்கார் இந் நூலை வெளியிட முன் வந்த போது, தாம். முன்பு தொகுத்து வைத்திருந்த குறிப்புகள் முதலியவற்றை அவருக்கு வழங்கி, அந்நூல் சிறப்புற வெளிவர உதவினார். இவ்வாறு வேறு புலவர் சிலருக்கும், இவர் ஏடுகள் முதலியன தந்து உதவியுள்ளார்.
கைந்நிலைப் பிரதியை இ.வை. அனந்தராமையர் விரும்பிய போது, இவர் மனமுவந்து அவருக்கு அதனை அளித்தார்; இவ்வாறே தொல்காப்பிய இளம்பூரணம் செய்யுளியல் உரைப் பிரதியையும், நவநீதப் பாட்டியல் உரையையும், இவர் யாதொரு வகைக் கைம்மாறும் கருதாது, பேராசிரியர் எஸ். வையாபுரிப் பிள்ளையவர்களுக்குத் தந்தனர். பிள்ளையவர்கள் அவற்றைத் தம் பதிப்பில நன்கு பயன்படுத்திக் கொண்டுள்ளார். தாம் கற்ற கல்வியைத் தம்முடன் மாய்ந்து போக விடாதபடி, அறிஞர் பிறருக்கும் உதவ வேண்டும் என்னும் பேரவா உடையார் இராகவையங்கார் என்பது மேற்கூறியவற்றால் தெரிய வரும்.
டாக்டர் உ.வே. சாமிநாதையரவர்களைப் போலவே, இவரும் நம் பண்டை நூற் கருவூலங்களைத் தேடித் தொகுத்து வைப்பதில், பேரூக்கம் கொண்டிருந்தார். மதுரைத் தமிழ்ச் சங்கத்திற்கு, இவர் தேடியளித்த சுவடிகள் பலவாகும். பின்னாளில் தம்மிடமிருந்த ஏட்டுச் சுவடிகள் பலவற்றைப் பலர்க்கும் பயன்படும் வகையில் அண்ணாமலைப் பல்கலைக் கழக நூல் நிலையத்திற்கு, இவர் தந்து விட்டமை குறிப்பிடத் தக்கது. அவர்தம் இல்லத்தில் எஞ்சியிருந்த சுவடிகளை (51) அவருடைய புதல்வர் வித்துவான் இராமானுஜையங்கார், தமிழ்ப் பல்கலைக் கழகத்திற்கு அளித்துள்ளார் என்பதும் குறிப்பிடத் தக்கது.
பழைய சுவடிகளைக் காகிதத்தில் பிரதி செய்து இவர் படித்ததும் உண்டு. இராமநாதபுரத்தில் உள்ள அவர் மாளிகைக்கு, நான் சென்றிருந்த போது, மகாவித்துவான் அவர்களால் எழுதப் பெற்ற நீலகேச உரையுடன் கூடிய கையெழுத்துப் பிரதியை அவர் மகனார் காட்டினார். சமண சமயம். சார்ந்த தத்துவக் கருத்துகள் மிகுந்த இந்நூலையும் உரையையும் பிரதி செய்து படித்துமையை நோக்கினால், சமயக் காழ்ப்பின்றித் தமிழ் நலம் பேணுவதொன்றே, இவர் தம் நோக்கமாயிருந்தது.என்பது தெரிய வரும்.
இராகவையங்கார், பாஸ்கர சேதுபதி, முத்துராமலிங்க ராசராசேசுவர சேதுபதி, சண்முக ராசேசுவர நாகநாத சேதுபதி ஆகியோர் காலத்திலும். தொடர்ந்து சேது சமத்தான மகா வித்துவானாயிருந்தார். தந்தை. மகன். பேரன் மூவரும், மகாவித்துவானிடம் பெரும் மதிப்பு வைத்துப் போற்றி வந்தனர்.
{{fqm|“இன்பாற் கரனா ரிராசரா சேச்சுரச்சேய் தென்னாக நாதவர சேதுபதி—மன்னரிவர் வீறுமே வன்ன மிசையாதே லென்னாவே கூறுமே பாரி கொடை”
எனத் தாம் செய்த பாரிகாதைக் காவியத்தில் தம்மைப் புரந்த சேதுபதிகள் மூவரையும், நன்றியுடன் போற்றியுள்ளமை காணலாம்.
மதுரைத் தமிழ்ச் சங்கத்தின் 13ஆம் ஆண்டு விழாவில் இவர் படித்த ‘சேதுநாடும் தமிழும்’ என்னும் ஆய்வுரை தனி நூலாகச் சங்கத்தின் வழி வெளியிடப்பட்டுள்ளது. இராசராச சேதுபதியவர்களின் தூண்டுதலால் ‘வஞ்சிமா நகரம்’ என்னும் ஆராய்ச்சி நூலை ஆக்கி வெளியிட்டார். செந்தமிழில் தாம் எழுதி வந்த சங்க காலப் பெண் புலவர்களின் வரலாற்றைத் தொகுத்து ‘நல்லிசைப் புலமை மெல்லியலார்’ என்னும் பெயரில் வெளியிட்டார். பிற்குறித்த இரு நூல்களும் அந்நாளில் கல்லூரி மாணவர்களுக்குப் பாடப் புத்தகமாகவும் அமைக்கப் பெற்ற சிறப்புக்குரியனவாகும்.
அவ்வப்போது பாடல் நூல்கள் பலவும் இவர் ஆக்கி வெளியிட்டார். அவற்றுள் புவி எழுபது, தொழிற் சிறப்பு, திருவடி மாலை, சீராம நாமப் பாட்டு என்பவை குறிப்பிடத்தக்கன. ‘இராசராசேசுவர சேதுபதி ஒரு துறைக் கோவை’ ஒரு சிறந்த படைப்பாகும். அவ்வப்போது இவர் பாடிய தனிப்பாடல்களும் பலவாகும்.
சென்னை, மதுரை, தஞ்சை முதலிய இடங்களில் நடைபெற்ற தமிழ் விழாக்களில் கலந்து கொண்டு, தலைமை வகித்தும், சொற்பொழிவாற்றியும் அவையோரை மகிழ்வித்து வந்தார். வடமொழியிலும் வல்ல இவர், இருமொழி நூல்களிலும் இனிய பகுதிகளை எடுத்துக் காட்டிச் சொற்பொழிவாற்றும் முறை கேட்போரைக் கவர வல்லதாயிருந்தது. இவருடைய அரிய பெரிய பொருள் நயம் மிக்க சொற்பொழிவுகளைக் கேட்பதன் பொருட்டுப் பெருந்திரளாகத் தமிழறிஞர் கூடுவது, வழக்கமாயிருந்தது.
சென்னைப் பல்கலைக்கழகத்தில் கம்ப ராமாயணம் பற்றியும் வேறு சில பொருள்கள் பற்றியும், அரிய உரைகள் பல முறை நிகழ்த்தியுள்ளார். சென்னை நகரிலுள்ள அறிஞர் பெருமக்கள் பலரும் இவருடைய சொற்பொழிவுக்கு வந்திருந்து, கேட்டு இன்புற்றனர். இவர்களுள் மகாகனம் சீநிவாச சாத்திரியார், சர். எஸ். வரதாச்சாரியர், டாக்டர் உ. வே. சாமிநாதையர் முதலிய சிறந்த பேரறிவாளரும் வந்து கலந்து கொண்டது குறிப்பிடத் தக்கது. இவருடைய வாக்கு வன்மை அறிஞர் பெருமக்களையும், பிறரையும் எவ்வாறு கவர்ந்து இழுத்தது என்பதற்கு இந்நிகழ்ச்சி தக்க எடுத்துக்காட்டாகும்
வடமொழி நூல்கள் சிலவற்றைத் தமிழில் மொழி பெயர்த்தும் உள்ளார். பகவத் கீதை முழுமையும் தாழிசைப் பாக்களில் மூல நூலின் சொற் பொருளமைதி பிறழா வண்ணம், தமிழில் மொழி பெயர்த்துள்ளார். இந்நூல் இன்னும் அச்சாகவில்லை. இக்கீதைத் தாழிசை குறித்து விரிவுரைகளும், சென்னை முதலிய இடங்களில் ஆற்றினார். மகாகனம் வி. எஸ். சீநிவாச சாத்திரியார் அவர்களின் வேண்டுதலால், காளிதாச மகாகவியின் சாகுந்தலத்தைப் பாட்டும், உரையும் கலந்த நடையில் தமிழில் மொழி பெயர்த்துள்ளார். வடமொழிச் சுலோகத்திற்குச் சந்தப் பாடலும், வடமொழியிலும் பாகதத்திலும் உள்ள உரைநடைக்குத் தமிழுரை நடையுமாக அமைத்துள்ளார். இம்மொழிபெயர்ப்பு நூல் வி.எஸ். சீநிவாச சாத்திரியார் அவர்களுடைய பொருளுதவியால், 1938-ல் பதிப்பிக்கப் பெற்றது. வால்மீகி இராமாயணத்தில் சில பகுதிகளையும், இரகு வமிசத்தில் சில சருக்கங்களையும், இவர் தமிழாக்கம் செய்துள்ளார். வியாச பாரதத்திலுள்ள நீதிப் பகுதிகளை வெண்பாவில் அமைத்து 203 பாடல்களில், ‘பாரத நீதி வெண்பா’ என்னும் ஓர் அறநூலையும் ஆக்கியுள்ளார். வடமொழி நூல்களின் மொழி பெயர்ப்புத் தொண்டினைச் சிறப்பிக்கு முகத்தான் இவருக்கு ‘பாஷா கவிசேகரர்’ என்னும் விருதை அறிஞர் பேரவை சூட்டி மகிழ்ந்தது.
அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில், 1935ஆம் ஆண்டு தமிழ் ஆராய்ச்சித் துறை என ஒரு தனிப் பகுதி தோற்றுவிக்கப்பட்டது . இத்துறையில் முதன்மை ஆராய்ச்சியாளராக, மகாவித்துவான் ஐயங்கார் அவர்களை அழைத்தனர். தம்முடைய 65ஆம் வயதில் இப்பதவியை ஏற்று 1941 வரை ஆறு ஆண்டுகள் இங்கே பெருந்தொண்டாற்றினார். ஆராய்ச்சித் துறைப் பணிகளோடு, முதுகலை மாணவர்களுக்குக் கற்பித்தும் வந்தார். ஐயங்கார் அவர்களின் பெரும் புலமையும், வாக்கு வன்மையும், போதனா முறையும் மாணவர்களைப் பெரிதும் ஈர்த்தன. மாணவர்கள் இவரிடம் பாடம் கேட்டலைப் பெரும் பேறாகக் கருதினர்.
‘பாரிகாதை’ என்பது இவர் ஆக்கிய தமிழ்க் காவியம். இக்காவியம், அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில், இராசா சர் அண்ணாமலைச் செட்டியார் அவர்களால் அரங்கேற்றம் செய்விக்கப் பெற்றது. இதுவே, அப்பல்கலைக் கழகத்தின் முதல் தமிழ் வெளியீடாக 1937-ல் வெளியிடப் பெற்றது. அடுத்து, இவர் எழுதிய 'தமிழ் வரலாறு’ இரண்டாவது வெளியீடாக 1941-ல் வெளிவந்தது. அண்ணாமலைப் பல்கலைக் கழக முதுகலை மாணவர்க்குக் குறுந்தொகையைப் பாடம் சொன்ன போது, நல்ல பல பாடங்களும், புதிய பொருள்களும் இவர்கள் கண்டார்கள். தாம் கண்ட புது விளக்கங்கள் அமையக் குறுந்தொகை உரை நூலை இவர் ஆக்கினார். இதில் 112 பாடல்களை, உரையுடன் பின்னாளில், அப்பல்கலைக் கழகம் வெளியிட்டது. எஞ்சிய பகுதிகள் வெளி வராமல் போனது தமிழுக்கு ஒரு பேரிழப்பேயாகும். பத்துப் பாட்டுள், பெரும்பாணாற்றுப் படை, பட்டினப் பாலை என்னும் இரு பெரும் பாடல்களுக்கு ஆராய்ச்சியுரை, எழுதியுள்ளார். தித்தன், கோசர் பற்றி இவர் எழுதிய ஆய்வுரைகளும், தனி நூலாக வந்துள்ளன. இவையெல்லாம், அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் பணியாற்றிய போது, படைக்கப்பட்டனவாகும்.
1911-ல் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்திலிருந்து ஓய்வு பெற்ற பின், மகாவித்துவான் அவர்கள், இராமநாதபுரத்தில் உள்ள தம் இல்லத்தில் வாழ்ந்து வந்தார்கள். இவர் தம் அருமைப் புதல்வராகிய, வித்துவான் இராமாநுஜ அய்யங்கார், தந்தையாரின் பெருமைகளை நன்கு அறிந்தவராதலின், தந்தைக்குச் செய்ய வேண்டிய கடமைகளைச் சரிவரச் செய்து வரலானார். கண் பார்வைக் குறைவாலும், உடல் தளர்வாலும் அதன் பின், மகாவித்துவான் அவர்கள் வெளியூர்களுக்குச் செல்வதை நிறுத்தி விட்டார். தம்மை அடுத்து வந்து, கேட்டவர்களின் ஐயங்களைப் போக்கித் தமிழ் விருந்தினை அளித்துக் கொண்டிருந்தார். இடையிடையே சேதுபதிகளைக் கண்டு, அளவளாவியும் வரலாயினர்.
இவ்வாறாகத் தம் ஆயுட்காலம் முழுமையும் தமிழைக் கற்றும், கற்பித்தும் பெருந்தொண்டாற்றியவர் இவர். என்றும் நிலைத்து வாழும் பாடல் நூல்களையும், உரைநடை நூல்களையும் ஆக்கியளித்துப் பெரும் புகழை நிலை நாட்டியவர். இத்தகு பெருமை படைத்த மகா வித்துவான் அவர்களின் மறைவு விய ஆண்டு, ஆனி மாதம், 2ஆம் நாள் வியாழக் கிழமையன்று (11-7-1946 ) நிகழ்ந்தது. அப்பொழுது, அவர்களுடன் பழகிய பேராசிரியர்களும், கவிஞர்களும், பிறரும் அவர்களுடைய மறைவு குறித்து இரங்கி எழுதிய உரைகளும், பாடல்களும் பலவாகும். மகா வித்துவான் அவர்கள் முதல் ஆசிரியராய் விளங்கி, வெளியிட்ட செந்தமிழ்ப் பத்திரிகையின் அந்த ஆண்டு ஆனி மாத இதழை, மகா வித்துவான் அவர்களின் நினைவு இதழாக வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.
சிறந்த நூலாசிரியர், உரையாசிரியர், போதகாசிரியர், பத்திராசிரியர், பதிப்பாசிரியர், ஆராய்ச்சியாளர், சொற்பொழிவாளர், கவிஞர், மொழி பெயர்ப்பாளர், சமய நூலறிஞர், மொழி நூலறிஞர் என்று இத்திறத்தாருள் எல்லாம் முன் எண்ணத் தக்கவராய் விளங்கியவர் மகாவித்துவான் அவர்களாவர். தமிழ் உலகில் பெரும்பணி புரிந்த பேராசிரியர்களுள் இவர் தனியிடம் பெற்றுத் திகழ்பவராவர். ‘தோன்றிற் புகழொடு தோன்றுக’ என்னும் வள்ளுவர் வாக்கிற்கு இலக்கியமாக இலங்குபவர் மகாவித்துவான் இராகவையங்கார் அவர்கள். இவர்கள் புகழ் தமிழுள்ள வரை நிலைத்து நிற்கும்.
படைப்புகள்
[தொகு]பதிப்பு நூல்கள் (15)
(அ) சங்க நூல்கள் (4) | ||
| அகநானூறு | 1901, 1921 |
குறுந்தொகை விளக்கம் | 1946 | |
பெரும்பாணாற்றுப்படை | 1949 | |
பட்டினப்பாலை | 1951 | |
(ஆ) பதினெண்கீழ்க் கணக்கு நூல்கள் (4) | ||
இனியவை நாற்பது | பழையவுரையுடன் | |
ஐந்திணை ஐம்பது | பழையவுரையுடன் | |
திணைமாலை நூற்றைம்பது | பழையவுரையுடன் | |
நான்மணிக்கடிகை | பழையவுரையுடன் | |
(இ) இலக்கண நூல்கள் (3) | ||
நேமிநாதம் மூலமும் உரையும் | 1903 | |
பன்னிரு பாட்டியல் | ||
தொல்காப்பியம் : செய்யுளியல் நச்சினார்க்கினியருரை |
1917 | |
(ஈ) பிற நூல்கள் (4) | ||
கனா நூல் | ||
திருநூற்றந்தாதி | ||
புலவராற்றுப்படை | ||
முத்தொள்ளாயிரச் செய்யுட்கள் | ||
ஆசிரியர் இயற்றிய நூல்கள் (22) | ||
(அ) செய்யுள் நூல்கள் (6) | ||
புவி எழுபது | 1927 | |
தொழிற் சிறப்பு | 1932 | |
திருவடிமாலை | 1933 | |
நன்றியில் திரு | ||
பாரி காதை | 1937 | |
இராசராச சேதுபதி ஒருதுறைக் கோவை | 1933 | |
(ஆ) உரைநடை நூல்கள் (7) | ||
சேதுநாடும் தமிழும் | 1924 | |
வஞ்சி மாநகர் | (1918) 1932 | |
நல்லிசைப் புலமை மெல்லியலார்கள் | ||
அண்டகோள மெய்ப்பொருள் | ||
தமிழ் வரலாறு | 1941 | |
தித்தன் | 1949 | |
கோசர் | 1951 | |
(இ) மொழி பெயர்ப்பு (1) | ||
அபிஜ்ஞான சாகுந்தலம் | 1938 | |
(ஈ} (அச்சிடப்படாத நூல்கள் (8) | ||
பகவத்கீதைத் தாழிசை | ||
பாரத நீதி வெண்பா | ||
காவல் தலைமை | ||
கடவுள் மாலை | ||
திருப்புல்லையமகவந்தாதி-உரையுடன் | ||
திருவேங்கட மாயோன் மாலை | ||
ஆத்தி சூடி உரை | ||
பல்லட சதகம் |
நன்றி : இராசராச சேதுபதி ஒரு துறைக் கோவை
மகா வித்துவான் ரா.ராகவையங்கார்